பயிரிடுங்கள் எனக் கூறி எமது அரசாங்கம் அவசரகால சட்டத்தை விதிக்கப் போவதில்லை. இந்த பெரும் போகத்தில் பயிரிடுவதற்காக அனைவரும் ஒன்றிணையுங்கள். -பிரதமர் தினேஷ் குணவர்தன

பயிர்செய்வதற்காக அவசரகால சட்டத்தை நடைமுறைப்படுத்தி அரசாங்கம் மக்களுக்கு அழுத்தம் கொடுக்காது என்றும் நெருக்கடியிலிருந்து மீள்வதற்காக அனைவரும் ஒன்றிணைந்து பெரும்போகத்தில் பயிர்ச்செய்கையை மேற்கொள்ள வேண்டுமென்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன அவர்கள் தெரிவித்தார்.

இலங்கை ஹதபிம அதிகார சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட உணவுப் பாதுகாப்பு, போஷாக்கு மற்றும் பேண்தகு விவசாயத்திற்காக மக்களை வலுவூட்டும் நிகழ்ச்சித்திட்டம் 2022.11.18 ஆம் திகதி கொட்டாவ மாகும்புர பிரதேசத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் அவர்கள் இதனை தெரிவித்தார்.

பொருளாதாரத்திற்கு நன்மை பயக்கும் பேண்தகு வீட்டுத் தோட்டம் என்ற தலைப்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ், பேண்தகு வீட்டுத் தோட்ட செய்கையை ஊக்குவிக்கும் வகையில் விவசாய உற்பத்திப் பொருட்கள் விநியோகம் மற்றும் பயிற்சி நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர் அவர்கள்,

இந்த வீட்டுத் தோட்டத் திட்டத்தை ஒழுங்கமைத்து முன்னெடுத்துச் செல்ல அனைவரும் செயற்பட வேண்டும். அதற்காக மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரச உத்தியோகத்தர்களுக்குத் தேவையான ஒரு நிகழ்ச்சித்திட்டத்தை அரசாங்கம் முன்வைத்துள்ளது. அதற்காக ஐந்து அரச அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

எமது பிள்ளைகளுக்காக இந்த நடவடிக்கையை நாம் முன்னெடுத்துச் செல்ல ஒத்துழைப்புடன் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். இந்த பூமியில் நீங்கள் எதை நட்டினாலும் அது 60 நாட்களில் 70 நாட்களில் பலன் தரும்.

வருமானம் ஈட்ட முடியுமான திட்டங்களே இவை. இது ஒரு எளிமையான திட்டம் பாரியளவிலான பெரு நிறுவனத் திட்டங்கள் அல்ல.

அனைத்து வெளிநாட்டு வெளிநாட்டு தூதுவர்களும் இலங்கை பற்றி நம்பிக்கையுடன் பேசுகிறார்கள். இலங்கை கொவிட் தொற்றிலிருந்து முன்மாதிரியான முறையில் மீண்டுள்ள நாடு. தற்போதைய இந்த நெருக்கடியை வெற்றிகொள்ள நாடு முழுவதும் பல்வேறு திட்டங்கள் செயற்படுத்தப்பட்டு வருகின்றன. இதற்கு நாட்டு மக்கள் காட்டும் ஆர்வத்தை தூதுவர்கள் பாராட்டுகிறார்கள். உணவுப் பாதுகாப்பு என்பதை எமது நாட்டின் பொருளாதார மறுமலர்ச்சியின் ஒரு பகுதியாக குறிப்பிட முடியும். இந்தப் பிரச்சினையைத் தீர்க்க எமது பகுதிக்கு உதவியமைக்காக நான் ஹதபிம அதிகாரசபைக்கு நன்றி தெரிவிக்கிறேன்.

மக்கள் வாக்களித்து பாராளுமன்றத்திற்கு அனுப்பிய பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் நான் எந்த பதவியில் இருந்தாலும் மக்களுடன் இருந்து எனது கடமையையும் பொறுப்பையும் நிறைவேற்றுவேன்.

இளைஞர்களும் யுவதிகளும் சில புதிய துறைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த உணவு உற்பத்தித் திட்டங்களில் ஆர்வம் காட்டும் அனைவருக்கும் இந்தத் திட்டம் வெற்றியடையத் தேவையான அனைத்து உதவிகளையும் அரசு வழங்கும்.

இதற்காக இளம் சகோதர சகோதரிகளுக்கு நான் அழைப்பு விடுக்கிறேன். உங்களுக்காக அரசாங்கம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும். கிராமப் பாடசாலைகளில் கல்வி கற்கும் எம் பிள்ளைகள் உணவில் தன்னிறைவு பெற வேண்டும். கிராமத்தில் உற்பத்தி செய்யப்படுபவைகளில் இருந்து பாடசாலைக்கு ஒரு ஒரு வேளை உணவு வழங்க முடியுமான வகையில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.

அன்றைய காலகட்டத்தில், ஒவ்வொரு தோட்டத்திலும் ஒரு பண்ணை இருக்க வேண்டும் என்று பிரித்தானிய ஆட்சியாளர்களால் உத்தரவிடப்பட்டது. மேலும் கால்நடை உணவு மற்றும் பால் உற்பத்திக்கான சட்டங்களை கொண்டு வந்தனர். அந்த சட்டங்கள் இன்னும் இரத்து செய்யப்படவில்லை. நடைமுறைப்படுத்தப்படாத பல பழைய சட்டங்கள் உள்ளதாக வரவு செலவுத் திட்ட உரையில் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார். எனவே, சட்டங்களை நாம் திருத்துவது அவசியம். அவசரகாலச் சட்டத்தை விதித்து அவசரச் சட்டத்தின் கீழ் விவசாயம் செய்யுங்கள் என்று எங்கள் அரசு கேட்கப் போவதில்லை. இந்தப் பெரும் போகத்தில் விவசாயம் செய்ய அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.

நாம் கோடிக்கணக்கான ரூபாய்களை நிர்மாணப் பணிகளுக்கு செலவிடும் நாடு. அந்த நிர்மாணங்களில் இருந்து உரிய பயனைப் பெறுகிறோமா என்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இன்று, இந்த நெருக்கடியால், அனைத்து நிர்மாணப் பணிகளையும் நிறுத்த வேண்டி ஏற்பப்பட்டுள்ளது.

பொதுப் போக்குவரத்து அபிவிருத்தியின் கீழ் களனிவெளி புகையிரத பாதையை அதிகபட்சமாக பயன்படுத்தக்கூடிய வகையில் அபிவிருத்தி செய்ய எதிர்பார்க்கின்றோம். இதன் ஊடாக எரிபொருளை சேமிக்க முடியும். மக்களுக்கு நேரம் மீதமாகும். நாம் அணைத்தையும் சேமிக்கக்கூடிய காலம் இது. சேமித்தே ஆக வேண்டும்.

இலங்கை ஹதபிம அதிகார சபையின் தலைவர் சரத் சந்திரசிறி விதான, கொழும்பு மாவட்ட செயலாளர் பிரதீப் யசரத்ன, மஹரகம பிரதேச செயலாளர் தில்ருக்ஷி வல்பொல ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.