சீனா-இலங்கை பொருளாதார, முதலீட்டு மற்றும் கலாசார உறவுகளை மேம்படுத்த நடவடிக்கை

பிரதமர் தினேஷ் குணவர்தனவிற்கும் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கின் விசேட பிரதிநிதி, அரச அவை உறுப்பினர் ஷென் யிகினுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (20.11.2023) அலரி மாளிகையில் இடம்பெற்றது.

இலங்கைக்கு சீனா வழங்கிவரும் தொடர்ச்சியான ஆதரவு மிகவும் பாராட்டத்தக்கது என்றும், சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகவும் தெரிவித்த பிரதமர், அண்மைய கடன் நெருக்கடிக்குப் பின்னர் பொருளாதாரத்தை இயல்பு நிலைக்கு கொண்டுவருவதற்காக இலங்கைக்கு வழங்கிய உதவிகளுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறினார்.

நேரடி தனியார் முதலீடு, விவசாயத் துறையில் முதலீடுகள் மற்றும் ஏற்றுமதிகள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, தகவல் தொழில்நுட்பம், கல்வி போன்ற துறைகளில் முதலீடு, தற்போதுள்ள பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு நீண்டகால தீர்வுகளை வழங்குவதற்காக உட்கட்டமைப்பு அபிவிருத்திக்காக சீனாவின் உதவியை இலங்கை வரவேற்பதாகவும் பிரதமர் குறிப்பிட்டார் .

இலங்கைக்கு மாத்திரமன்றி ஏனைய கடன் வழங்கும் நாடுகளுக்கும் சர்வதேச நிறுவனங்களுக்கும் சீனா வழங்கிவரும் ஆதரவு இலங்கையின் கடன் மறுசீரமைப்பு செயற்பாட்டிற்கு ஆதரவளிப்பதற்கான நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதாகவும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

அகில சீன பெண்கள் சம்மேளனத்தின் தலைவியாகவும் செயற்படும் விசேட பிரதிநிதி திருமதி ஷென் யிக்கிங், சீனாவின் நெருங்கிய நண்பராக இலங்கை கருதப்படுவதாகவும், புதிய திட்டங்களுக்கு ஒத்துழைத்து முதலீடு செய்யவும், கொழும்பு துறைமுக நகரம், ஹம்பாந்தோட்டை துறைமுகம், வறுமை ஒழிப்பு திட்டங்கள், கல்வி மற்றும் விவசாயம் ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்த எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

சிரமங்களை வெற்றிகொள்வதற்காக இலங்கை அடைந்துள்ள முன்னேற்றத்தைக் கண்டு சீனா மகிழ்ச்சி அடைவதாக குறிப்பிட்ட சீன அரச சபை உறுப்பினர், பொருளாதார சவால்களை வெற்றிகொள்வதற்கான முயற்சிகளுக்கு சீனா தொடர்ச்சியான உதவிகளை வழங்கும் என்று உறுதியளித்தார்.

சர்வதேச மாநாடுகளில் இலங்கையின் இறைமைக்கு ஆதரவளிக்கும் சீனாவின் நிலைப்பாடு குறித்து பிரதமர் இதன்போது விசேடமாக சுட்டிக்காட்டினார். இதற்கு பதிலளித்த திருமதி ஷென் யீகின், இலங்கையின் சுதந்திரம் , இறைமை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்காக சீனா எப்போதும் ஆதரவாக இருக்கும் எனவும் தெரிவித்தார்.

இந்த சந்திப்பில் நீண்டகால கலாசார உறவுகளை மேலும் வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய சீன தூதுவர் Qi Zhenhong, மத உறவுகளின் நீடித்த அடையாளமாக இலங்கையில் மிகப்பெரிய புத்தர் சிலையை விரைவில் நிர்மாணிக்க சீனா உத்தேசித்துள்ளதாக குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் சீன சிரேஷ்ட அதிகாரிகள், இராஜாங்க அமைச்சர்களான ஜனக வக்கும்புர, அசோக பிரியந்த, கீதா குமாரசிங்க, பாராளுமன்ற உறுப்பினர்களான சுதர்சன தெனிபிட்டிய, யதாமினி குணவர்தன, ராஜிகா விக்கிரமசிங்க, முதிதா டி சொய்சா, மஞ்சுளா திஸாநாயக்க, கோகிலா குணவர்தன மற்றும் பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க ஆகியோர் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு