கல்வி மீதான நம்பிக்கை கட்டியெழுப்பப்படும்
முன்பள்ளி முதல் உயர்கல்வி வரை பிள்ளைகளை பாதுகாப்பதற்கான கொள்கைகள் வகுக்கப்படும்
சிரேஷ்ட பிரஜைகள் சுதந்திரமாகவும் மகிழ்ச்சியாகவும் வாழக்கூடிய சூழல் உருவாக்கப்படும்
எமது பிரச்சினைகளை தனித்தனியாக தீர்க்க முயற்சிப்பதற்கு பதிலாக, அதைத் தாண்டிச் சென்று இந்த சமூக நெருக்கடியை சரியாகக் கண்டறிந்து நாம் கூட்டாகத் தலையீடு செய்ய வேண்டும்.
சிறந்தவை அனைத்து பிள்ளைகளுக்கும் என்ற எண்ணக்கருவின் அடிப்படையில் தேசத்தின் அனைத்து பிள்ளைகளுக்கும் சிறந்ததை வழங்குவதே தற்போதைய அரசாங்கத்தின் நோக்கமாகும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
பத்தரமுல்லை, சுஹுருபாய கேட்போர் கூடத்தில் 2024.10.01 அன்று நடைபெற்ற உலக சிறுவர் மற்றும் முதியோர் தின தேசிய நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டார்.
இந்த ஆண்டு உலக சிறுவர் மற்றும் முதியோர் தினத்தின் தொனிப்பொருள் ’முதியோர் மற்றும் சிறுவர் தலைமுறையை அன்பினால் அரவணைப்போம்’ என்பதாகும்.
தற்போதைய அரசாங்கம் கல்விக்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும், முன்பள்ளி முதல் உயர்தரம் வரையிலான பிள்ளைகளின் கல்வியைப் பாதுகாப்பதற்கான கொள்கைகளை உருவாக்கி வருவதாகவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த பிரதமர்,
"இன்று நாம் நமது சமூகத்தில் மிக முக்கியமான இரண்டு தரப்புகளைக் கொண்டாடுகிறோம், சிறுவர்கள் நமது எதிர்காலம், சிரேஷ்ட பிரஜைகள் என்பவர்கள் எங்கள் எதிர்காலத்தை இங்கே கொண்டு வருவதற்கு, நிகழ்காலத்தை உருவாக்கித் தந்த தலைமுறையினர் ஆவர். எனவே அந்த இரு தரப்பினரையும் நாம் கெளரவிக்கும் மற்றும் பாராட்டும் நாள் இன்றாகும். எந்த ஒரு நாட்டை எடுத்துக்கொண்டாலும், அந்த நாடு எவ்வளவு நாகரீகமடைந்துள்ளது, எந்தளவு வளர்ச்சியடைந்துள்ளது என்பதைக் கண்டறிய வேண்டுமானால், அந்தச் சமூகத்தில் சிறியவர்கள், பெரியவர்கள், சிரேஷ்ட பிரஜைகள் எந்த அளவுக்கு சிறப்பாக நடத்தப்படுகிறார்கள் என்பது மிக முக்கியமான அளவுகோலாகும்.
குறிப்பாக சமூகத்தில் பாதுகாப்பு, அரவணைப்பு மற்றும் அன்புக்கு தகுதியான சமூகங்களாக, ஒரு சமூகத்தில் சிறுவர்கள் மற்றும் நமது சிரேஷ்ட பிரஜைகள் நடத்தப்படும் விதம் மிகவும் முக்கியமானது மற்றும் அவர்கள் நடத்தப்படும் விதத்தில் அந்த நாடு எவ்வளவு வளர்ச்சியடைந்த, எவ்வளவு மனிதாபிமான மற்றும் எவ்வளவு நாகரீகமான நாடு என்பதைப் பற்றிய கருத்தைப் பெறலாம். அப்படிப் பார்க்கும்போது, ஒரு சமூகமாக ஒரு நாடாக நாம் செய்ய இன்னும் நிறைய வேலைகள் உள்ளன என்பதை நாம் அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். குறிப்பாக கடந்த சில வருடங்களில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, அரசியல் நெருக்கடி இவற்றையெல்லாம் பார்க்கும் போது எமது பிள்ளைகளே அவற்றுக்கு பிரதானமாக பலியாகியுள்ளனர். இன்றைய போட்டி நிறைந்த அழுத்தங்கள் நிறைந்த சமூகத்தில் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் அவர்கள் தான். சமூகத்தில் வீழ்ச்சியடைந்துள்ள சமூக உறவுகள், குடும்ப உறவுகள் மற்றும் ஒருவர் மற்றவர் மீதுள்ள நம்பிக்கையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி மற்றும் நிறுவனங்கள் மீதான நம்பிக்கையீனம் காரணமாக சமூக நெருக்கடிகள் எழுந்துள்ளன. தங்களின் அரசியல் தலைவர்கள் மீதான நம்பிக்கையீனம் காரணமாக அவர்களுக்கு சேவை செய்ய வேண்டிய அரச நிறுவனங்கள், அரச சாரா நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் மீதான நம்பகத்தன்மையும் பலவீனமடைந்துள்ளது. ஒரு சமூகம் முன்னேற வேண்டுமானால், நாம் ஒருவருக்கொருவர் வைத்திருக்கும் நம்பிக்கை மிக முக்கியமானதாகும். நிறுவனங்கள் மீதான நம்பிக்கையும், அரசியல் தலைமை மீதான நம்பிக்கையும் பலவீனமடையும் போது, அந்த நம்பிக்கை இழக்கப்படுகிறது. அப்போது பெரிய சமூக நெருக்கடிகள் உருவாகும் என்பது மிகத் தெளிவானதாகும். நாம் தீர்க்க வேண்டிய மற்றும் கரிசனை கொள்ள வேண்டிய முக்கிய விடயம் இந்த சமூக நெருக்கடியாகும். சமூகப் பிரச்சனைகளைப் பற்றி நாம் உணர்ந்தால், இந்தப் பிரச்சனைகளைத் தனியாக எதிர்கொள்வதற்குப் பதிலாக, கூட்டாக இந்தப் பிரச்சனைகளுக்கான தீர்வுகளை கண்டடைய முடியும். அந்த மனப்பான்மை இருந்தால், நாம் ஒரு நாடாக முன்னேற முடியும்.
ஆனால் இன்று நம் நாடு அப்படிப்பட்ட நிலையில் இல்லை. நாம் அனைவரும் தனியாக இருக்கிறோம். ஒவ்வொருவரும் தாங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தனியாகத் தீர்வு காண முயல்கின்றனர். நாம் தனிப்பட்ட முறையில் நம்மீது அதிக அழுத்தத்தை கொடுத்து அதற்காக தனியாக போராடும் சமூகத்தில் வாழ்கிறோம். இந்த நிலை மாற வேண்டும் என்று நாம் நினைக்கிறோம். ஒரு சமூகத்தில் முன்னேற்றத்தையும் நல்வாழ்வையும் குடிமக்களின் மகிழ்ச்சியையும் உருவாக்க வேண்டுமானால், அந்த சமூக அமைப்பு ஒரு வலுவான சமூக அமைப்பாக இருக்க வேண்டும். சமூக அமைப்பில் உள்ள அந்த சமூக நிறுவனங்கள் குடும்பமாக இருக்கலாம், கல்விச் சேவைகளாக இருக்கலாம், சுகாதாரமாக இருக்கலாம். அது சமூகப் பாதுகாப்பாக இருக்கலாம். சட்டம் ஒழுங்காக இருக்கலாம், இவை அனைத்தும் பலப்படுத்தப்பட வேண்டும். இவையனைத்தும் மக்களுக்கு சேவை செய்யும் நிறுவனங்கள், சேவைகளைப் பெற முடியும் என்ற மனப்பான்மை சமூகத்தில் நம்பகத்தன்மையுடன் இருக்க வேண்டும். ஆனால் இன்று நாம் பார்ப்பது போல் நம் சமூகத்தில் அப்படி ஒரு நிலை இல்லை.
அவற்றுக்கு பொறுப்புக்கூறவேண்டியது நாம் தனி நபர்களாக அல்ல. அல்லது ஒரு அதிகாரியின் பலவீனத்தால் அல்ல. ஒரு ஆசிரியரின் பலவீனமும் இல்லை. தாய் தந்தையின் பிரச்சினையும் அல்ல. இது ஒட்டுமொத்த சமூகப் பிரச்சினை. எனவே, இந்த நேரத்தில் நமக்குத் தேவையான முக்கிய விடயம் என்னவென்றால், நமது பிரச்சினைகளைத் தனித்தனியாகத் தீர்க்க முயற்சிப்பதைத் தாண்டி, தற்போதுள்ள சமூக நெருக்கடியைப் புரிந்துகொள்வதும், அந்த சமூக நெருக்கடியில் நாம் எவ்வாறு கூட்டாகத் தலையிடுவது என்பதும் ஆகும். அதற்கு நாம் எவ்வாறு ஒழுங்கமைக்கப்பட வேண்டும் என்று திட்டமிட வேண்டும். இந்த நேரத்தில் அந்த கலந்துரையாடல் இந்த சமுதாயத்திற்கு இன்றியமையாததாகும். அந்தப் பிரச்சினைகளைத் தனித்தனியாகத் தீர்ப்பதற்குப் பதிலாக, சமூக அமைப்பு, பொருளாதார மற்றும் அரசியல் அமைப்புகளை வலுப்படுத்துவது, நமது சமூக நெருக்கடிகளுக்குத் தேவையான தீர்வுகளைக் காணத் தேவையான அமைப்புகளை வலுப்படுத்துவது முதன்மையான தேவையாகும்.
இந்த ஜனாதிபதித் தேர்தலில் எமக்குக் கிடைத்த வெற்றியின் மூலம் எமது அரசாங்கம் மிகத் தெளிவான செய்தியை இந்த நாட்டுக்கும் இந்த நாட்டு மக்களுக்கும் உலக மக்களுக்கும் எடுத்துரைத்துள்ளது. அந்த மாற்றம் தேவை. அந்த மாற்றம் என்பது வெறுமனே ஆட்களை மாற்றுவதன்று. அதற்கும் அப்பால் அமைப்பை மாற்றும் நமது சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய கட்டமைப்பு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே இந்த நேரத்தில் நம் நாட்டு மக்களின் எதிர்பார்ப்பாகும். குறுகிய கால வெற்றிகளுக்கு அப்பால், தற்காலிக மேலோட்டமான பிரச்சனைகளுக்கு அப்பால் செல்லும், ஆரோக்கியமான, கனிவான மற்றும் ஒற்றுமையை அடிப்படையாகக் கொண்ட சமுதாயத்தை உருவாக்க முழு சமூகமும் அந்த மாற்றத்தை எதிர்பார்க்கிறது என்பதை நாங்கள் அறிவோம். எனவே, ஒரு அரசாங்கம் என்ற வகையில், மேலோட்டமான பிரச்சினைகளில் மட்டும் எங்களது தலையீடு இல்லை. அதனைப் பார்க்கிலும் ஆழமாக, இந்த சமூகத்தில் நிலவும் சமூக பொருளாதார அரசியல் நெருக்கடிகளுக்கு குறுகிய கால, நடுத்தர கால மற்றும் நீண்ட கால தீர்வுகளை மிகவும் திட்டமிட்ட முறையில் நடைமுறைப்படுத்த நாங்கள் எதிர்பார்க்கிறோம். இதற்காக எல்லா பிள்ளைகளுக்கும் சிறந்தவை கிடைக்க வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். தெரிவுசெய்யப்பட்ட ஒருசில பிள்ளைகளுக்கு மட்டுமல்ல. அனைத்து பிள்ளைகளும் இந்த நாட்டில் மகிழ்ச்சியாக வாழவும், இந்த நாட்டில் நம்பிக்கையுடன் வாழவும், அவர்களின் அபிலாஷைகளை நனவாக்க முடியும் என்று நம்பக்கூடிய சமூகத்தை உருவாக்க வேண்டும். இதற்காத்தான் நாங்கள் தலையிட்டு அதற்கான கொள்கைகளை நடைமுறைப்படுத்த முயற்சிக்கிறோம்.
அதுபோலவே இன்று எமது சிரேஷ்ட பிரஜைகள் பல நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றனர். குறிப்பாக அவர்களின் பொருளாதார சுதந்திரத்தை இழந்ததன் மூலம், அவர்கள் தங்கிவாழ்பவர்களாக இருக்கிறார்கள். இது ஏற்றுக்கொள்ளக்கூடிய நிலை அல்ல. சிரேஷ்ட பிரஜைகள் சுதந்திரமான வாழ்க்கையை நடத்தவும், மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழவும், அவர்கள் தங்கள் கண்ணியத்தைப் பாதுகாக்கவும், அவர்கள் மீது மரியாதை செலுத்தவும் கூடிய ஒரு சமூகத்தை உருவாக்க முயற்சிக்கிறோம். குறிப்பாக இப் பிள்ளைகளைப் பற்றிப் பேசும் போது, இக்காலத்தில் கல்வியில் பல நெருக்கடிகளை நாம் சந்திக்க வேண்டியுள்ளது என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். சமூகத்தின் மீதான நம்பிக்கை வீழ்ச்சியடையும் போது, கல்வியின் மீதான நம்பிக்கையும் வீழ்ச்சியடைந்துள்ளது. இது மிகவும் ஆபத்தான நிலை. ஒரு சமூகத்தில் கல்வியின் மீது நம்பிக்கை இல்லாதபோது, பாடசாலை கல்வி முறையின் மீது சந்தேகம் ஏற்படும்போது, ஒரு குடும்பம் பாடசாலை கல்வியை ஒரு சுமையாக உணரும்போது, ஒரு பிள்ளை கல்வியை ஒரு சுமையாக உணரும்போது, அது ஒரு பாரதூரமான நிலை. அதனால்தான் கல்வியில் விசேட கவனம் செலுத்த எங்கள் அரசு முடிவு செய்துள்ளது. முன்பள்ளி முதல் உயர்கல்வி வரை ஒரு பிள்ளையைப் பாதுகாக்க, கல்வி முறையில் அவர்களுக்கான பாதுகாப்பு கிடைக்க அனைத்து பிள்ளைகளும் நியாயமாக நடத்தப்படுகின்ற மேலும் அனைத்து பிள்ளைகளும் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த முடியுமான, தங்களின் சொந்த திறமைகளை அடையாளம் கண்டு, தமது சொந்த வாழ்க்கையை கட்டியெழுப்பக்கூடிய குடிமக்களை உருவாக்கும் கல்வி முறை நமக்குத் தேவை. எனவே, கல்வி முறையிலும், கல்வி நிறுவனங்களிலும், சுகாதாரம், சட்டம், ஒழுங்கு என அனைத்துத் துறைகளிலும் இந்த மாற்றங்கள் படிப்படியாக சாத்தியமாகும் என்று நாங்கள் நினைக்கிறோம். அந்த நம்பிக்கையுடனேயே இன்றைய நாட்களில் நாங்கள் பணியாற்றி வருகிறோம். ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை இந்த நாட்களில் ஒரு சர்ச்சைக்குரிய விடயமாக மாறியுள்ளது. நாங்கள் அதை நன்றாக புரிந்துகொள்கிறோம். அந்த நெருக்கடி இந்த சமூகத்தில் உள்ள நெருக்கடியின் வெளிப்பாடு. தங்கள் பிள்ளைகளுக்குச் சிறந்த கல்வியை வழங்குவதற்கான வாய்ப்புகள் படிப்படியாக மறைந்து வருவதால், பெற்றோர்கள் இந்தப் போட்டித்தன்மையான கல்வி முறைக்குள் சிறைப்பட்டு, பெரும் அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளனர். ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் பெற்றோர்கள் ஏன் இவ்வளவு ஈடுபாடு கொண்டுள்ளனர் என்பதை நாம் புரிந்து கொள்ளலாம். நாம் அனைவரும் நம் குழந்தைக்கு சிறந்ததைப் பெற முயற்சிக்கிறோம். எனது குழந்தை சிறந்ததைப் பெறாதபோது, நாங்கள் மிகவும் கடினமான சூழ்நிலைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இது பெற்றோரின் தவறோ அல்லது அந்த பாடசாலையின் ஆசிரியர்களின் அதிபர்களின் பிரச்சினையோ அல்ல. ஏனெனில் நீண்ட காலமாக நடைமுறையில் உள்ள மிகவும் பலவீனமான கல்விக் கொள்கைகள், கல்வியில் இருந்து அரசு விலகியதால் உருவாகியுள்ள பிரச்சினை. எனவே ஒரே இரவில் அதை தீர்க்க முடியாது என்பதை நாம் அனைவரும் அறிவோம் என்று நினைக்கிறேன். ஆனால் இத்தருணத்தில் ஜனாதிபதியின் தலையீட்டின் ஊடாக இப்பிரச்சினைக்கு நியாயமான தீர்வாக சகல பிள்ளைகளுக்கும் உரிய சிறந்த தீர்வைப் பெற்றுக்கொடுக்க நாமும் செயற்பட்டு வருகின்றோம். அந்தப் பரீட்சை பற்றி நிபுணத்துவ ஆலோசனைகளைப் பெற்று, பிள்ளைகளின் நிலையைப் புரிந்துகொள்ளக்கூடிய நிபுணர்களிடம் பேசி பிள்ளைகள் எந்த அழுத்தத்தையும் உணராத வகையிலும், அனைத்து பிள்ளைகளும் நியாயமான பதிலைப் பெறும் வகையிலும் ஒரு தீர்வைக் கொண்டு வர நாங்கள் பணியாற்றி வருகிறோம். அதற்காக கல்வி அமைச்சு மற்றும் பரீட்சைகள் திணைக்களத்துடன் இணைந்து செயற்படுவதுடன், இவ்வாறான நிலைமைகள் மீண்டும் ஏற்படாத வகையில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் மிகவும் கவனமாக செயற்பட்டு வருகின்றோம். அதற்காக, பொலிஸாருடன் இந்த சம்பவம் பற்றி விசாரித்து, இதற்குக் காரணமானவர்களைத் தண்டிக்கவும், இனி இது போன்ற நிலைகள் ஏற்படாமல் இருக்க என்ன மாதிரியான தலையீடுகளைச் செய்ய வேண்டும் என்றும் ஆலோசித்து வருகிறோம். எங்கள் கருத்துப்படி, எந்தவொரு பிள்ளைக்கும் இதுபோன்ற பரீட்சை மூலம் அழுத்தம் கொடுக்கக்கூடாது. இவ்வாறு நிச்சயமற்ற தன்மையை உருவாக்கக்கூடாது. அதை ஏற்றுக்கொள்ள முடியாது. அதன் மூலம் பெற்றோருக்கு ஏற்படும் அநீதியையும் நாம் நன்றாக புரிந்து கொள்கிறோம். எனவேதான், அனைத்துக் பிள்ளைகளுக்கும் தீங்கு விளைவிக்காத, அவர்களுக்கு அதிக அழுத்தம் கொடுக்காத, அனைத்து பிள்ளைகளுக்கும் நீதி வழங்கும் சிறந்த தீர்வைக் காண நாம் அனைவரும் தலையிட்டு ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய தேவை மிகவும் தெளிவாக உள்ளது. அதற்கான பல நடவடிக்கைகளை நாங்கள் ஏற்கனவே எடுத்துள்ளோம். இது தொடர்பான மேலதிக தகவல்கள் கிடைக்கப்பெறும் வரை ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை புள்ளிகள் வழங்குவது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. அரசு என்ற முறையில் பிள்ளைகளுக்கு அநீதி ஏற்படாத வகையில், பிள்ளைகளின் மனநலம் மற்றும் குழந்தையின் நலன் ஆகியவற்றை முதன்மைப்படுத்தியே அனைத்து முடிவுகளையும் நாங்கள் எடுக்கிறோம். அதன் மூலம் எதிர்காலத்தில் தலையிட வேண்டிய மாற்றத்தையும் சீர்திருத்தத்தையும் குறிப்பாகக் கல்வித்துறையில் பிள்ளைகளின் நலன் முதன்மைப்படுத்தும் வகையில் மேற்கொள்ளக் கடமைப்பட்டுள்ளோம் என்று நினைக்கிறோம். எனவே நாம் இந்த மிக முக்கியமான தருணத்தில் இருக்கிறோம். எமது நாட்டில் நீண்டகாலமாக உருவாக்கப்பட்டு நீண்டகாலமாக கவனத்தை ஈர்க்காத பல பிரச்சினைகளை சரியாக இனங்கண்டு அவற்றிற்கு முறையான மற்றும் நிலையான தீர்வுகளை காணும் வாய்ப்பு எமக்கு கிடைத்துள்ளது. அனைத்து பிரச்சனைக்கும் தீர்வு இருக்கிறது. தீர்வுகள் இல்லாத பிரச்சனைகள் இல்லை. அந்தத் தீர்வைச் சரியான முறையில் கண்டறிவதும், அத்தீர்வுகளின் மூலம் ஏனைய தரப்பினர் அசௌகரியங்களுக்கு ஆளாகாத வகையில் அல்லது அநீதி இழைக்கப்படாத வகையில் தீர்வுகளைக் காண்பது எமது பொறுப்பாகவே நாம் பார்க்கின்றோம். எனவே, இந்த நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான நீண்டகால வேலைத்திட்டம் குறித்து அனைவரும் சிந்திக்கும் அதேவேளையில் நீண்ட காலமாக வீழ்ச்சியுற்றிருந்த சமூகத்தின் விளைவாக நாம் அன்றாடம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை பொறுமையுடன் எதிர்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன். குறிப்பாக பிள்ளைகளின் மனநலம் மற்றும் பிள்ளைகளின் தேவைகளைப் புரிந்துகொண்டு, பிள்ளைகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளில் நாம் அனைவரும் தலையிட வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். மீண்டும் ஒருமுறை உங்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த நிகழ்வை நீண்ட நாட்களாக ஏற்பாடு செய்து மிகுந்த ஆர்வத்துடன் ஏற்பாடு செய்து வரும் எமது செயலாளர் மற்றும் அமைச்சின் ஊழியர்களுக்கு நான் விசேடமாக நன்றி கூற விரும்புகின்றேன். எனது ஆலோசனைகளையும் பெற்றுக்கொண்டு, தேவையான மாற்றங்களைச் செய்து, அனைவருடனும் மிகவும் இணக்கமாக பணியாற்றி இந்த வேலையைச் செய்ய முடிந்துள்ளது. இனிவரும் கலங்களில் எங்களுக்கு நிறைய வேலைகள் உள்ளன என்று எனக்குத் தெரியும். அதற்கு உங்கள் அனைவரின் ஆதரவையும் எதிர்பார்க்கிறேன்.
எங்கள் சிரேஷ்ட பிரஜைகளுக்கும் நான் நன்றிகூற கடைமைப்பட்டுள்ளேன். நீங்கள் எங்களுக்கு ஒரு பெரிய பலம். இன்று எமது சமூகத்தை இவ்வாறாகப் பேணுவதற்கு உங்கள் பங்களிப்பை நாங்கள் நன்கு அறிவோம். எங்களால் உங்களுக்கு கிடைக்கவேண்டிய அதிகபட்ச பங்களிப்பு கிடைக்கவில்லை என்பதையும் நாங்கள் அறிவோம். ஆனால் அதை நாங்கள் மாற்றுவோம். நீங்கள் எங்களுக்கு ஒரு வளம் மற்றும் நாங்கள் உங்களிடமிருந்து கற்றுக்கொள்ள நிறைய விடயங்கள் உள்ளன. அவற்றிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும். சமுதாயத்திற்கு உங்களால் முடிந்ததை தொடர்ந்து செய்யக்கூடிய சூழலை உருவாக்க வேண்டும். நாங்கள் உங்களை அன்புடன் அரவணைக்க வேண்டும். அதற்கும் தலையிட வேண்டும் என்ற உறுதி எங்களிடம் உள்ளது. எனவே கலந்து கொண்ட அனைவருக்கும் மிக்க நன்றி. இந்த நாட்டை கட்டியெழுப்புவோம். இந்த நாட்டை நாம் அனைவரும் மகிழ்ச்சியுடன் வாழக்கூடிய நாடாக மாற்றுவோம். நன்றி.
சிறுவர் பகல்நேர பராமரிப்பு வசதிகள் குறித்த தேசிய கொள்கை அறிமுகம், "சிதுவிலி சித்தம்" சித்திரப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்குதல் மற்றும் "டிஜிட்டல் உலகில் பிள்ளையை பாதுகாப்போம்" குறும் காணொளிப் போட்டியில் வெற்றி பெற்ற 12 பேருக்கான பாராட்டு, முதியோர் இல்ல மதிப்பீட்டுத் திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட முதியோர் இல்லங்களுக்கான பாராட்டு மற்றும் ``வெடிஹிட்டி சுவசரண’ காப்புறுதித் திட்ட அறிமுகம் பிரதமரினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதன் போது சிறுவர் தின நினைவு முத்திரை மற்றும் முதல் நாள் கடித உரையும் இங்கு வெளியிடப்பட்டது.
இந்நிகழ்வில் பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, மகளிர், சிறுவர் மற்றும் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சின் செயலாளர் கே. மகேசன், புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள், தேசிய ஒருமைப்பாடு மற்றும் ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் ரஞ்சித் ஆரியரத்ன மற்றும் அரச அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.
பிரதமர் ஊடகப் பிரிவு