வறுமையற்ற ஆசியாவைக் கட்டியெழுப்ப அர்ப்பணிப்புடன் செயற்படுங்கள்... - ஆசிய நாடுகளிடம் பிரதமர் தினேஷ் குணவர்தன வேண்டுகோள்..

வருமானங்கள் நியாயமான முறையில் பகிரப்படும் வறுமையற்ற ஆசியாவைக் கட்டியெழுப்ப அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு ஆசிய நாடுகளை பிரதமர் தினேஷ் குணவர்தன கேட்டுக் கொண்டார்.

சீனாவின் ஹைனானில் இன்று (2024.03.28) நடைபெற்ற ஆசியாவுக்கான போவா (BOAO) மன்றத்தின், 2024 ஆண்டு மாநாட்டில் உரையாற்றிய பிரதமர், “சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் அவர்களின் திறமையான தலைமைத்துவத்தின் கீழ் மில்லியன் கணக்கான மக்களை வறுமையிலிருந்து உயர்ந்த வாழ்க்கைத் தரத்திற்கு உயர்த்துவதில் சீனாவின் அற்புதமான வெற்றியைப் பற்றி பாராட்டிப் பேசினார். வறுமைப் பிரச்சினையை எதிர்கொள்ளும் மற்ற நாடுகளுக்கு இந்த எண்ணக்கரு தொடர்ந்தும் சிறந்த வழியாகும் என்றும் பிரதமர் கூறினார்.

விவசாய வளர்ச்சி மற்றும் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்த புதிய முயற்சிகள் தேவை என்று பிரதமர் கூறினார், ஏனெனில் இது வறுமையை ஒழிப்பது மட்டுமல்லாமல் சமூக நல்லிணக்கத்தையும் அமைதியையும் உறுதி செய்கிறது. மீள்புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளங்களைப் பயன்படுத்துவது அவசியம் என்று பிரதமர் வலியுறுத்தினார்.

கொழும்பு துறைமுகம் மற்றும் ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் கொழும்பு துறைமுக நகர விஸ்தரிப்பு ஆகியவை குறித்து விளக்கமளித்த பிரதமர், இவை இலங்கையில் மாத்திரமன்றி பிராந்திய நாடுகளிலும் விரைவான முன்னேற்றத்தை உறுதிப்படுத்தும் முக்கிய நிதி மையமாக இருக்க முடியும் என சுட்டிக்காட்டினார்.

மாநாட்டில் தொடர்ந்தும் உரையாற்றிய பிரதமர்-

இலங்கையின் சார்பில், எதிர்காலத்தை எதிர்பார்ப்புகளோடு பார்த்திருக்கும் ஒரு சர்வதேச நிகழ்வை, ஒரு காலநிலை மாற்றத்தின் யதார்த்தத்தை அங்கீகரிக்கும் ஒரு சர்வதேச திசைவழியை இன்றைய தினம் பிரதிநித்துவம் செய்கிறது. மீள்புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் தேவைகளில் பங்கேற்பதற்கும், ஆசிய எல்லைகளுக்குள் ஒன்றிணைந்து செயல்படுவதற்கும், உலகெங்கிலும் உள்ள அனைத்து நாடுகளுடனும் இணைந்து பணியாற்றுவதற்கும் இதை ஒரு விசேட வாய்ப்பாக எடுத்துக்கொள்கிறோம்.

முதலாவதாக, சீனாவின் பொருளாதார வளர்ச்சிக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டதற்காகவும், வலுவான பொருளாதாரத்திற்கு அளப்பரிய பலத்தை அளித்ததற்காகவும் ஜனாதிபதி ஜி ஜின்பிங்கிற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். சீனாவின் பொருளாதார வளர்ச்சி உலகின் பொருளாதார வளர்ச்சியாகும். நாம் எதைச் சாதிக்க முடியும், எதைச் சாதித்துள்ளோம் என்ற யதார்த்தங்களிலிருந்தே புதிய வழிகள் உருவாகின்றன. மீள்புதுப்பிக்கத்தக்க சக்திவளம், காலநிலை மாற்றம் மற்றும் ஆசிய நாடுகளுக்கு முக்கியமான துறைகளான கடல் வளங்களை அடிப்படையாகக் கொண்ட நீலப் பொருளாதாரத்தில் ஏற்படும் ஏனைய மாற்றங்களைக் கருத்திற் கொண்டு, இவற்றைச் சாதித்து வெற்றிபெற நாம் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.

ஆசியா முழுவதிலும் உள்ள எமது சக தலைவர்களால் ஆரம்பிக்கப்பட்டு ஆதரவளிக்கப்பட்ட இந்த வேலைத்திட்டங்களில் இலங்கையிலிருந்து நாங்கள் பங்குபற்றுகின்றோம். ஒரு சிறந்த வாழ்க்கைத் தரத்தை அடைய நாம் அனைவரும் ஒன்றாக எடுத்து செயற்படுத்தக்கூடிய வெற்றிக் கதையின் ஒரு உதாரணத்தை நான் குறிப்பிட விரும்புகிறேன். மில்லியன் கணக்கான சீன மக்களை வறுமையில் இருந்து சிறந்த மற்றும் உயர்ந்த வாழ்க்கைத் தரத்தை நோக்கி கொண்டு வரும் சோதனை ஒரு வெற்றிக் கதை என்று அழைக்கப்பட்டாலும், நாம் அனைவரும் வறுமைப் பிரச்சினைகளை எதிர்கொள்கிறோம்.

உணவுப் பாதுகாப்பை அடைய எமது விவசாய உற்பத்தியை மேம்படுத்துவதற்கான சவால்களை நாம் அனைவரும் எதிர்கொண்டுள்ளோம். இன்று சீனாவில் உற்பத்தி செய்யப்படும் விதை நெல்லின் மூலம் உற்பத்தியை அதிகரிக்கவும், விவசாயிகளுக்கு அதிக வருமானத்தை வழங்கவும், எமது உணவுப் பாதுகாப்பு பிரச்சினைகளுக்கு வலுவான எதிர்காலத்தை உறுதி செய்யவும் முடிந்துள்ளது.

பல ஆண்டுகள், தசாப்தங்கள் மற்றும் நூற்றாண்டுகளாக உணவுப் பாதுகாப்பு, சிறந்த சூழல் பாதுகாப்பு மற்றும் அதை அடைவதற்கான அபிலாஷைகள் போன்ற சவால்களை மக்கள் எதிர்கொண்டிருப்பதால் இந்த இரண்டு கேள்விகளை நான் எழுப்புகிறேன்.

இன்று போவோ மாநாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றவர்கள் மீள்புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு ஈர்க்கப்பட்ட புதிய முதலீடுகளில் சுமார் 50% ஐ உற்பத்தி செய்யும் நாடுகள் என்பதை நாம் அனைவரும் அறிவோம். இது எதிர்காலத்திற்கான வாக்குறுதியாகும். சாத்தியமான எதிர்காலத்தை நம்பகமான அடிப்படையில் பகிர்ந்து கொள்ளும் பொறுப்பை முன்னெடுத்துச் செல்ல இணைந்த நாடுகளால் போவோ கூட்டமைப்பு உருவாக்கிய ஒரு பெரிய நம்பிக்கை இதுவாகும். இன்று முதல் இந்த செய்தியை தங்கள் பகுதிகளுக்கு கொண்டு செல்லும் அனைத்து பிரதிநிதிகளுக்கும் மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

வர்த்தகத் தடைகளை தகர்த்துதல், பல்வேறு வகையான சுற்றுலாத் துறைக்கான புதிய தேவைகள், மீள்புதுப்பிக்கத்தக்க சக்திவளத்திற்கான புதிய திட்டமிடல்கள் மற்றும் நிகழ்ச்சித்திட்டங்கள் ஆகியவை எமது கிரகத்தை மிகவும் பாதுகாப்பான மற்றும் நம்பகமான எதிர்காலத்திற்கு இட்டுச் செல்லும்.

மேற்கு மற்றும் கிழக்கு ஆபிரிக்காவிலிருந்து ஆசியாவின் கிழக்கே அனைத்து வர்த்தகப் போக்குவரத்திற்காகவும் இந்து சமுத்திரத்தின் கடல் வழிகளுக்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவதற்கு இலங்கையின் சார்பாக இந்தச் சில வார்த்தைகளின் மூலம் எமது ஆதரவை உறுதியளிக்கிறோம்.

சீனாவின் ஆதரவுடன், இலங்கையின் துறைமுக அபிவிருத்தி ஒரு புதிய போக்கை எடுத்துள்ளதுடன், அதை நாங்கள் பாராட்டுகிறோம். இலங்கையில், கொழும்பு துறைமுகமானது தேவையான அபிவிருத்தி மற்றும் முதலீட்டிற்காக எமது நாடுகளுக்கு இடையில் அதிகரித்து வரும் புதிய கோரிக்கைகளை பூர்த்தி செய்ய முடியுமான புதிய அபிவிருத்தியடைந்த ஒரு துறைமுக மையமாக விளங்கும்..

நாம் எதிர்கொள்ளும் எதிர்காலத்திற்கான வெற்றிகரமான மற்றும் சிறந்த கூட்டுத் திட்டத்தில், இது கிழக்கு ஆசியாவிலிருந்து கிழக்கு ஆப்பிரிக்கா வரை நாம் அனைவரும் ஒன்றாகச் செயற்பட முடியுமான நீலக்கடலின் தற்போதைய நிலையை மாற்றும். எதிர்காலத்தில் அனைத்து நாடுகளும் வெற்றிபெற வாழ்த்துகிறேன்.

கம்போடியா, டொமினிகா, கசகஸ்தான் மற்றும் நவுரு ஆகிய நாடுகளின் ஜனாதிபதிகள் கலந்து கொண்ட போவா மாநாட்டை சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய மக்கள் காங்கிரஸ் தலைவர் ஜாவோ லீஜி அங்குரார்ப்பணம் செய்து வைத்ததுடன், ஐக்கிய நாடுகளின் முன்னாள் பொதுச் செயலாளர், பூகோள பசுமை நிதியத்தின் தலைவர் பான் கி மூன், இராஜாங்க அமைச்சர்களான ஷெஹான் சேமசிங்க, அசோக பிரியந்த, பாராளுமன்ற உறுப்பினர் யதாமினி குணவர்தன, இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ ஷென்ஹோங், பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க ஆகியோர் இந்த மாநாட்டில் கலந்துகொண்டனர். .

பிரதமர் ஊடகப் பிரிவு