இலங்கையில் சிறுதோட்ட விவசாயம் மற்றும் மின்சக்தி பாதுகாப்பை மேம்படுத்த ஐ. நா. அபிவிருத்தித் திட்டம் மற்றும் ஜப்பான் உதவி.

இலங்கையின் பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்காக, இந்தப் புதிய வாழ்வாதாரத் திட்டங்கள் இன்று (24)அலரி மாளிகையில் ஆரம்பித்து வைக்கப்பட்டன. இந்த நிகழ்வு பிரதமர் தினேஷ் குணவர்தன, ஜப்பானியத் தூதுவர் மிசுகோஷி ஹிடேகி மற்றும் UNDP இலங்கை வதிவிடப் பிரதிநிதி அசுசா குபோடா ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.

இந்தத் திட்டங்களால் 58000 பெண்கள் மற்றும் இளைஞர் யுவதிகள் நேரடியாகப் பயனடைவார்கள். மேலும், வடமத்திய, வடமேல் மற்றும் கிழக்கு மாகாணங்களில் 132000க்கும் மேற்பட்ட பாதிக்கப்படக்கூடிய சமூக உறுப்பினர்களும் மறைமுகமாக நன்மையடைய உள்ளனர்.

இலங்கையில் தற்போதைய சமூக பொருளாதார நெருக்கடியானது விவசாயத் துறையில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிகரித்துச் செல்லும் மின்சக்தி செலவுகள் மற்றும் காலநிலை மாற்ற தாக்கங்களால் இந்த நிலைமை மேலும் மோசமடைகிறது.

இதற்கு தீர்வாக, உலர் வலய மாவட்டங்களில், அதாவது வடமத்திய, வடமேல் மற்றும் கிழக்கு மாகாண மாவட்டங்களில் பாதிக்கப்படக்கூடிய சிறிய அளவிலான விவசாயக் குடும்பங்களுக்கு உதவுவதற்காக ஜப்பான் அரசாங்கம் இலங்கையில் ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டத்தின் மூலம் சுமார் 1175 மில்லியன் ரூபாவை வழங்கும். பெண்களின் பொருளாதார வலுவூட்டல் மற்றும் பசுமை விவசாய தொழில்நுட்பங்களை பின்பற்றுவது குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்படும்.

இதற்கான நிதியானது ஜப்பானிய துணை வரவு செலவுத் திட்டத்தினால் வழங்கப்படுவதுடன், இலங்கை அரசாங்கம் மற்றும் சம்பந்தப்பட்ட பங்குதாரர்களுடன் இணைந்து இரண்டு செயற்திட்டங்கள் மூலம் அதன் நோக்கங்களை அடைவதே இந்த தலையீட்டின் நோக்கமாகும்.

பாதிக்கப்பட்டுள்ள சிறு தோட்ட உரிமையாளர்களின் குடும்பங்களை மேம்படுத்துதல் மற்றும் பெண்களை வலுவூட்டல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை பிரதமர் தினேஷ் குணவர்தன வலியுறுத்தினார். ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டத்தின் (UNDP) ஊடாக இலங்கையில் ஜப்பானிய அரசாங்கத்தினால் சிறியளவிலான விவசாயக் குடும்பங்களுக்கு உதவுவதற்காக இலங்கையில் இரண்டு புதிய வாழ்வாதாரத் திட்டங்களை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய பிரதமர், இத்திட்டங்கள் பெருமளவிலான உலர் வலய மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் எனக் குறிப்பிட்டார்.

சமூக-பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான இலங்கையின் முயற்சிகளுக்கு ஜப்பானிய அரசாங்கம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் அபிவிருத்தித் திட்டத்தினால் வழங்கப்படும் உதவியானது, நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான உணவு மற்றும் மின்சக்தி பாதுகாப்புடன் கூடிய இலங்கையை உருவாக்குவதற்குத் தேவையான ஒரு முக்கியமான நடவடிக்கையாகும் என்று பிரதமர் குறிப்பிட்டார்.

இலங்கையில் உள்ள பெண்களின் பொருளாதார மற்றும் சமூக வலுவூட்டலுக்காக ஜப்பான், இலங்கை அரசாங்கம் மற்றும் ஐக்கிய நாடுகளின் நிறுவனங்களுடன் இணைந்து செயற்படுவதுடன், அமைதி மற்றும் பாதுகாப்பிற்கான தேசிய செயற் திட்டத்தை வகுக்கும் திட்டமும் இதில் அடங்கும் என்று இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் திரு.மிசுகோஷி ஹிடேகி குறிப்பிட்டார்.

இந்த புதிய திட்டங்களன் மூலம் பாதிக்கப்படக்கூடிய சமூகங்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான நடைமுறை திட்டங்கள் வகுக்கப்படும். பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களின், குறிப்பாக மோதலால் பாதிக்கப்பட்டவர்களின் விசேட தேவைகளை நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம். ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டத்தின் நிபுணத்துவம் மற்றும் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு தொழில்நுட்ப உதவிகளுடன் நேர்மறையான நல்வாழ்வை உருவாக்குவதற்கான சிறந்த வாய்ப்பாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மிசுகோஷி ஹிடேகி, இலங்கையின் வதிவிடப் பிரதிநிதி அசுசா குபோடா, ஜய்க்கா நிறுவனத்தின் இலங்கைக்கான பிரதம பிரதிநிதி டெட்சுயா யமடா, அமைச்சர் மஹிந்த அமரவீர, பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அபிவிருத்தி பங்காளிகள் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு.