கொள்கைகளை மதித்து வினைத்திறனான சேவையை நாட்டுக்கு வழங்குங்கள்...

புதிதாக நியமனம்பெற்ற அரச உத்தியோகத்தர்களிடம் பிரதமர் தினேஷ் குணவர்தன வேண்டுகோள் ...

இலங்கை நிர்வாக சேவையின் தரம் III க்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்த 43 பேரும், இலங்கை திட்டமிடல் சேவையின் தரம் III க்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்து இதுவரை பதவிகளுக்காக நியமிக்கப்படாத எட்டு பேருக்கும் நியமனம் வழங்கும் நிகழ்வு இன்று (2024.07.15) அலரி மாளிகையில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்தகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த பிரதமர்

நிர்வாக சேவை மற்றும் திட்டமிடல் சேவையில் போட்டிப் பரீட்சைகளில் சித்தியடைந்து அரச சேவையில் சிரேஷ்ட உத்தியோகத்தர்களாக முன்னேறும் வாய்ப்பு உங்களுக்கு கிடைத்துள்ளது. உங்கள் சேவை நாட்டுக்கு இன்றியமையாதது. நாட்டின் எதிர்காலம் பொது நிர்வாகம் மற்றும் திட்டமிடல் என்ற ஆழமான வார்த்தைகளால் தீர்மானிக்கப்படுகிறது. எதிர்காலத்தை தீர்மானிக்க, மக்களுக்கும், உங்களுக்கும், அரச நிர்வாகத்தில் உள்ள மக்கள் பிரதிநிதிகளின் அரசுக்கும் இடையே மிக நல்ல புரிதல் அவசியம். எதிர்காலத்தில் நாட்டுக்கு பயனுள்ள சேவையை வழங்குங்கள்.

இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர

அரச சேவையின் ஊடாக நாட்டு மக்களுக்கு உங்களால் மிகச் சிறந்த சேவையை வழங்க முடியும். அரச சேவைக்கு ஆட்சேர்ப்பு நிறுத்தப்பட்டிருந்தாலும், அத்தியாவசிய தேவைகளை நாம் நிறைவேற்றினோம். இதுவரை, பட்டதாரிகள், பல்நோக்கு செயலணி உத்தியோகத்தர்கள், ஆசிரியர்கள் மற்றும் தாதியர் போன்ற அத்தியாவசிய சேவைகளுக்கான பதவிகள் வழங்கப்பட்டு நிரந்தரமாக்கப்பட்டுள்ளன.

ஓய்வுக்கு முன் அரசுப் பணியில் உயர் பதவிகளைப் பெறுபவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. அந்த இடைவெளியை நிரப்ப நாங்கள் உழைத்தோம். பிரதமரின் செயலாளர் தலைமையில் ஒரு குழுவை அமைத்து, தேவையின் அடிப்படையில் ஆட்சேர்ப்பு செய்ய அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. அரச சேவையின் தரத்தை உயர்த்தி மக்கள் பணியை எளிதாக்குங்கள். உங்கள் நிறுவனத்திற்கு யாராவது வரும்போது உடனடி சேவையை வழங்குங்கள். அதைத்தான் அவர்கள் அரச ஊழியர்களிடம் எதிர்பார்க்கிறார்கள். அரசாங்க துறையினர் தினமும் போராட்டம் நடத்துகிறார்கள் என்றால், அரசியல்வாதிகள் அல்ல, நாட்டு மக்கள் தான் சிரமப்படுவார்கள்.

எமது பிரதமர் அரச ஊழியர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்றால் அதை எந்த தயக்கமும் இல்லாமல் செய்கிறார். அவரது அர்ப்பணிப்பு காரணமாக இந்த நியமனங்களை விரைவாக வழங்க முடிந்தது.

பிரதமரின் செயலாளர் திரு. அனுர திஸாநாயக்க

அரச சேவை ஆட்சேர்ப்பு இடைநிறுத்தப்பட்டிருந்தது. அந்த கொள்கை முடிவில் இருந்து அரசு இன்னும் விலகவில்லை. நிர்வாக சேவை போட்டிப் பரீட்சையில் பங்குபற்றி, தகுதிபெற்ற அதிகாரிகளை குறிப்பிட்ட நோக்கத்திற்காக சேவைகளில்அமர்த்துவது அவசியமானது என்ற கருத்தை பிரதமர் குழுவிடம் தெரிவித்தார்.

இந்த பதவிகள் இல்லாததால், அரசின் மிக முக்கிய பணிகளை நிறைவேற்றுவதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், அதற்கு விசேட அனுமதி பெற வேண்டும் என பிரதமர் தெரிவித்தார். உங்கள் நியமனங்கள் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட பின்னரே வழங்கப்படுகிறது.

நாட்டின் பொருளாதாரச் செயற்பாட்டின் பின்தங்கிய நிலை பிரதேச பொருளாதார செயன்முறை, உணவுப் பாதுகாப்பு மற்றும் பிராந்திய அபிவிருத்திச் செயன்முறைகளை வலுப்படுத்த இலங்கை நிர்வாக சேவையில் மூன்றாம் தர அதிகாரிகளின் பற்றாக்குறை, பாதித்துள்ளது என்பதை நாம் சுட்டிக்காட்டினோம். நீண்ட கால யுத்தம், கொவிட் தொற்றினால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, எதிர்காலத்தில் ஸ்தாபிக்கப்படவிருக்கும் புதிய அரசாங்கம் ஆகிய அனைத்திற்கும் மத்தியில் நீங்கள் முழுநேரமாக கடமையாற்றும் போது, புதிய நிகழ்ச்சி நிரலுடன் உங்களுக்கு மிகப்பெரிய பொறுப்புகள் உள்ளன.

எதிர்பார்க்கப்படும் அபிவிருத்தி இலக்குகளை நோக்கி மற்ற ஊழியர்களை வழிநடத்துவது உங்கள் பொறுப்பு. பொதுச் சேவையின் எதிர்கால முகாமையாளர்களாக, தொலைநோக்குடன் செயற்பட உங்களுக்கு பலம் கிடைக்கட்டும்.

பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன, அபிவிருத்தி நிர்வாக நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் மற்றும் ஏனைய அதிகாரிகள், இலங்கை நிர்வாக சேவை மற்றும் இலங்கை திட்டமிடல் சேவையின் நியமனம் பெற்றவர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு