வகுப்பறைக்கான டிஜிட்டல் அடித்தளமாக எமது பாடசாலை கல்வி முறை மாற வேண்டும். - பிரதமர் தினேஷ் குணவர்தன

அடுத்த ஐந்து ஆண்டுகளில் நாடு முழுவதும் டிஜிட்டல் தொழில்நுட்பம்

களு அக்கலை ஸ்ரீ சித்தார்த்த கனிஷ்ட வித்தியாலயத்தில் 2023.12.04 அன்று இடம்பெற்ற புதிய கட்டிடத்தை மாணவர்களிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர்-

அடுத்த ஐந்தாண்டுகளுக்குள், நாடு தழுவிய ரீதியில் டிஜிட்டல் தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்படும். அந்த நேரத்தில், கல்வி முறையும் வகுப்பறையும் மிக வேகமாக மாறும். எனவே, இப்பிரதேசங்களில் இந்தச் செயற்பாடுகளுக்கு நாம் அடித்தளமிடும் வகையில் அனைவரும் ஒத்துழைத்து செயற்படுவதை மிகவும் முக்கியமானதொரு நடவடிக்கையாக நாம் கருதுகின்றோம்.

இன்று அரசாங்க பாடசாலைகளாக இலங்கையில் சுமார் பத்தாயிரம் பாடசாலைகள் உள்ளன. இவற்றின் தரத்தை உயர்த்தி அதன் அர்த்தத்தை இன்னும் வலுப்படுத்தும் வகையில் ஆசிரியர் தலைமுறையை தொடர்ந்து உருவாக்குகின்ற ஒரு தலைமை எமது நாட்டிற்கு தேவை. இந்த திட்டத்தை அத்தகைய முன்னேற்றமாக மாற்றுவதற்கான வழிமுறைகளை நோக்கி நாம் பயணிப்போம்.

கடந்த ஆண்டை மிகவும் கடினமான சூழ்நிலையில் நாம் கழித்தோம். இப்போது பொருளாதாரத்தை மீட்டெடுத்துள்ளோம். பணிகளை முன்னோக்கி கொண்டு செல்லத்தக்க வகையில் பாடசாலைகள் ஒவ்வொன்றாக புத்துயிர் பெற்றுவருகின்றன. கல்வித்துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றமே எங்கள் பிள்ளைகளுக்கு இருக்கின்ற மிகப்பெரிய பலம் என்று பெற்றோர்களாகிய நாம் எண்ணுகிறோம்.

பாராளுமன்ற உறுப்பினர் யதாமினி குணவர்தனவுக்கு நன்றிகூற வேண்டும். இந்த கிராமிய பாடசாலைகள் மீது மிகுந்த ஆர்வத்துடன், பாடசாலைகளுக்கு புதிய அறிவு மற்றும் தகவல் தொழில்நுட்பத்தை வழங்கும் முயற்சிகளில் மிகுந்த ஆர்வத்துடன் அவர் செயற்பட்டு வருகின்றார். அதன் விளைவாக, இந்த பாடசலையும் இந்தத் திட்டத்தில் இணையும் வாய்ப்பைப் பெற்றது. எதிர்காலத்தில், எமது பிள்ளைகள் அதைப் பயன்படுத்திக் கொண்டு, இந்த புதிய சவாலுக்கு முக்கிய காரணியாக மாறியுள்ள தகவல் தொழில்நுட்பத் துறையில் முன்னேறுவார்கள் என்று நம்புகிறோம்.

ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் பொரலுகொட ராளஹாமி அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட இக்கல்லூரி தற்போது வரை தொடர்ச்சியாக இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. பெற்றோரின் ஆதரவும், இக்கல்லூரியை தாபித்தவர்களின் ஆதரவும் தலைமையும், அரசியல் பிரதிநிதிகளின் ஆதரவும் இதற்கு உறுதுணையாக உள்ளன. ஒரு பாடசாலை ஆரம்பித்த நாளிலிருந்து எத்தனை ஆண்டுகள் ஆகின்றன என்பதை விட, இங்கிருந்து எத்தனை பிள்ளைகள் கற்று நாட்டிற்கும் சமுதாயத்திற்கும் சேவைசெய்கிறார்கள் என்பது தான் பாடசாலைக்கு பெருமை. பொரலுகொட வித்தியாலயத்தில் தான் நாம் கல்வி கற்றோம் என்று கூறும் பல தலைமுறைகள் உள்ளன.

எங்கள் பொரலுகொட விகாரையும் பாடசாலையும் ஒன்றாக இணைந்திருந்தன. கிராம மக்கள் பயன்பெறும் பாடசாலையாக அது மாறியிருந்தது. இந்தப் பாடசாலையில் முதலில் பதிவு செய்வதற்காக பொரலுகொட ராளஹாமி அழைத்து வந்தது எமது பெரியப்பா சட்டத்தரணி ஹரி குணவர்தனவையாகும். அதனுடன் எங்கள் தந்தை பிலிப் குணவர்தனவும் வந்தார். இப்போது ரஞ்சித் குணவர்தன இருக்கிறார். ஹரி குணவர்தனவின் அன்பு மகன். மேலும், பிலிப் குணவர்தனவின் பிள்ளைகள் என்ற வகையில் நான் மற்றும் கீதாஞ்சன மேலும் பேரப் பிள்ளை என்ற வகையில் யதாமினி குணவர்தன ஆகியோரினால் இப்பாடசாலைக்கு தொடர்ந்து ஆதரவளிக்க முடிந்துள்ளது. பாடசாலைகளில் பிள்ளைகள் எதிர்பார்க்கும் அறிவை வழங்கும் திறன் ஆசிரியர்களுக்கு இருக்க வேண்டும். அந்த அடிப்படையில்தான் ஒரு பாடசாலையின் வளர்ச்சி மேலும் பலம்பெறுகிறது.

பொரலுகொட ஸ்ரீ வர்தனாராமாதிபதி சங்கைக்குரிய ஹெவல்வல ஞானானந்த தேரர் உள்ளிட்ட மகாசங்கத்தினர், மேல் மாகாண ஆளுநர் ரொஷான் குணதிலக்க, பாராளுமன்ற உறுப்பினர் யதாமினி குணவர்தன, முன்னாள் அமைச்சர் கீதாஞ்சன குணவர்தன, மேல்மாகாண சபை செயலாளர் பிரதீப் யசரத்ன, ஆசிரியர்கள் மற்றும் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு