ஐ நா அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்ட வதிவிடப் பிரதிநிதி அசுசா குபோடா பிரதமருடன் சந்திப்பு

ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் (UNDP) இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி திருமதி அசுசா குபோடா, பிரதமர் தினேஷ் குணவர்தனவை இன்று (01.07.2024) அலரிமாளிகையில் சந்தித்தார். மாற்றம், நல்லிணக்கம் மற்றும் உள்ளடங்கிய ஜனநாயக ஈடுபாட்டினை வலுப்படுத்தல் (STRIDE) நிகழ்ச்சித்திட்டத்தின் காண்புகள் மற்றும் பூர்வாங்க பரிந்துரைகளை இதன்போது அவர் பிரதமரிடம் கையளித்தார். STRIDE என்பது உள்ளூர் மட்டத்தில் சேவைகளின் அணுகல் மற்றும் தரத்தை மேம்படுத்துவதன் மூலம் சமூகங்கள் மற்றும் உள்ளூராட்சி அமைப்புகளுக்கு இடையே உரையாடலை மேம்படுத்துவதற்கு ஐரோப்பிய ஒன்றியத்தால் நிதியளிக்கப்படும் பல பங்குதாரர்களின் முன்முயற்சியாகும். 2024 ஆம் ஆண்டு ஜூன் 10-11 ஆம் திகதிகளில் நடத்தப்பட்ட ‘மாற்றத்திற்கான வினையூக்கியாக செயற்படல் – உள்ளூராட்சி அமைப்புகளை எதிர்காலத்திற்கு பொருத்தமானதாக மாற்றுதல்’ என்ற தலைப்பிலான அவர்களின் தேசிய கருத்தரங்கின் சுருக்கமே இவ்வாறு சமர்பிக்கப்பட்டு அது குறித்து கலந்துரையாடப்பட்டது.

மீள்புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளங்களின் அபிவிருத்தி, நாடளாவிய அரசாங்க பாடசாலைகள் மற்றும் அரச நிறுவனங்களுக்கு சூரிய சக்தி தகடுகளை அமைக்கும் திட்டங்கள், கிராமிய விவசாயப் பொருளாதாரம் மற்றும் பெண்களை மையமாகக் கொண்ட குடும்பப் பொருளாதாரத்தை மேலும் மேம்படுத்துவதற்கான ஆதரவு போன்ற பல பெறுமதியான விடயங்களை இந்தத் திட்டத்தில் இருந்து பிரதமர் வேண்டிக் கொண்டார். பிரதமருக்குப் பதிலளித்த திருமதி குபோடா, தாங்கள் ஏற்கனவே இந்தப் பகுதிகளில் கவனம் செலுத்தி வருவதாகவும், கிராமப்புற விவசாய மேம்பாட்டுக்கான தங்கள் முயற்சியை விரிவுபடுத்துவதற்காக ஒரு பணிக்குழுவை உருவாக்குவது குறித்து மேலும் கலந்துரையாட விரும்புவதாகவும் கூறினார்.

இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகளின் கூட்டுறவுத் தலைவர் கலாநிதி ஜொஹான் ஹெஸ்ஸே மற்றும் பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு