குடிநீரும் நீர் பாசனமும் எமது நீர்சார்ந்த முதன்மையான முன்னுரிமைகளாகும் - பிரதமர் தினேஷ் குணவர்தன

தற்போது இலங்கை உணவுப் பாதுகாப்பு, போஷாக்கு உள்ளிட்ட பல சவால்களை எதிர்கொண்டுள்ளது. நீர் பயன்பாட்டில் முன்னுரிமைகள் அடையாளம் காணப்பட வேண்டும் என்பதோடு, நாட்டிலுள்ள நீர் முகாமைத்துவம் தொடர்பான அனைத்து நிறுவனங்களுடனும் எமது அரசாங்கம் ஒத்துழைப்புடன் செயற்பட்டுவருகிறது. ஐக்கிய நாடுகள் சபையுடன் இணைந்த சர்வதேச நீர் முகாமைத்துவ நிறுவனத்தினால் 2022.11.28 அன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வொன்றில் உரையாற்றம் போதே பிரதமர் அவர்கள் இதனைத் தெரிவித்தார்.

உணவுப் பாதுகாப்பில் அரசாங்கம் அதிக கவனம் செலுத்தியுள்ளதுடன், பெரும்போகத்தை வெற்றிகரமானதாக ஆக்கவேண்டியது முக்கிய தேவையாகும். பயன்படுத்தப்பட்ட நீரை மீண்டும் பயன்படுத்துவதற்கான மீள்சுழற்சி திட்டங்களில் கவனம் செலுத்துவது முக்கியமானதாகும் என்றும் குறிப்பிட்ட பிரதமர் அவர்கள், குடிநீர் பிரச்சினை உள்ள பல நகர்ப்புற பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளதுடன், அந்த மக்களுக்கு சுத்தமான குடிநீர் மற்றும் சுகாதார வசதிகளை வழங்க எதிர்காலத்தில் பல நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.

“நாட்டில் பல்வேறு காலகட்டங்களில் விவசாயிகள் வெள்ள நிலைமைகளை எதிர்கொள்கின்றனர். இது போன்ற காலநிலை மாற்றங்களை எதிர்கொண்டு சர்வதேச நீர் முகாமைத்துவ நிறுவனம் மக்களுக்கு செய்து வரும் சேவைகள் பாராட்டுக்குரியது. எதிர்காலத்தில் நீர்வளம் தொடர்பான பல பிரச்சனைகள் உருவாகலாம், அவற்றுக்கு முகம்கொடுக்க நீர் முகாமைத்துவம் என்பது அத்தியாவசியமான கருவியாகும்.” என்றும் பிரதமர் அவர்கள் தெரிவித்தார்.

நீர்ப்பாசனம் மற்றும் உற்பத்தித்திறன், நிலத்தடி நீர் முகாமைத்துவம், காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான தாங்குதிறனை அதிகரித்தல், கழிவு முகாமைத்துவம் மற்றும் ஈரநிலப் பாதுகாப்பு உள்ளிட்ட இலங்கையில் சர்வதேச நீர் முகாமைத்துவ நிறுவனத்தினால் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்தார். நாட்டின் சமூக மற்றும் பொருளாதார மறுமலர்ச்சிக்கு இந்நிறுவனத்தின் செயற்திறமான பங்களிப்பு எமது நீர்வளத்தை மேம்படுத்தும் என எதிர்பார்ப்பதாகவும் பிரதமர் அவர்கள் கூறினார்.

சர்வதேச நீர் முகாமைத்துவ நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி மார்க் ஸ்மித், கலாநிதி பி. இராமானுஜம், கலாநிதி ரேச்சல் மெக்டொனால்ட் மற்றும் பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.