ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் வெனிசுலா வழங்கிய ஆதரவிற்கு பிரதமர் நன்றி தெரிவிப்பு

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழு உள்ளிட்ட சர்வதேச அமைப்புக்கள் ஒன்றுகூடும் சந்தர்ப்பங்களில் வெனிசுலா இலங்கைக்கு அளித்துவரும் தொடர்ச்சியான ஆதரவுக்கு பிரதமர் தினேஷ் குணவர்தன நன்றி தெரிவித்தார்.

நேற்று முன்தினம் (06) அலரி மாளிகையில் இடம்பெற்ற வெனிசுலா தூதுவர் கபாயா ரோட்ரிக்ஸ் கோன்சாலஸ் உடனான சந்திப்பின் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

இலங்கை மற்றும் வெனிசுலா போன்ற அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள் தொடர்பில் சில பலம்வாய்ந்த நாடுகள் இரட்டை நிலைப்பாட்டை கடைபிடிக்கின்றன என்று கூறிய தூதுவர் கொன்சாலஸ், இறைமை கொண்ட நாடுகளுக்கு எதிரான இத்தகைய தலையீடுகளை ஒன்றாக எதிர்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இலங்கை இளைஞர்களிடையே வெளிநாட்டு மொழிகளைக் கற்றுக்கொள்வதில் அதிக ஆர்வம் காணப்படுவதால், பல்கலைக்கழக விரிவுரையாளர்களை பரிமாறிக்கொள்வதற்கான ஒப்பந்தத்தின் மூலம் குறுகிய காலத்திற்கு ஸ்பானிய மொழி ஆசிரியர்களின் சேவைகளை இலங்கைப் பல்கலைக்கழகங்களுக்குப் பெற்றுக்கொள்ளும் முன்மொழிவையும் பிரதமர் முன்வைத்தார்.

இந்த கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர் யதாமினி குணவர்தன மற்றும் பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க ஆகியோரும் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு