உலகமே பௌத்தத்தை தேடிக்கொண்டிருக்கும் இவ்வேளையில் எமது நாயக்க தேரர்கள் மேற்கொண்டு வரும் பணிகள் சிறப்புவாய்ந்ததாகும் - பிரதமர் தினேஷ் குணவர்தன

தர்மகீர்த்தி ஸ்ரீ திரிபிடக வாகீஸ்வராச்சாரிய என்ற கௌரவத்துடன் கொழும்பு சிலாபம் பிராந்திய பிரதம சங்கநாயக்க பதவியைப் பெற்றிருக்கும் வித்யாலங்கார பரிவேனாதிபதி மற்றும் பணிப்பாளர் வெலமிட்டியாவே ஞானரத்ன தேரரை நேற்று (08) சந்தித்தபோதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த பிரதமர்-

நாயக்க தேரருக்கு இத்தகையதொரு கௌரவப் பட்டம் கிடைக்கப்பெற்றிருப்பது எமது சாசன வரலாற்றில் ஒரு விசேட மைற்கல் ஆகும்.

தேரர் அவர்களே நீங்கள் மேற்கொண்டு வரும் பணிக்குத் தேவையான அனைத்து ஒத்துழைப்பையும் வழங்க நாங்கள் நடவடிக்கை எடுப்போம். வித்யாலங்கார பிரிவேனாவுக்கும், அதுபோலவே உங்களது சவாலான பாத்திரங்களை தொடர்ந்தும் சாசனத்தின் முன்னேற்றத்திற்காக மேற்கொள்வதற்கும் சக்தியும் தைரியமும் கிடைக்கவேண்டும் என்று பிரார்த்திக்கிறோம்.

உலகமே பௌத்தத்தை தேடிக்கொண்டிருக்கும் இவ்வேளையில், அது தொடர்பில் வழிகாட்டுவதற்காக எமது நாயக்க தேரர்கள் ஆற்றி வரும் பங்கு தனித்துவமானது. இவ்வருட பெரும் போக விவசாயத்தில் எமது விவசாயிகள் வெற்றி பெற்றுள்ளனர் என்றும் தெரிவித்தார்.

அடுத்து வரும் சில ஆண்டுகளில் விவசாயப் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புதவற்காக அர்ப்பணிக்க வேண்டும் - இங்கு அநுசாசன உரை நிகழ்த்திய வெலமிட்டியாவ ஞானரத்ன தேரர் –

“வித்தியாலங்கார பிரிவேனா உங்களுக்கு ஒரு புதிய இடமல்ல. வித்யாலங்கார வரலாற்றைப் படிக்கும் போது பிலிப் குணவர்தனவுக்கும் இந்தப் பிரிவேனாவுக்கும் இடையில் இருந்த தொடர்பும் முன்னாள் நாயக்க தேரர்கள் மீது அவர் கொண்டிருந்த மரியாதையும் தெளிவாகத் தெரிகிறது.

முழு உலகமும் இப்போது இலங்கையை தேரவாத பௌத்தத்தின் மையமாக ஏற்றுக் கொண்டுள்ளது. இது பௌத்த சமயத்தைப் பற்றி அறிவார்ந்த பலர் ஆராய்ந்து கொண்டிருக்கும் காலம். புத்த சமயத்தைப் பற்றி அறிந்துகொள்ள, ஆராய்ச்சிகளை செய்ய வேறு இடங்கள் இல்லை.

அது பற்றிய ஆய்வுத் தகவல்களைக் கொண்ட ஒரு அருங்காட்சியகத்தை அமைப்பதற்கான முன்மொழிவை நாங்கள் சமர்ப்பித்துள்ளோம்.தேரவாத பௌத்தம் பாலி மொழியில் உள்ளது. அதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து முக்கியமான புத்தகங்களாக வெளியிட வேண்டும்.

எமது சுதேச விடயங்களை மதிப்பதன் மூலம் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகளை கண்டடைய முடியும். தற்போது சுற்றுலா பயணிகள் நாட்டுக்கு வரத் தொடங்கியுள்ளனர். சுற்றுலாத் துறையை மேலும் மேம்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்று நான் நினைக்கிறேன்.

விவசாயப் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது பாராட்டுக்குரியதாகும் என்றும் நாயக்க தேரர் மேலும் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் யதாமினி குணவர்தன ஆகியோரும் கலந்துகொண்டனர்.