பல நாடுகளின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து அரச ஊழியர்கள் வீட்டுக்கு அனுப்பப்பட்டபோது, எமது நாட்டில் அப்படி நடக்க நாம் இடமளிக்கவில்லை. - பிரதமர் தினேஷ் குணவர்தன...

அரச ஊழியர்கள் மக்களுக்காக தங்கள் பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டும்.

15.06.2024 அன்று இடம்பெற்ற மஹவிலச்சிய பிரதேச செயலகத்தின் இரண்டு மாடி கட்டிடத்தை பொது மக்களிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர்-

“பல நூற்றாண்டுகளுக்கு முன் இப்பகுதிகளில் இருந்து கிடைத்த வரலாறே எமது வரலாற்றுக்கு வளம் சேர்த்தது. இந்தப் பகுதிகளில் இருந்து கிடைத்த மாபெரும் நாகரீகமே உலக நாடுகளுடன் எமது நாட்டை ஒப்பிட்டுப் பேசமுடியுமான நாகரீகத்திற்கு வழிவகுத்தது.

மிகவும் கடினமான ஒரு காலக்கட்டத்திலேயே, நாம் நாட்டின் பொறுப்பை ஏற்க வேண்டியிருந்தது. பல்வேறு புள்ளிவிபரவியல் விவாதங்கள் இப்போது மட்டுமின்றி அவை வரலாற்றில் இதற்கு முன்னரும் இடம்பெற்று வந்திருக்கின்றன. எந்தவொரு கணித சாஸ்திரமும் ஒரே மாதிரியாக வளர்ச்சியடையவில்லை. வாதவிவாதங்கள், பின்னடைவுகள், தவறுகள் நிகழ்ந்து முன்னோக்கிச் செல்கின்றன. ஜனாதிபதி அவர்களினாலும் அரசாங்கத்தினாலும் நாட்டின் பொருளாதாரம் குழப்பத்தில் இருந்து மேலும் குழப்பத்திற்கு செல்லாத வகையில் ஸ்திரமான நிலைக்கு கொண்டுவர முடிந்துள்ளது. நாட்டின் சட்டம் நிலைப்படுத்தப்பட்டுள்ளது. உலக நாடுகளுக்கு மத்தியில் ஸ்திரமான அரசாங்கத்தை கொண்ட நாடு என்பதை மீண்டும் ஒருமுறை காட்ட முடிந்துள்ளது. இந்த முறைகளில்தான் உலகம் எம்முடன் கொடுக்கல்வங்கல்களை மேற்கொள்கிறது, கவனத்திற்கொள்கிறது, எம்மை அங்கீகரிக்கிறது. சட்டத்தை வியாக்கியானம் செய்யும்போது, அது மக்களின் நலனுக்காக வியாக்கியானம் செய்யப்பட வேண்டும்.

நெருக்கடி காலகட்டத்தின் போது இங்குள்ள விவசாயிகளின் நிலையை நான் விளக்க வேண்டியதில்லை. விவசாயிகள் பல கோரிக்கைகளை வைத்தனர். விவசாயிகள் கோரும் திட்டத்தையும், ஏற்பட்டிருந்த பிரச்னையையும் வளர்ச்சியாக மாற்றுவதற்கு அரசாங்கம் விவசாயிகள் மீது நம்பிக்கையை வைத்திருந்தது. விவசாயிகளுக்கு உபரியாக உணவினை உற்பத்தி செய்வதன் மூலம் எமது நாடு உணவுப் பிரச்சினையைத் தீர்க்க முடியுமான நாடு என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்தோம். அதை நம் விவசாயிகள் நிரூபித்துள்ளனர். அதனால்தான் எம்மைப் பார்த்துக் கொண்டிருந்த பல்வேறு நாடுகளும் இலங்கையை மிக விரைவாக பொருளாதாரத்தை மீட்டெடுக்கக்கூடிய நாடு என்று அறிவித்தன.

மல்வத்து ஓயா பள்ளத்தாக்கின் தந்திரிமலையைச் சூழ வாழும் விவசாய மக்களே மிகவும் வெற்றிகரமான தன்னிறைவு மற்றும் ஏற்றுமதிப் பரிமாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய ஆயிரக்கணக்கான ஏக்கர்களின் உரிமையாளர்கள். எங்கள் அரசும் அதை அப்படியே கட்டியெழுப்ப உறுதி பூண்டுள்ளது. எனவே அறிவிக்கப்பட்டுள்ள திட்டத்தை நாம் அவ்வாறே தொடரலாம். இதற்கு அனைத்து அரச அதிகாரிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். எந்த ஒரு அரச அதிகாரிக்கும் நாங்கள் குறைபாடுகளை வைக்கவில்லை. உலகின் பல நாடுகளில் பொருளாதாரம் சரிந்தபோது, ஆயிரக்கணக்கான அரச ஊழியர்கள் வீட்டுக்கு அனுப்பப்பட்டனர். ஊதியம் நிறுத்தப்பட்டது. நம் நாட்டில் அப்படிச் செய்யவில்லை. கிரேக்க நாடு அவ்வாறானதொரு நிலைக்கு முகம்கொடுத்தது. அரச ஊழியர்கள் பாதி பேர் வீட்டிலேயே இருந்தனர். ஓய்வூதியம் இரண்டு அல்லது மூன்று மாதங்களே வழங்கப்பட்டது. எந்த அரச ஊழியர்களினதும் சம்பளத்தையும் நாங்கள் நிறுத்தவில்லை. இந்த இக்கட்டான காலத்திலும் ஓய்வூதியம் நிறுத்தப்படவில்லை. கடினமான காலகட்டம் இருந்தபோதிலும், எங்கள் அரச சேவை அதிகாரிகள் கீழ்மட்டத்தில் இருந்து மேல்மட்டம் வரை தங்கள் உரிமைகளை அனுபவித்தனர். நாட்டின் எதிர்காலப் பயணத்தில் நம்பிக்கையுடன் வெற்றிபெற முக்கிய பங்குதாரர்களாக இந்தப் பயணத்தில் நாட்டுக்காக செய்ய வேண்டிய பணி ஒன்று உள்ளது.

நாங்கள் தனியார் துறை அல்ல. நாங்கள்தான் அரசாங்கம். பொது சேவை என்பது ஒரு முக்கியமான பொறுப்பு. அராசாங்கத்துறை மக்களுக்கான பொறுப்பை நிறைவேற்ற வேண்டும். அதனால்தான் அரசாங்க சேவை உள்ளது. கிராம சேவகர், பிரதேச செயலாளர். மாவட்ட செயலாளர் முதல் அனைத்து துறைகளும் அந்த பொது சேவையின் பொறுப்பையும் கடமையையும் நிறைவேற்ற வேண்டும். பொறுப்பு பதவியில் உள்ளது. கடமை என்பது அதனைப் பார்க்கிலும் ஆழமானது. மனிதநேயம் என்பது கடமையின் ஒரு பகுதி. இப்பகுதியைச் சேர்ந்த மக்கள் அரச சேவைகளை பெறுவதற்காக பல்வேறு சிரமங்களுடன் வருகின்றனர். அவர்களை அபிவிருத்தியில் முன்னுாக்கிக் கொண்டுச் செல்வது உண்மையான அரச ஊழியர்களின் கடமையாகும். அது முழுமையாக நிறைவேறும் போது, நாட்டை வலுவாக முன்னோக்கி கொண்டு செல்வதற்கான கூட்டாண்மை உங்களுக்கும் கிடைக்கும். எனவே இந்த வேலையை ஒன்றாகச் செய்வோம்.

இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த, அனுராதபுர மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர் எஸ்.எம். சந்திரசேனவும் இங்கு உரையாற்றியதுடன், பல விவசாயிகளுக்கு இதன்போது காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டன.

தந்திரிமலை ரஜமஹா விகாரையின் விகாராதிபதி தந்திரிமலை சந்தரதன தேரர் உள்ளிட்ட மகாசங்கத்தனர், அனுராதபுர மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர் எஸ்.எம். சந்திரசேன, இராஜாங்க அமைச்சர்களான ஷெஹான் சேமசிங்க, அசோக பிரியந்த பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ். முத்துக்குமாரண, வீரசேன கமகே, இஷாக் ரஹ்மான், முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம். ரஞ்சித், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பி. ஹாரிசன் உட்பட

முன்னாள் உள்ளுராட்சி பிரதிநிதிகள், பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன, அனுராதபுர மாவட்ட அரசாங்க அதிபர் ஜனக ஜயசுந்தர, பிரதேச செயலாளர்கள், அரச அதிகாரிகள், விவசாயிகள், பிரதேச மக்கள் என பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு