ஐக்கிய இராச்சியத்திற்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்தும் வகையில், இலங்கையின் கல்வித்துறையில் பிரித்தானிய பல்கலைக்கழகங்களின் பங்கேற்பு அதிகரிப்பு...

பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்ட்ரூ பெட்ரிக், பிரதமர் தினேஷ் குணவர்தனவை 2023.09.07 அன்று அலரி மாளிகையில் சந்தித்து, இலங்கைக்கும் ஐக்கிய இராச்சியத்திற்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் மற்றும் அபிவிருத்தி ஒத்துழைப்பு தொடர்பான கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டார்.

இதன்போது இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் மற்றும் அபிவிருத்தி ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவதற்கான தனது உறுதியான உறுதிப்பாட்டை உயர்ஸ்தானிகர் உறுதிப்படுத்தினார்.

தனியார் துறையின் பங்களிப்புடன் புதிய முதலீட்டு திட்டங்களை தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயுமாறு பிரித்தானியாவை பிரதமர் கேட்டுக் கொண்டார். இலங்கையின் கல்வி, வங்கி மற்றும் நிதிச் சேவைகள், மருந்துப் பொருட்கள், ஹோட்டல் தொழில் மற்றும் சுற்றுலாத் துறைகளில் பிரித்தானியாவின் முதலீடு ஊக்குவிக்கப்படும் என்றும் பிரதமர் கூறினார்.

இலங்கையின் கல்வித் துறையில் பிரித்தானியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் பங்களிப்பை மேம்படுத்துவதற்கு உயர்ஸ்தானிகர் அன்ட்ரூ பெட்ரிக் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார். பிரிட்டிஷ் கவுன்சிலுடன் இணைந்து ஆங்கில மொழி கற்பித்தல் வசதிகளை விரிவுபடுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயவும் அவர் இணக்கம் தெரிவித்தார்.

பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க மற்றும் பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தின் இரண்டாவது செயலாளர் சியோபன் லதம் ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு