இலங்கையை இடர் மற்றும் வறுமை நிலையில் இருந்து விடுவிப்பதற்கு உதவும் சர்வதேச குறிகாட்டிகளின் அடிப்படையில் எதிர்கால கொள்கைகள் வகுக்கப்பட வேண்டும். - பிரதமர் தினேஷ் குணவர்தன

ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி திட்டத்தினால் (UNDP) தயாரிக்கப்பட்ட பல பரிமாண வறுமை சுட்டெண் (MPI) மற்றும் பல பரிமாண இடர் சுட்டெண் (MVI) ஆகியவற்றை ஆராய்ந்து அதற்கேற்ப எதிர்கால திட்டங்களை தயாரிக்குமாறு கொள்கை வகுப்பாளர்கள், தனியார் துறை மற்றும் சிவில் சமூகத்தை பிரதமர் தினேஷ் குணவர்தன கேட்டுக்கொண்டுள்ளார்.

இது இடர் நிலைமைகள் மற்றும் வறுமையில் இருந்து இலங்கையை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கு உதவும் என்று பிரதமர் கூறினார்.

UNDP வதிவிடப் பிரதிநிதி அசூசா குபோடா (Azusa Kubota) மற்றும் ஒக்ஸ்பட் பல்கலைக்கழகத்தில் ஒக்ஸ்பட் வறுமை மற்றும் மானிட அபிவிருத்தி முன்னெடுப்பின் பணிப்பாளர் கலாநிதி சபீனா அல்கீர் ஆகியோரை இன்று (31) அலரி மாளிகையில் சந்தித்தபோதே பிரதமர் இதனைத் தெரிவித்தார். இதன்போது சமூக விஞ்ஞானத் துறை பேராசிரியர் சிறி ஹெட்டிகே UNDP, MVI, MPI ஆகியவற்றின் அறிக்கைகளை கையளித்தார்.

இடர் நிலைக்கு உள்ளாகக்கூடிய குழுக்களுக்கு பயனுள்ள தேசிய கொள்கைகளை வடிவமைப்பதில் மிகவும் பயனுள்ள தரவு தளத்தை உருவாக்குவது தொடர்பில் வறுமை மற்றும் மானிட அபிவிருத்தி முன்னெடுப்பு, UNDP SURGE Data Hub மற்றும் இலங்கை பிரதமர் அலுவலகத்துடன் இணைந்த Citra Social Innovation Lab ஆகிய நிறுவனங்களுக்கு பிரதமர் நன்றி கூறினார்.

போஷாக்கு, கல்வி, வீட்டுக் கடன் அல்லது இடர் நிலை அபாயம் தொடர்பான சிக்கல்களை உள்ளடக்கிய வகையில் 25,000 குடும்பங்களில் இருந்து தரவுகளை பெற்று, தேசிய அளவிலான கணக்கெடுப்பொன்றின் மூலம் அறிக்கைக்கான தரவு சேகரிக்கப்பட்டது என்று திருமதி குபோடா விளக்கினார்.

இடர் நிலைக்கு உள்ளாகக்கூடிய குழுக்கள் எதிர்கொள்ளும் சவால்களை நன்கு புரிந்துகொள்ள இலக்குமயப்பட்ட மற்றும் பயனுள்ள கொள்கைகளை வகுப்பதில் கொள்கை வகுப்பாளர்களுக்கு உதவுவதற்கு MVI MPI வலுவான ஆதார அடிப்படையிலான தரவை வழங்கும் என்று கலாநிதி அல்கீர் கூறினார்.

இலங்கையை மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கும் மேலும் நிலையான அபிவிருத்திப் பாதைக்கு கொண்டு வருவதற்கும் அரசாங்கம் தனது கொள்கை திட்டங்களை திறம்பட வடிவமைப்பதற்கு வறுமை மற்றும் இடர் நிலைமை குறித்த தரவுத்தளம் பயனுள்ளதாக இருக்கும் என பேராசிரியர் ஹெட்டிகே தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க, ஆலோசகர் (ஊடகம்) சுகீஸ்வர சேனாதீர மற்றும் UNDP குழு தலைவர் ஃபாதில் பாக்கீர் மார்க்கர் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு