தாதியர் கல்லூரியை பல்கலைக்கழகமாக்கும் அரசாங்கத்தின் தீர்மானத்தின் மூலம் நாட்டில் தாதிச் சேவையில் பெரும் எதிர்கால புரட்சியொன்றுக்கான சந்தர்ப்பம் உருவாகியுள்ளது... - பிரதமர் தினேஷ் குணவர்தன

சர்வதேச தாதியர் தினத்தை முன்னிட்டு அரசாங்க சேவை ஐக்கிய தாதியர் சங்கத்தினால் இன்று (12.05.2023) அலரி மாளிகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர்-

இன்று சர்வதேச தாதியர் தினம். சர்வதேச தாதியர் தினத்தை முன்னிட்டு அரசாங்க சேவை ஐக்கிய தாதியர் சங்கம் சங்கைக்குரிய முருத்தெட்டுவே ஆனந்த நாயக்க தேரர் தலைமையில் எமது நாட்டில் தொடர்ந்தும் ஒன்றுகூடி வருகின்றது. தாதியர் துறை எமது நாட்டின் சுகாதாரத் துறையில் பொறுப்புவாய்ந்த முக்கிய துறைகளில் ஒன்றாக விளங்குகிறது.

குறிப்பாக பல்வேறு துறைகளுக்கு பல்வேறு தடைகளை சந்திக்க வேண்டியுள்ளது. ஒவ்வொரு நிறுவனத்திற்கும் ஒரு திட்டம், ஒரு நோக்கம் மற்றும் குறிக்கோள் இருப்பதைப் போன்று அதன் உறுப்பினர்களுக்கும், உறுப்பினர்கள் வாழும் சமூகத்திற்கும் செய்ய வேண்டிய ஒரு பொறுப்பு இருக்க வேண்டும். அந்த வேலைத்திட்டத்திற்காக அரசாங்க சேவை ஐக்கிய தாதியர் சங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டதை இந்த நேரத்தில் விசேடமாக குறிப்பிட வேண்டும்.

இது ஏனைய தொழிற்சங்கங்கள் மற்றும் ஏனைய தொழில்சார் துறைகளுக்கு பல முக்கிய முன்னுதாரணங்களைச் சேர்த்துள்ளது. அதிக அழுத்தங்கள், சம்பளப் பிரச்சினைகளை எதிர்கொண்ட தாதியர் சேவையை பயிற்சிகள் போன்றவற்றினால் வளம்பெற்ற ஒரு தாதியர் சேவையாக மாற்ற தாதியர் சங்கம் பல அர்ப்பணிப்புகளை செய்தது.

அரசாங்க சேவை ஐக்கிய தாதியர் சங்கம் சமூகத்திற்காக ஒரு சிறப்பான தாதியர் சேவையை வழங்கியுள்ளது. ஆயிரக்கணக்கான பிள்ளைகள் தாதியர் தொழிலில் சேர்ந்து, டிப்ளோமாவுடன் பெருமையுடன் வெளியேறிய காலத்தை மாற்றி இந்த தாதியர் கல்லூரயை பல்கலைக்கழகமாக மாற்றுவதற்கும் தாதியர் சேவையை இன்னும் மேம்பட்ட நிலைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற உறுதியை அரசாங்க சேவை ஐக்கிய தாதியர் சங்கம் மட்டுமே கொண்டிருந்தது.

தாதியர் சங்கத்தின் முன்னாள் உறுப்பினர்களுக்கு பிரதமர் என்ற முறையில் விசேட மரியாதையை செலுத்துகிறேன். உங்களால் தான் இந்த பல்கலைக்கழகம் உருவாகி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதுவே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் விசேட செய்தியாகும்.

தாதியர் துறை உறுப்பினர்களை வெற்றிபெறச்செய்யும் இப்பல்கலைக்கழகத்தை பிரகடனப்படுத்துவதற்கு ஜனாதிபதி சமர்ப்பித்த தீர்மானத்தின் பிரகாரம், அமைச்சரவை தீர்மானம் வெளியிடப்பட்டுள்ளது. இதனை ஒரு வளர்ச்சியடைந்த பல்கலைக்கழகமாக மாற்ற வேண்டும். இது நாட்டுக்கும் சமூக முன்னேற்றத்திற்கும் பொருளாதார முன்னேற்றத்திற்கும் உதவும்.

இந்த இக்கட்டான காலக்கட்டத்தில் கூட அந்த முடிவை எடுப்பதற்கு எமது அமைச்சரவையுடன் உடன்பட்டதன் மூலம் ஜனாதிபதி ஒரு பெரும் முன்னோக்கிய நடவடிக்கையை எடுத்துள்ளார். இந்த காலம் மிகவும் கடினமான காலம். எமது நாட்டின் பொருளாதாரம் இப்படி வீழ்ச்சியடைந்ததில்லை. வரலாற்றில் இதுவரை இல்லாத சூழ்நிலையில் இருந்து மீண்டுள்ளோம். இந்த வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை மீட்பதற்காக ஜனாதிபதியும் அரசாங்கமும் மேற்கொண்ட பயணத்தின் போது இவ்வாறானதொரு பல்கலைக்கழகத்தை உருவாக்கும் தீர்மானம் எடுக்கப்பட்டு சுகாதாரத்துறைக்கு கௌரவம் வழங்கப்பட்டது. இதற்கான சர்வதேச அளவிலான அங்கீகாரத்துடன் சிறப்பான எதிர்காலத்தை நோக்கி பயணிக்கும் வாய்ப்பு தற்போது உருவாகியுள்ளது.

இங்கு உரையாற்றிய கொழும்பு பல்கலைக்கழகத்தின் வேந்தரும், அரசாங்க சேவை ஐக்கிய தாதியர் சங்கத்தின் தலைவருமான மேல் மாகாண தலைமை சங்கநாயக்கர் சங்கைக்குரிய முருத்தெட்டுவே ஆனந்த தேரர்,

ஒரு தாதியராக உங்களின் முதன்மைப் பணி, ஆதரவற்ற நோயாளிகளை முறையாகப் பராமரிப்பதாகும். குறைபாடுகளை நாங்கள் அறிவோம். நீங்கள் எப்போதும் கருணை, இரக்கம் மற்றும் அன்புணர்வுடன் இருக்க வேண்டும். ஆட்சேர்ப்பின்போது இவை அனைத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும். ஆட்சேர்ப்பு கொள்கையில் மீண்டும் கவனம் செலுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது. தாதியர், பொலிஸார் மற்றும் இராணுவத்திற்கு ஆட்சேர்ப்பு செய்வதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். எந்தவொரு அரசியல்வாதி அல்லது அதிகாரிகளிடமிருந்தும் கடிதங்களை ஏற்க வேண்டாம். முழுத் தகுதிகளோடு வருபவர்களே ஆட்சேர்ப்பு செய்யப்பட வேண்டியவர்கள். எதிர்காலத்தில் பாராளுமன்றத்திற்கு கூட பொருத்தமானவர்களை அனுப்புங்கள். ஒருபோதும் இப்படியான ஒரு குழப்பம் வரமாட்டாது.

பல ஆண்டுகளாக தாதியர் பட்டப்படிப்புக்கான வாய்ப்பினை கேட்டு வருகிறோம். கிடைக்கவில்லை. தடைகள் வந்தன. இன்று தாதியர் பல்கலைக்கழகத்தை ஆரம்பிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. எதிர்பார்க்கப்படுவது ஒழுக்கமான, கண்ணியமான தாதியர் சேவையாகும். தாதியரின் கண்ணியத்தைப் பேணுங்கள். கோரிக்கைகளுக்காக போராடுவதைப் போலவே உங்கள் கண்ணியத்தை பாதுகாத்துக்கொள்ளுங்கள்.

இதன்போது புளோரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையாருக்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், பிரதமர் தினேஷ் குணவர்தன தாதியர் பல்கலைக்கழகத்தினை நிறுவுவதற்கு ஆற்றிய பங்களிப்பையும், சங்கைக்குரிய முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தாதியர் சேவைக்காக ஆற்றிய பணிகளையும் பாராட்டி நினைவுப் பரிசுகளும் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் அமைச்சர் பந்துல குணவர்தன, தாய்லாந்து, மலேசியா மற்றும் இந்தோனேசிய தூதுவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களான ராஜித சேனாரத்ன, வஜிர அபேவர்தன, யதாமினி குணவர்தன, பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க, சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக சந்திரகுப்த மற்றும் தாதியர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு