ஆங்கிலேயர்கள் இந்த நாட்டிற்கு வரும் போதும் நாம் எல்லா வகையிலும் முன்னேற்றமடைந்த தேசமாக இருந்தோம்... - பிரதமர் தினேஷ் குணவர்தன

எம்மை ஆக்கிரமிக்கின்ற போதும் நாம் முன்னேற்றமடைந்த தேசமாக இருந்தோம்...

ஏகாதிபத்தியவாதிகளை தோல்வியுறச் செய்த முதல் தேசம் நாம்தான்... அது சீதாவக்கை மாயாதுன்னே மற்றும் ராஜசிங்க மன்னர்கள் எமக்கு ஈட்டித் தந்த பெருமை...

வரலாற்றில் அந்த வீரமிக்க பக்கங்கள் மறைக்கப்படுகிறது...

இதுவரை ஆராய்ச்சிக்குட்பபடாத சிதாவக்கை ஆராய்ச்சியாளர்களுக்கான புகலிடமாகும்.

இன்று (2024.07.21) இடம்பெற்ற சீதாவக்கை அருங்காட்சியகத்தை பொது மக்களிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

மத்திய கலாசார நிதியத்தின் 5 மில்லியன் ரூபா செலவில் கடற்படையினரின் உடலுழைப்பு பங்களிப்புடன் அவிசாவளை நகரில் புகையிரத திணைக்களத்திற்கு சொந்தமான கட்டிடத்தில் இந்த அருங்காட்சியகம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த பிரதமர்,

"இந்த அருங்காட்சியகம் கீர்த்திமிக்க வரலாற்றின் தகவல்களை எதிர்கால சந்ததியினருக்கு வழங்கும் இடமாகும். உலகையே ஆக்கிரமிக்கும் வல்லமை படைத்த மேலைநாட்டுப் படைகளை முறியடித்த மாயாதுன்னே மற்றும் சீதாவக்கை ராஜசிங்க மன்னர்கள் உலகையே நடுங்க வைத்த தலைவர்கள்.

உலகின் முதல் ஏகாதிபத்தியத்தை அடக்கிய பெருமை நமக்கு உண்டு. ஆங்கிலேயர்கள் இந்த நாட்டிற்கு வந்த போதும் நாம் எல்லா வகையிலும் முன்னேற்றமடைந்த நாடாகவே இருந்தோம். நமது பண்டைய மக்கள் உலக மக்களுடன் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர். இந்த இரண்டு வீரமிக்க அரச தலைவர்களும் நமது சுதந்திரத்திற்காக வெற்றிகரமாகப் போராடி தேசத்தை சுரண்ட முயற்சித்தவர்களின் முயற்சியை முறியடித்தார்கள். அவர்களது போர் வீரம் மட்டுமல்ல, மூலோபாயம் மற்றும் நிர்வாகத்திறன் பல்வேறு துறைகளில் பரவியிருந்த செயல்முறைகள் இன்னும் ஆய்வு செய்யப்படவில்லை. அன்று இவ்வளவு ஆழமான ஆய்வை செய்வதற்கான தேவை எங்களுக்கு இருக்கவில்லை.

சீதாவக்கை என்பது நமது நாட்டின் வரலாற்றில் நாம் பெருமை கொள்ளக்கூடிய காலகட்டங்களில் ஒன்று. அந்தப் பெருமையின் ஒரு பகுதிதான் இந்த அருங்காட்சியகம். சீதாவக்கை நகரசபை பெருமையின் இரத்தினங்களை சூடிக்கொண்டுள்ளது. இந்தப் பேராசிரியர்கள் உங்களுக்கு அந்த பெருமையை கொண்டுவந்து தந்துள்ளனர்.

அமைச்சர் பந்துல குணவர்தன

இன்று சீதாவக்கை நகருக்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாள். இதன் மூலம் நமது நாட்டின் நீண்ட பண்டைய வரலாற்றின் போக்கை முன்கொண்டுசெல்வதற்கு சீதாவக்கை இராஜதானி செய்த பணிகளை எதிர்கால தலைமுறை பிள்ளைகளுக்கும் ஆய்வுசெய்கின்றவர்களுக்கும் இத்தகைய அருங்காட்சியகத்தை நிறுவுவதற்கு பங்களித்த அனைவருக்கும் எங்கள் கௌரவத்தையையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறோம். போக்குவரத்து துறை அமைச்சர் என்ற முறையில், அருங்காட்சியகத்தை அமைப்பதற்கான இடத்தைக் கண்டறியும் விவகாரத்தில் பங்களிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இலங்கை அரசாங்கத்தின் புகையிரத திணைக்களத்திற்கு சொந்தமான இந்த புராதன கட்டிடம் மற்றும் காணியை கையகப்படுத்துவதற்கான அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டது. அதன்மூலம்தான் இந்த உன்னதப் பணிகளுக்கு இந்த நிலமும் கட்டிடமும் வழங்க முடிந்தது.

அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க

எமது செயல்களின் பெருமையை நாமே சொல்லிக் கொள்ளக் கூடாது. இது சிங்களவர்களின் பண்பல்ல. நாம் தவறு செய்த இடங்களை நினைவில் வைத்துக் கொண்டு, தவறிலிருந்து விடுபட முயற்சிப்பதுடன் சரியான பாதையில் செல்ல சரியானவற்றை செய்ய வேண்டும். நாம் அனைவரும் ஒன்றுபட்டு இந்த நாட்டை இங்கிருந்து முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும். டிஜிட்டல் யுகத்தை நோக்கிய பயணத்தில் நமது பாரம்பரியத்தை ஒதுக்கி விடக்கூடாது.

பாராளுமன்ற உறுப்பினர் யதாமினி குணவர்தன

சீதாவக்கை என்பது உலக வரலாற்றின் ஒவ்வொரு காலகட்டத்திலும் மிகவும் முன்னேறிய மனிதர்கள் வாழ்ந்த பிரதேசமாகும். களனிப் பள்ளத்தாக்கு, சீதாவக்கை ஹேவாகம் கோறளை மற்றும் அதனைச் சூழவுள்ள பிரதேசங்களின் வரலாற்றில் எந்தக் காலகட்டத்தைப் பார்த்தாலும், அக்காலகட்டத்தில் மிகவும் முன்னேறிய மனிதர்கள் இந்தப் பிரதேசத்தில் இருந்துதான் பயணித்தனர் என்பதை இந்தக் அருங்காட்சியகத்தை உருவாக்குவதன் மூலம் நாம் அனைவருக்கும் தெளிவுபடுத்த முடியும். வரலாற்றுக்கு முற்பட்ட காலமாக இருந்தாலும் சரி, பலாங்கொடை மனிதனிலிருந்து இன்று வரையிலான இராஜதானிகள் காலகட்டமாக இருந்தாலும் சரி, போர்த்துகீசியர், ஒல்லாந்தர் மற்றும் பிரித்தானிய காலனித்துவ ஏகாதிபத்தியங்களுக்கு எதிரான மாபெரும் போராட்டங்களாக இருந்தாலும் சரி, உலக வரலாற்றில் மிகவும் முன்னேறிய மனிதர்கள் பயணித்த பிரதேசத்தில் நாம் இன்று ஒன்று கூடியிருக்கிறோம்.

அதற்காக மாயாதுன்னே மன்னர் சார்பிலும் டிகிரி இளவரசர் சார்பிலும் விசேட நினைவு அஞ்சலி செலுத்தப்பட வேண்டும். அவ்விருவரும் அந்தத் தேசியப் போருக்காக அனைவரையும் ஒன்று திரட்டி, ஒரு பிரதேசத்தை ஆட்சிசெய்யும் நோக்கமோ, மகுடங்களைச் சூட்டிக்கொள்ளும் நோக்கமோ இல்லாமல் அதற்கு அப்பால் எதிர்காலத்தைப் பார்த்திராத ஒரு பிரிவினருக்குத் தலைமைத்துவத்தை வழங்கினர்.

அன்று முல்லேரியாவில் போர்த்துக்கேயரை கட்டுப்படுத்தியிருக்காவிட்டால் கோட்டையில் நிலப்போர் கடலில் முழு தெற்காசிய தீபகற்பமும் ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பே மேற்கத்திய காலனியாதிக்கத்திற்கு ஆளாகியிருக்கும். ஸ்பெயின் பாராளுமன்றத்தில் அருங்காட்சியகம் ஒன்று உள்ளது. தலா ஒன்றரை அடிக்கு எட்டு பக்கங்கள் கொண்ட கண்ணாடிப் பெட்டி. இது முழு தென் அமெரிக்க கண்டத்தின் வரலாற்றையும் கொண்டுள்ளது. மேற்கத்திய ஆக்கிரமிப்பாளர்கள் தென் அமெரிக்க கண்டத்தை தமது காலனித்துவத்தின் கீழ் கொண்டுவர 30 ஆண்டுகள் ஆனது.

அன்று கோட்டை வீழ்ந்தபோது, இந்நாட்டில் தொடர்ச்சியாகப் பேணப்பட்டுவந்த வரலாற்றுப் பண்பாட்டுப் பாரம்பரியத்தைப் பாதுகாத்து இன்றைக்கும் கொண்டுவரக்கூடிய மாற்றத்தை ஏற்படுத்தியது சீதாவக்கை. நம் காலத்திலும் அப்படித்தான் இருக்கிறது. இன்று நாம் எந்த அரசியல், கலாச்சார அல்லது பொருளாதார வீழ்ச்சியையும் கடந்து தேசத்தை ஒருங்கிணைத்து, பெருமைமிக்க சகாப்தத்தை உருவாக்க முடியும். அதுதான் எதிர்கால தலைமுறைக்கு இந்த அருங்காட்சியகத்தினால் வழங்கப்படும் செய்தி.

அந்த மாபெரும் வரலாற்றின் கதைகளை பாடசாலை மாணவர்களுக்காக இவ்வாறு சேகரித்து, பெருமைக்குரிய பயணத்தை நினைவூட்டி, முற்கால மனிதர்கள் முதல் இன்று வரை ஆற்றி வரும் தேசியப் பணிகளை நினைவூட்டுவதற்கு இன்று உருவாக்கப்பட்ட இந்த அருங்காட்சியகத்தினால் வழி ஏற்பட்டுள்ளது. இது கொழும்பு, கம்பஹா, கேகாலை, இரத்தினபுரி மாவட்டங்களின் எல்லை. அந்த மாவட்டங்களில் 200க்கும் மேற்பட்ட பாடசாலைகள் உள்ளன. எனது இளமைக் காலத்தில், அந்தப் பாடசாலைகளுக்குச் சென்று, சீதாவக்கையின் வரலாற்றைப் பற்றி சில சிந்தனைகளை வழங்க முடிந்தது. அந்தக் பிள்ளைகள் சீதாவக்கைக்கு வந்து தங்கள் பெருமைமிக்க வரலாற்றை சீதாவக்கை அருங்காட்சியகம் மூலம் பார்த்து ஆராய்ச்சியில் ஈடுபடுவார்கள் என்பது என் நம்பிக்கை.

மகாசங்கத்தினர், கிறிஸ்தவ இஸ்லாமிய இந்து சமயத் தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர் சுதத் மஞ்சுள, மத்திய கலாசார நிதியத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் காமினி ரணசிங்க, அமைச்சின் செயலாளர்கள், தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு