பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும் ஐரோப்பிய ஒன்றிய தூதுவர் கார்மென் மொரேனோவுக்கு (Carmen Moreno) இடையிலான சந்திப்பொன்று 2023.12.01 அன்று அலரி மாளிகையில் இடம்பெற்றது.

இலங்கையின் இக்கட்டான காலப்பகுதியில் ஐரோப்பிய ஒன்றியம் வழங்கிய பெறுமதியான ஆதரவிற்கு பிரதமர் இதன் போது நன்றி தெரிவித்தார்.

பல தசாப்தங்களாக ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இலங்கைக்கும் இடையில் இருந்துவரும் வலுவான உறவையும், GSP பிளஸ் வசதியின் மூலம் ஐரோப்பிய சந்தைக்கான இலங்கையின் ஏற்றுமதிகளுக்கு வழங்கப்பட்ட சலுகைகளையும் பிரதமர் நினைவு கூர்ந்தார்.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் சந்தைகளுக்கு நிறைவுப் பொருட்கள் மற்றும் விவசாயப் பொருட்களை ஏற்றுமதி செய்யும் வாய்ப்புகள் குறித்தும் பிரதமர் வலியுறுத்தினார்.

இலங்கையின் கல்வித்துறையின் அபிவிருத்திக்காக ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் பல்கலைக்கழகங்களுடனான ஒத்துழைப்பு குறித்தும் இந்த சந்திப்பில் கவனத்தில் கொள்ளப்பட்டதுடன், ஐரோப்பிய ஒன்றிய பல்கலைக்கழகங்களுடனான உறவுகளை மேம்படுத்துவதற்கு தூதுவர் தனது ஒத்துழைப்பை வெளிப்படுத்தினார்.

ஐரோப்பிய ஒன்றிய பூகோள மூலோபாயத்தின் மூலம் ஊக்குவிக்கப்படக்கூடிய உட்கட்டமைப்பு வசதிகளுக்கான அரச மற்றும் தனியார் முதலீடு, பசுமை எரிசக்தி,பேண்தகு அபிவிருத்திக்கான கல்வி, டிஜிட்டல் மயமாக்கல், சுகாதாரம், கல்வி மற்றும் ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கங்களுக்கான முதலீட்டு கடன்களைப் பெற்றுக்கொள்வதில் ஐரோப்பிய முதலீட்டு வங்கியுடன் ஏற்படுத்தக்கூடிய பங்காண்மை குறித்து இந்த சந்திப்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டது.

சுற்றுலாத்துறையில் உள்ள வாய்ப்புகளை வலியுறுத்திய தூதுவர், இந்த விடயத்தில் இலங்கைக்கு ஆதரவளிக்க ஐரோப்பிய ஒன்றியம் அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் குழுவின் பிரதித் தலைவர் லாஸ் பிரிடல், பாராளுமன்ற உறுப்பினர் யதாமினி குணவர்தன, மேலதிக செயலாளர் மஹிந்த குணரத்ன, பிரதமரின் ஆலோசகர் சுசிறிபால தென்னகோன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு