நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் சிறந்த மீன் வளத்தைப்பெற சீனா உதவி...

நாட்டின் கடற்றொழில் துறையில் சாத்தியமான முதலீடுகள் குறித்து கலந்துரையாடுவதற்காக சீன தொழிற்துறையினர் குழு ஒன்று பிரதமர் தினேஷ் குணவர்தனவை நேற்று (06) பாராளுமன்றத்தில் சந்தித்தது.

மீன் பதப்படுத்துதல் மற்றும் ஏற்றுமதி முதலீடுகளில் சீனாவுக்கு மட்டுமின்றி ஐரோப்பா, வட அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாட்டு சந்தைகளுக்கும் அதிக வாய்ப்புகள் இருப்பதாக பிரதமர் கூறினார்.

இந்த தூதுக்குழுவிற்கு தலைமை தாங்கிய Fujian மாகாணத்தின் நீர் உற்பத்திப் பொருட்கள் மொத்த தொழிற்துறை சங்கத்தின் தலைவர் Yushu Huang, சீனாவில் மீன் உற்பத்திப் பொருட்களை ஏற்றுமதி செய்வதில் தமது சங்கம் முன்னணியில் உள்ளதாகவும், நாட்டின் கடலோர துறைமுகமொன்றிற்கு அருகில் மீன் பொருட்கள் பதப்படுத்துதல் மற்றும் ஏற்றுமதி செய்வதற்கான பெரிய மீன் பதப்படுத்தும் தொழிற்சாலையை நிறுவும் திறன் உள்ளது என்றும் குறிப்பிட்டார்.

சீன முதலீட்டாளர்கள் மீன்பிடிக்க நவீன பல நாள் மீன்பிடி கப்பல்களையும், மீன் பதப்படுத்துதலுக்கு நவீன தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தி வருவதாக சங்கத்தின் செயலாளர் Huang Jincheng குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் பியால் நிஷாந்த, மீன் பதப்படுத்தும் தொழிற்சாலையை அமைப்பதற்கு சீன கைத்தொழில்துறையினருக்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்படும் என தெரிவித்தார்.

இலங்கையில் சிறிய மீன்பிடி துறைமுகங்களை அபிவிருத்தி செய்யும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்திற்கு ஆதரவளிக்குமாறு புஜியான் மாகாணத்தின் நீர்வாழ் உற்பத்திப் பொருட்கள் மொத்தக் கைத்தொழில் துறை சங்கத்திடம் பிரதமர் கேட்டுக்கொண்டதுடன், சீன தூதுக் குழுவும் இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்டது.

இக்கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர் அனுராத ஜயரத்ன, Wuxi Kaushi Foods நிறுவனத்தின் Zubu Huang, Beijing கேட்டரிங் முகாமைத்துவத்தின் Xinxing Huang மற்றும் Ocean Times International நிறுவனத்தின் Dongsheng Chen ஆகியோரும் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு