இந்த தேர்தலில் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லக்கூடிய பலமான சக்தி கட்டியெழுப்பப்படும்... மஹஜன எக்சத் பெரமுனவின் தலைவர் பிரதமர் தினேஷ் குணவர்தன

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி இந்த அரசாங்கத்தில் மிகவும் சக்திவாய்ந்த பங்குதாரர் ஆகும்..

இந்த நாட்டில் எப்பொழுதும் கூட்டணி அரசாங்கங்களே இருந்துவந்துள்ளன...

“நாட்டின் எதிர்காலமும் எமது பொறுப்பும்” என்ற தலைப்பில் 17.06.2024 அன்று மஹஜன எக்சத் பெரமுனவின் (மக்கள் ஐக்கிய முன்னணி) கம்பஹா மாவட்ட சபையின் ஏற்பாட்டில் கிரில்லவில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டார்.

இங்கு மேலும் உரையாற்றிய பிரதமர்-

"எங்கள் நாட்டில் சில முக்கியமான தருணங்களை நாங்கள் கடந்து, எதிர்காலத்தை வலுவாக வெற்றிகொள்ள முடியும் என்ற நம்பிக்கையை உருவாக்கியிருக்கும் ஒரு சந்தர்ப்பத்திலேயே நாங்கள் இங்கு ஒன்றுகூடியிருக்கிறோம். பல்வேறு பொருளாதார மாதிரிகளை உருவாக்கிய உலக நாடுகள், உலகம் முழுவதும் எந்தப் பொருளாதாரமும் நிலையானதாக இல்லை என்பதை நிரூபித்துள்ளன. அறிவியலின் முன்னேற்றம், ஆராய்ச்சியின் முன்னேற்றம் மற்றும் பகிரங்கமாகவும் மற்றும் மறைமுகமாகவும் உலகில் அதிகார சமநிலைக்கு இடையில் ஏற்பட்டு வரும் போராட்டங்கள் இதில் தாக்கம் செலுத்துகின்றன. ஒவ்வொரு முகாமும் உலகில் புதிய விடயங்களைத் தேடுவதன் மூலம் புதிய ஒன்றை உருவாக்குவதற்காக செயற்பட்டுள்ளன.

அரசாங்கத்தையும் அரசாங்கத்தின் ஊடாக நிறுவப்பட்டுள்ள நிறுவனங்களையும் விரைவாக மாற்றியமைக்கும் இலக்குகளை நோக்கி நாம் நகர்கிறோம். தற்போதைய நிலைமைகளை மாற்றியமைத்து அந்த இலக்குகளை நோக்கிச் செல்வதற்கு அரசாங்கத்திற்கு உறுதியுடன் நகரக்கூடிய மக்களின் பலம் தேவை. குறிப்பாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இந்த அரசாங்கத்தில் மிகவும் சக்திவாய்ந்த பங்குதாரர் ஆகும். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் குழுவே எமது பாராளுமன்றத்தில் பலம்வாய்ந்த பங்குதாரராக விளங்குகின்றது. பலமானதொரு பாராளுமன்றத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் எமது உறுப்பினர் குழு, சகோதர கட்சிகள், மஹஜன எக்சத் பெரமுன, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி உள்ளிட்ட அரசாங்கத்திற்குள் இருக்கும் அனைத்துக் கட்சிகளின் ஒற்றுமையினால் கடந்த இரண்டு வருடங்களில் இந்த நாட்டை மீளக் கட்டியெழுப்பக்கூடிய ஒரு நிலைக்கு எம்மால் கொண்டு வர முடிந்தது.

இந்த நாட்டில் எப்போதும் கூட்டணி ஆட்சிதான் இருந்துவந்துள்ளது. மீண்டும் புதிய ஒன்று என்று நினைக்க வேண்டாம். எமது நாட்டில், ஒரு நிலையான மக்கள் தீர்மானம் அறிவிக்கப்பட்ட சந்தர்ப்பத்தைத் தவிர, மற்ற அனைத்து அரசியல் முன்னணிகள், அரசியல் கூட்டணிகள் பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் சமூகத்திற்கு வெளியேயும் உள்ளன. புதிய சக்திகள் உருவாகின்றன. புதிய தேவைகளைச் சுற்றி ஒன்று திரண்டவர்கள் தங்கள் கோரிக்கைகளை முன்வைத்து மேலெழுகின்றனர். அவை அரசியல் கட்சிகளாக இல்லாவிட்டாலும், சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய சக்திகளாக கலந்துரையாடலுக்கு உள்ளாவது ஜனநாயக சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கு இன்றியமையாததாகும்.

கல்வி மற்றும் கல்வி நிறுவனங்களுக்குப் பின்னர் தொழில் பயிற்சியுடன், உலக சந்தையில் தேவை உள்ள துறைகளுக்கான சிறப்புப் பயிற்சியை இளைஞர்கள் பெறுவதற்கான புதிய திட்டம் நாட்டுக்குத் தேவை. இளைஞர்களே நமது எதிர்காலம். அவர்களின் திறமைகளுக்கு மதிப்பளிக்கும் ஒரு திட்டத்தை நாங்கள் ஒன்றாகச் செயற்படுத்த எதிர்பார்க்கிறோம்.

சமூக அபிவிருத்திக்கு பல்வேறு மாதிரிகளைப் பயன்படுத்துவதற்கான விருப்பத்தின்படி, அடையாளத்தைப் பாதுகாப்பது எப்போதும் அரசியல் துறையில் ஒரு விவாதமாக மாறும். ஒரு மாதிரியில் மேற்கொள்ளக்கூடிய செயல்களை விட, நாம் சுதேச பண்புகளை அடிப்படையாகக் கொண்ட நமது மாதிரியை நாமே தயார் செய்ய வேண்டிய காலகட்டத்திற்கு நாம் வந்துவிட்டோம். நமது பொருளாதார வளர்ச்சிக்கு, நமது பொருளாதார வளர்ச்சி என்பது ஒரு பொருளாதார ஜாம்பவானாக மாறுவதற்கு அல்ல, மாறாக பொருளாதார ரீதியாக வலுவடைவதற்கானதாகும்.

தற்போதைய அரசாங்கம் எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடி முன்னெப்போதையும் விட கடினமானது. வெளிநாட்டுக் கடனில் நாம் எப்போதும் இல்லாத உச்சத்தில் இருக்கிறோம். வெளிநாட்டு தனியார் கடன் வழங்குனர்களும் இலங்கைக்கு கடன் வழங்கியுள்ளனர். சர்வதேச கடன் சந்தையில் கடன் பத்திரங்களை வாங்கினால், சில காலம் கழித்து அவற்றை செலுத்த வேண்டும்.

இலங்கையின் அந்நியச் செலாவணி தேயிலை, தென்னை, இரப்பர் போன்றவற்றிலிருந்து மட்டும் வளர்ச்சியடையாது. ஆடைத் தொழிற்துறையானது அதன் மூலப்பொருட்களில் தொண்ணூறு சதவீதத்தை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறது. ஆனால் எமது திறமையின் பலத்தின் அடிப்படையில் உபரியான அந்நியச் செலாவணியை ஈட்ட முடியும் என்பதை இலங்கை உலக சந்தையில் நிரூபித்தது. பல்வேறு துறைகளில் புதிய கதவுகளைத் திறந்தால், நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதத்தை வலுவாகவும் வேகமாகவும் மாற்ற முடியும். பொருளாதார வளர்ச்சி வீதத்தைப் போன்று இந்த நாட்டின் பொருளாதாரம் வலுவாக இருக்கும் போது, நமது நாட்டின் குறைந்த வருமானம் பெறும் மக்கள், அவர்களின் சிரமங்களில் இருந்து மீள்வதற்கு வழிகளும், நிவாரணங்களும் வழங்கப்பட வேண்டும். மக்கள்தொகையில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் வறுமையால் வாடும்போது அது வெற்றியல்ல. வறுமையில் வாடும் மக்களுக்கு அதிக வாய்ப்புகளையும் நிவாரணங்களையும் வழங்க அரசு கடமைப்பட்டுள்ளது. ஒரு அரசாங்கம் என்ற வகையில், இன்று எமது பொருளாதார கட்டமைப்பில் இலக்குமயப்பட்ட பொருளாதார அபிவிருத்தியில் ஈடுபடுவதற்கான எமது விருப்பத்தை நாங்கள் மிகவும் திட்டமிட்டு அறிவித்துள்ளோம். மக்களுக்கு பல சிரமங்கள் உள்ளன. அதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். இன்று பொருளாதாரத்தை நெகிழ்வுறச் செய்து அபிவிருத்தி அடையும் நிலையை அடைந்துள்ளோம். இன்று எமது நாடு சர்வதேச ரீதியாக கொடுக்கல்வாங்கல்களை மேற்கொள்ள முடியுமான ஒரு நாடு என்பதை சர்வதேச சமூகம் ஏற்றுக்கொண்டுள்ளது. இரண்டு வருடங்களுக்கு முன்னர் எமது நாட்டுடன் கொடுக்கல்வாங்கல்களை மேற்கொள்ளக் கூடிய நிலையில் இருப்பதாக சர்வதேச சமூகம் ஏற்றுக்கொண்டிருக்கவில்லை. இது நாம் எதிர்கொண்ட ஒரு பாரதூரமான பிரச்சனை. ஆரம்ப கட்டங்களை வெற்றிகொண்டு முன்னேறுவதற்கான செயற்பாடுகள் முக்கியமானதாகும்.

நாம் ஒரு தேர்தல் ஆண்டை எதிர்கொள்கிறோம். இந்தத் தேர்தலில் நாம் கட்டியெழுப்பிய பலத்தின் அடிப்படையில், எமது நாட்டை முன்னோக்கி நகர்த்துவதற்கு சாத்தியமான பலமான சக்தியை உருவாக்குவோம் என நம்புகின்றோம். நாட்டின் எதிர்காலத்திற்காக, நாட்டு மக்களின் எதிர்கால பாதுகாப்பிற்காக, தாய்நாட்டின் சுதந்திரத்திற்காக, பொருளாதார வளர்ச்சியை உருவாக்கி நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல ஒரு வலுவான சக்தி தேவை.

இங்கு உரையாற்றிய மஹஜன எக்சத் பெரமுனவின் பிரதித் தலைவர் இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி –

எமது நாட்டின் இறைமைக்காக முன்னோக்கிச் சென்று, நாட்டின் சுதந்திரத்திற்காக பாரிய தியாகங்களைச் செய்த பல தேசிய மாவீரர்களின் பாரம்பரியம் எமது தாய்நாட்டிற்கு உண்டு. அவர்களின் வியர்வையும் கண்ணீரும் நம் நாட்டை தன்னிறைவு அடையச் செய்தது. 71/88/89 பல்வேறு கலவரங்கள், எண்பத்தி மூன்றில் ஜூலை கலவரம், 1994 இல் சுனாமி அச்சுறுத்தல் போன்ற பல்வேறு சிரமங்களை நாம் சந்தித்தோம். பல்வேறு சவால்கள் மற்றும் பல்வேறு சிரமங்கள் இருந்தன. முப்பது வருடங்களாக ஒரு பெரும் போருக்கு முகம்கொடுத்திருந்தோம். நமது நாட்டின் புதிய தலைமுறையினர் போர் நடந்ததை மறந்துவிட்டனர். மகிந்த ராஜபக்ச அதற்கு சிறந்த தலைமைத்துவத்தை வழங்கினார். தினேஸ் குணவர்தன உள்ளிட்ட எமது தலைவர்கள் எமது நாட்டின் போர்வீரர்கள் தாய்நாட்டின் ஒற்றுமைக்காக பாரிய தியாகங்களை செய்தனர். நாட்டைப் பாதுகாத்தனர். சுதந்திரம் அடைந்த எழுபது வருட காலப்பகுதியில் அனைத்தையும் வென்ற தேசம்.

கடந்த காலத்தில், நமது பொருளாதாரம் வீழ்ச்சியடையத் தொடங்கியது. சுற்றுலாத் துறை உள்ளிட்ட துறைகள் பல சவால்களை எதிர்கொண்டன. கோவிட் தொற்றுநோயை எதிர்கொண்ட நம் நாட்டில் பலர் பசியுடன் இருந்தாலும் பரவாயில்லை, பொருளாதாரம் அழிவுற்றாலும் பரவாயில்லை உயிர்களைக் காப்பாற்றுங்கள் என்று கூறினார்கள். நீண்ட காலத்துக்கு நாடு மூடப்படுமாயின் அது நிலைத்திருக்க முடியாத பொருளாதார வீழ்ச்சியாக அமையும் என ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார். வெளிநாடுகளில் இருந்து ஊழியர்கள் இலங்கைக்கு வர முயன்றனர். அன்றைய வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தலைமையிலான அரசாங்கம் மூன்று மாதங்களுக்குள் 100,000 இற்கும் அதிகமான மக்களை இலங்கைக்கு அழைத்து வருவதற்கு நடவடிக்கை எடுத்தது. சுற்றுலாத் துறை வருவாயை இழந்தது. இங்குதான் டொலர் பற்றாக்குறை பொருளாதார வீழ்ச்சி உருவானது.

இன்று பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் மற்றும் மருத்துவமனைகளின் தொழிற்சங்க போராட்டங்கள் ஏற்பட்டுள்ளது. தொழிற்சங்கங்களுக்குள் ஒரே அரசியல் குழுக்களுக்கிடையில் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. ஒரு நாட்டின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு, பொதுமக்களிடையே ஐக்கியம் அவசியம். உலகில் எவரும் தனிமைப்பட்டு செயற்பட முடியாது. குறைபாடுகள் இருந்தபோதிலும், முழு வெற்றியையும் இலக்காகக் கொண்டு இலக்குகளை நோக்கிச் செல்ல வேண்டும். இது மிகவும் இயற்கையானது. ஒரு நாடாக நாம் எதிர்கொள்ளும் சவால்களைத் தீர்க்க இன்னும் செயற்திறமாகவும் புத்திசாலித்தனமாகவும் செயற்பட வேண்டிய காலகட்டத்தில் நாம் இருக்கிறோம்.

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இந்த நாட்களில் பல்வேறு யோசனைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. பல்வேறு ஜனாதிபதி வேட்பாளர்கள் களத்தில் இறங்கி வருகின்றனர். ஜனாதிபதி வேட்பாளர்கள் யாராக இருந்தாலும், இந்த நாட்டின் ஒட்டுமொத்த மக்களும் ஒன்றையே தீர்மானித்துள்ளனர். அரசியலமைப்புச் சட்டத்தின் பிரகாரம் எமக்கு வழங்கப்பட்டிருக்கும் ஒருமைப்பாட்டைக் கெடுக்கும் எந்த சக்திக்கும் இடமளிக்கப் போவதில்லை. ஒரு அரசியல் இயக்கமாக அதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். எமது நாட்டின் ஐக்கியத்தையும் புத்தசாசனத்தின் இடத்தையும் சிங்கள, தமிழ், முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளையும் பாதுகாப்பதற்காக பயணிக்க வேண்டும்.

இந்த நிகழ்வில் சங்கைக்குரிய அமுனுகம நந்த தேரர் உள்ளிட்ட மகாசங்கத்தினர், மக்கள் ஐக்கிய முன்னணியின் பிரதி செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் யதாமினி குணவர்தன, பாராளுமன்ற உறுப்பினர் சஹான் பிரதீப், மக்கள் ஐக்கிய முன்னணியின் மத்திய குழு உறுப்பினர் பேராசிரியர் நந்த தர்மரத்ன, மக்கள் பிரதிநிதிகள், கட்சி உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு