வெசாக் நோன்மதி தினச் செய்தி

வெசாக் நோன்மதி தினமானது அனைத்து பௌத்தர்களுக்கும் மிகவும் புனிதமான நாளாகும். வரலாறு நெடுகிலும் பௌத்த மதத்திலிருந்து நாம் பெற்ற ஒழுக்க விழுமியங்கள் தேசிய மற்றும் மத நல்லிணக்கத்தை மேம்படுத்துவதில் பெரும் பங்கு வகித்ததுடன், உலகின் முன் பெருமையுடன் எழுந்து நிற்கவும் எமக்கு உதவியது.

உலகின் இயல்பைப் சிறப்பாகப் புரிந்துகொள்ள உதவும் பௌத்தத்தின் வழியை இன்று முழு உலகமும் பின்பற்றுவதற்கான தேவை எழுந்துள்ளது. பௌத்த விழுமியங்களைச் தேடிச் செல்லும் நாடுகள் அதற்காக பௌத்த நாடுகளை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கின்றன. உலக வாழ்வொழுங்கில் மனித வாழ்க்கை முறை வீழ்ச்சி கண்டு வரும் சூழலில், அவர்கள் பௌத்த மதத்தின் விழுமியங்களைத் தேடுகிறார்கள்.

பௌத்த மதம் காட்டும் முறையான முகாமைத்துவமானது இன்று நாம் எதிர்நோக்கும் நெருக்கடி நிலையைத் தணிப்பதற்கு பெரிதும் உதவும்.

"ஏகேன போகே புஞ்ஜ்யேய - த்விஹி கம்மன் பயோஜயே
சதுத்தங்ஞ்ச நிதாபெய்ய – ஆபதாசு பவிஸ்ஸதி”

தான் நேர்மையாகச் சம்பாதித்த செல்வத்தில் காற்பகுதியைத் தன் தினசரிச் செலவுக்கு வைத்துக் கொள்ள வேண்டுமென்றும், அரைவாசியைத் தொழிலில் முதலீடு செய்ய வேண்டுமென்றும், அவசர காலச் செலவுக்காகக் காற்பங்கைச் சேமித்து வைத்துக் கொள்ள வேண்டுமென்றும் புத்த பெருமான் கூறுகிறார்.
சமூக நன்நெறிகளைக் கருத்திற்கொள்ளாது மனிதாபிமானமற்ற சில சம்பவங்கள் பதிவாகும் இன்றைய சூழலில், உன்னதமான பெளத்த தத்துவத்தின் வழியே உண்மையான மகிழ்ச்சிக்கு வழிவகுக்கும் அன்பு (மெத்தா), காருண்யம் (கருணா), மகிழ்ச்சி (முதிதா), பற்றின்மை (உபேக்ஷா) என்ற நான்கு தூண்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு சமூகத்தில் நாம் செயற்படுகிறோம்.

அனைத்து உயிரினங்களும் துன்பங்கள் நீங்கி, ஆரோக்கியமும், அமைதியும் பெற்றிட எனது பிரார்த்தனைகள் !

தினேஷ் குணவர்தன
பிரதமர்
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு

Download Release