கிராம உத்தியோகத்தர்களின் 3000 வெற்றிடங்களுக்கான ஆட்சேர்ப்பு துரிதப்படுத்தப்படும்... - பிரதமர் தினேஷ் குணவர்தன.

புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வத்தளை பிரதேச செயலகம் 2023.12.17 அன்று பிரதமர் தினேஷ் குணவர்தனவினால் பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டது. இதுவரை காலமும் தற்காலிக இடத்தில் இயங்கி வந்த வத்தளை பிரதேச செயலகத்தை சிறந்த வசதிகளுடன் கூடிய புதிய கட்டிடத்திற்கு மாற்றுவதற்கு பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தேவையான நடவடிக்கைகளை எடுத்திருந்தது.

அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர்-

கடினமான காலகட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கும், நம்பிக்கையான எதிர்காலத்தை உருவாக்குவதற்கும் நாம் தயாராகி வரும் காலம் இது. இந்த விடயத்தில் அனைத்து அரச நிறுவனங்களுக்கும் பெரும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இன்று மக்களிடம் கையளிக்கப்பட்ட பிரதேச செயலக கட்டிடத்தை நிர்மாணிப்பதற்கு அரசாங்கம் பாரிய செலவை சுமக்க வேண்டியிருந்தது.

இப்போதிருந்து, செலவழிக்கப்பட்ட பணத்திற்கு அதிகபட்ச விளைவை கொண்டுவருவதுதான் அதிகாரிகள் குழுவின் பொறுப்பாக இருக்க வேண்டும். இத்தருணத்தில் இருந்து பிரதேச செயலாளர் முதல் பட்டதாரி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் வரை அனைவரும் இதற்காக ஒன்றுபட்டு செயற்பட வேண்டும்.

அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவைக்கு சுமார் 50000 பேர் சேர்த்துக் கொள்ளப்பட்டு 3 வருடங்களாகவுள்ள நிலையிலும் கூட இன்னும் ஆயிரக்கணக்கான வீடுகளிலிருந்து பிரதேச ரீதியாக வரிப்பணம் சேகரிக்கப்படாத நிலை உள்ளது. நாம் புதிதாகச் சிந்தித்துப் புதிய வழியில் செயல்பட்டிருந்தால், இவ்வளவு உத்தியோகத்தர்களை வைத்துக் கொண்டு இதனை சாத்தியப்படுத்தியிருக்க முடியும். எமது பொருளாதாரத்தை ஒரு சிறந்த இடத்திற்கு கொண்டு செல்வதற்கு, கிராம உத்தியோகத்தர் மட்டத்தில் இருந்து பிரதேச செயலாளர் வரையிலான பொறிமுறையானது பெரும் பங்காற்ற முடியும்.

நாட்டின் பொருளாதார சூழ்நிலையில், அரச சேவையில் உள்ள வெற்றிடங்களை நிரப்புவதை அரசாங்கம் மட்டுப்படுத்த வேண்டியிருந்தது. இதன் காரணமாக, கிராமத்தில் பொது சேவையை கொண்டுசெல்லும் முக்கிய நபர்களான கிராம உத்தியோகத்தர்களின் சுமார் 3000 வெற்றிடங்கள் தற்போது உள்ளன. இவர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான பரீட்சைகள் நடத்தப்பட்டு, இப்போது ஆட்சேர்ப்பு செய்வதற்காக எதிர்பார்த்துள்ளோம். இதன்மூலம் தற்போதுள்ள அசௌகரியங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து மிகவும் சிறந்த பொது சேவையை வழங்க எதிர்பார்க்கிறோம்.

இந்நிகழ்வில் அமைச்சர்களான ஹரீன் பெர்னாண்டோ, நலின் பெர்னாண்டோ, பாராளுமன்ற உறுப்பினர் சஹன் பிரதீப், பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் ரஞ்சித் அசோக ஆகியோர் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு