உள்ளூராட்சி நிறுவனங்களின் தற்காலிக ஊழியர்கள் அனைவரும் கடந்த வெள்ளிக்கிழமை முதல் நிரந்தர ஊழியர்கள்... - பிரதமர் தினேஷ் குணவர்தன

குருநாகல் மாவட்ட செயலகத்தில் 2024.06.15 அன்று நடைபெற்ற முட்டை அடைகாப்பு இயந்திரங்கள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

சீன அரசாங்கத்திடமிருந்து கிடைக்கப்பெற்றுள்ள இந்த இயந்திரங்களில் ஒரு இயந்திரத்தின் மூலம் பல குடும்பங்களுக்கு நேரடி வருமானத்தையும், அந்தக் கிராமங்களைச் சுற்றியுள்ள பல குடும்பங்களுக்கு மறைமுகமான பலன்களையும் திறக்கும். இந்த திட்டத்தின் நோக்கம் வருமானத்தை மேம்படுத்துதல், குடும்பங்களின் போசாக்கினை மேம்படுத்துதல், நாட்டில் பொதுவான முட்டை உற்பத்தியை மேம்படுத்துதல் மற்றும் வீட்டு மட்டத்தில் தன்னிறைவு பெற்ற வீட்டுத் தோட்டத்தை உருவாக்குதல் ஆகும்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த பிரதமர்

தீவிர நெருக்கடியில் இருந்து நம் நாட்டின் பொருளாதாரம் மெல்ல மெல்ல மீண்டு வருகிறது.இருப்பினும் இன்னும் பல கடுமையான சவால்களை சந்திக்க வேண்டியுள்ளது.அவற்றில் குறைந்த வருமானம் பெறும் மக்களின் சிரமங்களை புரிந்து கொண்டு அவர்களை பலப்படுத்த வேண்டும். அவர்கள் போசனை உணவை அனுபவிக்கும் வகையில் இந்தத் திட்டத்தை உருவாக்க அரசு விரும்புகிறது, மேலும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் வருமானத்தை படிப்படியாக அதிகரிப்பதே இதன் நோக்கமாகும்.

கோழி வளர்ப்பை கிராமப்புற குடிசைத் தொழிலாக விரிவுபடுத்துவது மிகவும் அவசியம். கிராமிய குடும்பங்களுக்கு முறையான பயிற்சியளிப்பதன் மூலம் இந்தத் தொழிலை பேண முடியும்.

நாடு முழுவதும் பல்வேறு கட்டுக்கதைகள் பரவி வருகின்றன. அவை வெறும் பொய்கள். சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து ஒரு பைசா கூட கிடைக்காது என்று கடந்த காலங்களில் கூறப்பட்டு வந்தது. இன்றைய நிலவரப்படி, ஒப்பந்தத்தின்படி அந்த நிதி உதவியை சர்வதேச நாணய நிதியம் வழங்கியுள்ளது. தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் இருந்து தலை நிமிர பணம் பெற வேண்டும். இதன் மூலம் பொருளாதார வளர்ச்சி மற்றும் அன்னியச் செலாவணியை உருவாக்கும் பொருளாதார வளர்ச்சி நடவடிக்கைகளை மேற்கொண்டு மக்களின் முன்னேற்றத்திற்கு வழியமைப்பது அவசியம்.

எனவே, தொலைதூர கிராமங்களின் அபிவிருத்தி மற்றும் வருமான மூலங்களை பெருக்கும் சூழல் ஏற்படுத்தப்பட வேண்டும். அந்த இலக்கை நோக்கி நாம் பயணிக்கிறோம்.

சிரமங்களுக்கு மத்தியில் அரச ஊழியர்களுக்கு வழங்கப்படக்கூடிய கொடுப்பனவுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. அடுத்த வரவுசெலவுத்திட்டத்தில், அரச ஊழியர்கள் மற்றும் பல்வேறு துறை ஊழியர்களின் நம்பிக்கையை மேலும் அதிகரிக்க வழி செய்யப்படும். மேலும் நீங்கள் எதிர்பார்த்திருந்த இன்னொரு விடயத்தை நிறைவேற்றிய நிலையிலேயே நாம் வந்துள்ளோம். அது தான் அனைத்து உள்ளூராட்சி நிறுவனங்களின் தற்காலிக ஊழியர்களும் கடந்த வெள்ளிக்கிழமை முதல் நிரந்தர ஊழியர்களாக்கப்பட்டுள்ளனர்”

இந்த நிகழ்வில், வடமேல் மாகாண ஆளுநர் நசீர் அஹமட், இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார, பாராளுமன்ற உறுப்பினர்களான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, சமன்பிரிய ஹேரத், சுமித் உடுகும்புர, பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன, குருநாகல் மாவட்ட ஆளுநர் ஆர். எம்.ஆர் ரத்நாயக்க மற்றும் அரச அதிகாரிகள், பயனாளிகள் மற்றும் பலரும் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு