சைமோல் மன்றத்தின் திட்டங்கள் கிராமிய அபிவிருத்திக்கு முக்கியமானவை... - பிரதமர் தினேஷ் குணவர்தன

சபரகமுவ மாகாணத்தில் இரண்டு முன்னோடித் திட்டங்களை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தியதன் பின்னர், கிராமிய உட்கட்டமைப்பு மற்றும் வாழ்வாதார அபிவிருத்தித் திட்டங்களை பரவலாக விரிவுபடுத்தி வருவதையிட்டு கொரியாவின் சைமோல் மன்றத்திற்கு பிரதமர் தினேஷ் குணவர்தன நன்றி தெரிவித்தார். "இந்த முயற்சிகள் கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான எமது கிராம மக்களின் பயணத்தை துரிதப்படுத்த உதவியுள்ளன," என்றும் பிரதமர் தெரிவித்தார்.

சைமோல் மன்றத்தின் தலைவர் லீ சியுங் ஜாங்(Lee Seung Jong), கியோங் சாங்பக்டோ மாகாண ஆளுநர், கொரியா உதவி நிறுவனத்தின் தலைவரும் கியாம்புக் கலை மற்றும் கலாசார மன்றத்தின் தலைவருமான கோ யாம் சோல் மற்றும் அம்மன்றத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் குழுவினர் இன்று அலரி மாளிகையில் பிரதமரை சந்தித்தனர்.

இலங்கையில் சைமோல் மன்றத்தின் திட்டங்களை விரிவுபடுத்துவதற்காக அம்மன்றத்திற்கும் பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டது. கோ யம் சோல் மற்றும் அமைச்சின் செயலாளர் கே. டி. என். ரஞ்சித் அசோக, வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அஜித் அபேசேகர ஆகியோரினால் அலரி மாளிகையில் பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் சைமோல் மன்றத்தின் தலைவர் லீ சுங் ஜோங் முன்னிலையில் இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது.

கொரியாவை அபிவிருத்தியடைந்த நாடாக மாற்றுவதற்கு Saemaul Undong புதிய கிராமிய இயக்கம் ஆற்றி வரும் பெரும் பணிகளைப் பாராட்டிய பிரதமர், இலங்கையின் கிராமிய அபிவிருத்தித் திட்டங்களுக்கு அந்த அனுபவங்களைப் பயன்படுத்த முடியும் என்றும் தெரிவித்தார்.

Saemaul Undong மீதான உலகளாவிய ஆர்வம் மற்றும் வெளிநாட்டு அபிவிருத்தி உதவிகளை வழங்குவதில் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கு கிராமிய அபிவிருத்தி உதவிகளை வழங்குவதில் கொரிய அரசாங்கத்தின் ஆர்வம் ஆகியவற்றின் அடிப்படையில், இலங்கைக்கு அதன் ஆதரவை விரிவுபடுத்தியுள்ளதாக சைமோல் தலைவர் இதன்போது தெரிவித்தார்.

இந்த திட்டங்களுடன் மேலும் சைமோல் திட்டங்கள் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படுவதுடன், இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி திட்டத்திற்கு ஊக்கியாக கிராமிய சமூகங்களை மேம்படுத்துவது மற்றும் எதிர்கால திட்டங்களுக்கு ஒத்துழைப்பை வழங்குவது குறித்தும் அவர் கருத்துத் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க, பதில் கொரிய தூதுவர் ஜங் சோன்யீ (Jung Sohnyee) மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.