ஸ்லேவ் ஐலண்ட் என்ற பெயரை மீண்டும் கொம்பனி வீதி என்று மாற்றியமைக்காக மலாய் சங்கம் பிரதமருக்கு நன்றி தெரிவிப்பு

ஸ்லேவ் ஐலண்ட் (Slave Island)என்ற ஆங்கிலப் பெயரை மீண்டும் கொம்பனி வீதி என்று மாற்றியமைக்காக இலங்கை மலாய் சங்கம் (SLMA) பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கு நன்றி தெரிவித்துள்ளது. கொம்பனி வீதி என்ற பெயர் சிங்களத்திலும் தமிழிலும் பயன்படுத்தப்படும் அதேவேளை ஆங்கிலத்தில் ஸ்லேவ் ஐலண்ட் (Slave Island) என்று அழைக்கப்பட்டு வந்த நிலையில் அதனையும் கொம்பனி வீதி என்று மாற்ற பிரதமர் நடவடிக்கை எடுத்தார்.

இலங்கை மலாய் சங்கத்தின் தலைவர் றிஸ்வான் பதுர்தீன் மற்றும் பொதுச் செயலாளர் இக்ராம் குட்டிலான் ஆகியோர் இன்று அலரி மாளிகையில் பிரதமரை சந்தித்து மலாய் சங்கம் முன்னெடுத்துவரும் சமூக மற்றும் கலாசார செயற்பாடுகள் குறித்து விளக்கினர்.

100வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் இலங்கை மலாய் சங்கத்துக்கு பிரதமர் வாழ்த்துத் தெரிவித்தார். மலாய் சங்கம் தாபிக்கப்படுவதற்கும் முன்னதாக அமைக்கப்பட்ட இலங்கை மலாய் கிரிக்கெட் கழகம் இந்த ஆண்டு அதன் 150வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுவதாக மலாய் சங்கத்தின் தலைவர் பதூர்தீன் கூறினார்.

பயங்கரவாதத்திற்கு எதிரான போரின் போது ஆயுதப் படைகளில் பணியாற்றி தியாகங்களைச் செய்த மலாய் உறுப்பினர்களை பிரதமர் நன்றியுடன் நினைவுகூர்ந்தார். மலாய் சமூகம் இலங்கை சமூகத்தில் முழுமையாக ஒருங்கிணைந்து சிறுபான்மை சமூகங்கள் பின்பற்றுவதற்கு ஒரு பெறுமதியான முன்மாதிரியை ஏற்படுத்தியுள்ளது என்றும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.

அனைத்து சமூகங்களிலும் உள்ள குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் நலனுக்காக சமூக சேவைகளை முன்னெடுத்து வருவதையிட்டு மலாய் சங்கத்துக்கு பிரதமர் நன்றி தெரிவித்தார்.