கிளிநொச்சியில் அபிவிருத்தித் திட்டங்கள் துரிதப்படுத்தப்படும்... - பிரதமர் தினேஷ் குணவர்தன

கிளிநொச்சியில் இன்று (2024.07.15) இடம்பெற்ற வர்த்தக சேவை மத்திய நிலையத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த பிரதமர்

“ஒவ்வொரு மாவட்டத்திற்கும், ஒவ்வொரு மாகாணத்திற்கும், ஒவ்வொரு பிரதேச செயலகத்திற்கும் அபிவிருத்திக்காக மாகாண சபை நிதி மற்றும் விஷேட ஒதுக்கீடுகளை செய்வதற்கு ஜனாதிபதி பொறுப்பேற்று புதிய ஒதுக்கீடுகளை செய்துள்ளார். அபிவிருத்தித் திட்டங்களைச் செயல்படுத்துவதில் ஏற்படும் பிரச்னைகளைக் கண்டறிய உதவிய அனைத்து அதிகாரிர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் எமது அரசாங்கமும் நாம் எதிர்கொண்ட நெருக்கடி நிலைளில் இருந்து நாட்டை மீட்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டனர். முதல் வருடம் எங்களுக்கு கடினமான சவாலாக இருந்தது. நாங்கள் ஏற்கனவே முக்கிய சவாலை வெற்றிகரமாக எதிர்கொண்டுள்ளோம். இந்தக் கூட்டத்தில் பொறுப்புகளை ஏற்று அவற்றை வெற்றிகொள்ள வேண்டும். எனவேதான் மாகாணத்தின் அபிவிருத்தித் தேவைகளை விரைவாக கண்டறிவதற்காக இந்தக் கூட்டங்களையும் மாவட்ட அபிவிருத்திக் கூட்டங்களையும் நடத்த விரும்புகிறோம். எங்களிடம் இலவசமாக விநியோகிக்க பணம் இல்லை, விநியோகிக்கப்படும் ஒவ்வொரு ரூபாயும் பயனுள்ளதாக இருக்க வேண்டும். அதற்காக மக்கள் பிரதிநிதிகள், மாவட்ட செயலாளர்கள், ஆளுனர்கள் மற்றும் மாவட்ட தலைவர்கள் செயற்படுவதற்கான அதிகாரம் பெற்றுள்ளனர். இந்த கூட்டத்தில் அடையாளம் காணப்பட்ட தீர்க்கப்படாத பல பிரச்னைகளுக்கு விரைவில் தீர்வு காண முடிந்துள்ளது.

தயாரிக்கப்பட்டுள்ள கட்டமைப்பின் படி கிளிநொச்சியின் அபிவிருத்தி இடம்பெறும் என நம்புகிறேன். அபிவிருத்தி வேலைத்திட்டங்களை அமுல்படுத்துவதை கண்காணித்து அறிக்கையிடும் பொறுப்பை ஆளுநர் மற்றும் அனைத்து அரச உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம உத்தியோகத்தர்கள் பொறுப்பேற்குமாறு விசேடமாக கேட்டுக்கொள்கிறேன்.

நாட்டின் பொருளாதார அபிவிருத்தி மற்றும் விவசாய சமூகத்தின் அபிவிருத்தியை இலக்காகக் கொண்ட அரசாங்கத்தின் விவசாய அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கு கிளிநொச்சி விவசாயிகள் வழங்கி வரும் பங்களிப்புக்காக எனது பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன். விவசாயிகளின் பிரச்சினைகளை தீர்க்க பிரதமர் என்ற வகையில் நானும், ஜனாதிபதியும், அரசாங்கமும் தயாராக உள்ளோம்.

பல மாவட்டங்களுக்குச் சென்றுள்ளேன். வனப்பிரதேசங்கள் தவிர வேறு எந்த தேவைக்கும் பயன்படுத்தப்படாத அரச நிலம் அதிக அளவில் உள்ளது. அந்த நிலங்களை விவசாயிகள் மற்றும் இளைஞர்களுக்கு குத்தகைக்கு வழங்கியேனும் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியுமா என்று பார்ப்பது கமநல அதிகாரிகள் மற்றும் மாவட்ட அளவிலான அதிகாரிகளின் கடமையாகும்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ், பாராளுமன்ற உறுப்பினர்கள் எம். ஏ. சுமந்திரன், அங்கஜன் இராமநாதன், சி. விக்னேஸ்வரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், சிவஞானம் ஸ்ரீ தரன், யதாமினி குணவர்தன, பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன, மாவட்ட செயலாளர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் உட்பட அனைத்து அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு