குறைந்த வருமானம் கொண்ட உள்ளூராட்சி நிறுவனங்கள் விடயத்தில் அரசாங்கம் தலையிடுகிறது... - பிரதமர் தினேஷ் குணவர்தன

கண்டி கரலிய மண்டபத்தில் இன்று (2024.07.11) நடைபெற்ற மத்திய மாகாண உள்ளூராட்சி ஊழியர்களுக்கான நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டார்.

இங்கு மேலும் உரையாற்றிய பிரதமர்-

மத்திய மாகாணம் எமது நாட்டின் இதயம். நாட்டின் அடையாளத்தை உலகுக்குச் சொல்லக்கூடிய நகரமாக கண்டி பாதுகாக்கப்பட்டுள்ளது. இதனை மிகவும் முறையாகவும் மற்றும் முற்போக்கானதாகவும் மாற்றுவதில் விசேட அக்கறையுடன் செயற்பட்டு வரும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, கண்டியை உலக பாரம்பரிய மையமாகவும் அபிவிருத்தியடைந்த நகரமாகவும் மாற்றுவதற்கான திட்டங்களைத் தயாரித்துள்ளார். இன்று உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்புகள் மற்றும் பதவிகளின் மூலம் கண்டியை அபிவிருத்தியடைந்த நகரமாக மாற்றும் இலட்சியத்திற்கு உங்கள் அனைவரினதும் அர்ப்பணிப்பும் உறுதியும் தேவை.

நுவரெலியா, கண்டி, மாத்தளை ஆகிய மூன்று மாவட்டங்களிலும் மக்கள் சேவைக்காக நிறுவப்பட்ட உள்ளூராட்சி மன்றங்கள் பல்வேறு சேவைகளில் ஈடுபட்டு வருகின்றன. இந்த மாகாணத்தில் வசிக்கும் நீங்கள், இந்த மாகாணத்தின் பாடசாலைகளில் கல்வி கற்றதன் பின்னர், மாகாணத்தின் நிறுவனங்களில் பதவிகளை ஏற்று, பொறுப்புகளை ஏற்று, அந்த நிறுவனங்களின் சேவையை மேம்படுத்தும் பணியில் இணைந்துள்ளீர்கள்.

கோவிட் நெருக்கடியின் போது, தனியார் துறை ஊழியர்களை பணிநீக்கம் செய்யவும், தொழிற்சாலைகளை மூடவும் அழுத்தம் கொடுக்கப்பட்டது. அப்போது, ஊழியர்களை நீக்காமல், புதிய முறைமையை உருவாக்கி, சேவைகளை தொடர்ந்து பேண வேண்டும் என, அப்போதைய ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு பரிந்துரைத்தேன். அப்போது முதலாளிமார் சம்மேளனம், தனியார் அமைப்புகள், தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து இந்த விடயத்தை முன்னெடுத்துச் சென்றன. இது ஊழியர்களுக்கு கிடைத்த சிறப்பான வெற்றியாகும்அப்போது இந்தியாவில் லட்சக்கணக்கான தனியார் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களையும் அரச ஊழியர்களையும் பணிநீக்கம் செய்தன. அப்போது இலங்கைக்கே உரித்தான கொள்கைகளும் புதிய புத்தாக்க முறைகளும் பின்பற்றப்பட்டன. எந்தவொரு அரச ஊழியர்களுக்கும் நாங்கள் சம்பளம் வழங்காதிருக்கவில்லை. அமைச்சும் திறைசேரியும் கலந்துரையாடி சம்பளம் வழங்குவதற்கான செயல்முறையை தொடர்ந்தன. யாரும் பணி நீக்கம் செய்யப்படவில்லை.

அரசியலமைப்புச் சட்டத்தின்படி, இந்த திட்டத்திற்கு ஆளுநர்களின் உடன்பாடு அவசியம். ஆளுநர்கள் உடனடியாக ஒப்புதல் அளித்தனர். இந்த தீர்மானத்தை எடுக்கும் போது குறிப்பிட்ட சில உள்ளூராட்சி சபைகளின் வருமானம் போதுமானதாக இல்லை என்று கூறப்பட்டது. அத்தகைய நெருக்கடிகள் உள்ள இடங்களை நாங்கள் கண்டறிந்து, குறைபாடுகளை ஈடுசெய்ய அந்த நிறுவனங்களுக்கு உதவி வழங்குகிறோம்.

கண்டி உலகப் புகழ் பெற்றது. அனைவரின் பெருமைமிக்க இராச்சியம் என்ற அடையாளத்தை தேசத்திற்கு விட்டுச்சென்ற இராச்சியங்களின் மையமாக அது விளங்குகிறது. புனித தலதா மாளிகை இங்குள்ளது. ஆசியாவிலேயே மிகப் பெரிய திருவிழாவாகக் கருதப்படும் கலாசாரப் பெருவிழாவான தலதா பெரஹரா இங்கு இடம்பெறுகிறது. அந்த பெருமைமிக்க நகரத்தின் வளர்ச்சிக்காகவும், பாதுகாப்பிற்காகவும் செயற்படுங்கள்.

மலையக மக்களுக்கு அவர்கள் வாழும் காணியை பெற்றுக் கொடுப்பதற்காக காணி உறுதிகளை ஜனாதிபதி தொடர்ந்து வழங்கி வருகின்றார். மாகாணத்தில் இதுவரை அபிவிருத்தி செய்யப்படாத பிரதேசங்களின் பெருந்தோட்டக் கைத்தொழில் அபிவிருத்திக்காக புதிய வேலைத்திட்டம் முன்மொழியப்பட்டு அங்கீகரிக்கப்பட்டு வரவு செலவுத் திட்ட ஆவணத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அந்த இலக்கை அடைய நாங்கள் உழைத்து வருகிறோம்.

நமது நாடு அரசியல் ஸ்திரமின்மை முதல் பொருளாதாரம் மற்றும் வாழ்க்கை ஸ்திரமின்மை வரை மிகக் கடுமையான நெருக்கடியில் விழுந்த காலத்தை நாம் நினைவில் கொள்கிறோம். அயல் நாடுகளான நட்பு நாடுகள் அதிலிருந்து வெளிவர எங்களுக்கு உதவின. அவர்களுக்கு எம்மீது நம்பிக்கை ஏற்பட்டது. சர்வதேச அளவில் எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய பலம் நம்பிக்கை. அதனை நீங்களே எங்களுக்கு பெற்றுத்தந்தீர்கள். கிராமப்புறங்களில் உள்ள விவசாயிகள் முதல் வருட அறுவடையில் காட்டியபுதிய ஆர்வத்தில் இருந்து, பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இலங்கை மக்களுக்கு பலம் அதிகம் என்று இந்த நாடுகள் முடிவு செய்தன. எதிர்மறையான பொருளாதாரத்தில் இருந்தோம். இந்த ஆண்டு நேர்மறையான பொருளாதாரமாக மாற்ற முடிந்தது. சர்வதேச நாணய நிதியம் மற்றும் நட்பு நாடுகள் அதுபற்றி அறிவித்துள்ளன.

கண்டி நகரில் முச்சக்கர வண்டிகளை ஒழுங்குபடுத்துவதற்காக டெக்ஸி மீட்டர்களும் இதன்போது விநியோகிக்கப்பட்டன.

மத்திய மாகாண ஆளுநர் லலித் யு. கமகே, இராஜாங்க அமைச்சர்களான திலும் அமுனுகம, ரோஹன திஸாநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர் யதாமினி குணவர்தன, பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன, மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிரந்தர நியமனம் பெற்றவர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு