அபிவிருத்தி பற்றி எவ்வளவு பேசினாலும் மக்கள் அதிகம் பயணிப்பது பேருந்துகளில் தான்.... - பிரதமர் தினேஷ் குணவர்தன

இலங்கை போக்குவரத்துச் சபையினால் அங்கீகரிக்கப்பட்ட ஆட்சேர்ப்பு மற்றும் பதவி உயர்வு நடைமுறைக்கு அமைவாக ஆட்சேர்ப்புச் செய்யும் வேலைத்திட்டமொன்று பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் இன்று (2024.06.09) அலரி மாளிகையில் இடம்பெற்றது.

இங்கு கருத்து தெரிவித்த பிரதமர்,

"1957 ஆம் ஆண்டு இலங்கை போக்குவரத்துச் சபையை மக்கள் மயப்படுத்துவதற்கு பண்டாரநாயக்கவின் தலைமையில் அரசாங்கத்தை அமைத்து, அந்த சட்டமூலத்தை பிலிப் குணவர்தன பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார். அப்போது இலங்கை போக்குவரத்துச் சபையை மக்கள் மயப்படுத்துவதனை கட்டம் கட்டமாக மேற்கொள்ள வேண்டும் என்று பாராளுமன்றத்தில் வாதப் பிரதிவாதங்கள் இருந்தன. பிலிப் குணவர்தன கூறியது போல் ஒரே நாளில் மேற்கொள்ள வேண்டும் என்ற தலைப்பில் இலங்கை முழுவதும் உள்ள டிப்போ ஊழியர்கள் இரவோடிரவாக மக்கள்மயப்படுத்தப்பட்டனர்.

பண்டாரநாயக்கா அவர்கள் தேசியமயமாக்கிய முதல் பேருந்து இன்னும் உள்ளது. தொலைதூர கிராமங்களில் உள்ள மக்களின் அன்றாட போக்குவரத்து மற்றும் சிறிய பொருட்களின் போக்குவரத்திற்கு இ போ ச ஒரு பெரிய சக்தியாக இருப்பதால், அது எப்போதும் பொருளாதாரத்தில் மிக முக்கியமான பங்கை வகிக்கிறது. பாடசாலை சேவைக்கு நாம் முன்னுரிமை அளித்துள்ளோம். அன்று, புலமைப்பரிசில் சீசன் சீட்டை இரத்து செய்ய முயற்சித்த போது நானும் அமைச்சர் பந்துலவும் நீதிமன்றத்திற்கு சென்றோம். இது மக்களுக்குச் சொந்தமானது என்றும் அதனைப் பாதுகாக்குமாறும் உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதனால், இலட்சக்கணக்கான பிள்ளைகளின் சீசன் சீட்டு பாதுகாக்கப்பட்டது.

இ போ ச வின் முன்னேற்றத்திற்கு ஒரு பாரிய பலம் உள்ளது என்று நாங்கள் நம்புகிறோம். இப்போது நாம் பல்வேறு ஏமாற்றங்களை அனுபவித்த பல விடயங்களை முடிவுக்குக் கொண்டுவந்து, மக்களுக்கு குறிப்பாக பிள்ளைகளுக்கு கொடுக்கக்கூடிய சிறந்ததைக் கொடுக்கும் திறன் எங்களிடம் உள்ளது. நானும் நீண்ட காலத்திற்கு முன்பு இலங்கை போக்குவரத்துச் சபைக்குப் பொறுப்பான அமைச்சராக இருந்தேன். அந்தக் காலத்திலும் இது போன்ற பல கோரிக்கைப் போராட்டங்கள் நடந்தன. அவற்றை ஒவ்வொன்றாக ஒவ்வொரு தொழிற்சங்கத்துடனும் பேசித் தீர்க்க முடிந்தது. குறிப்பாக, பணிக்கொடை இ போ ச அனுபவிக்கும் ஒரு முக்கியமான நன்மையாகும். அத்தகைய சிறப்பான சூழ்நிலையை உருவாக்குவதற்கு எமக்கு முடியுமாக இருந்தது.

எனவே, இந்த நிறுவனத்தை நாம் குறிப்பாக பாதுகாக்க வேண்டும். எமது போக்குவரத்துத் துறையின் முதுகெலும்பாக திகழும் இந்த இ போ ச தான் நம் நாட்டுப் பொது மக்கள் அன்றாடம் பயணிக்கும் முக்கிய போக்குவரத்து சாதனம். அபிவிருத்தி, முன்னேற்றம் என்று எவ்வளவுதான் பேசினாலும் இன்றும் கூட பெரும்பாலானோர் பேருந்துகளில்தான் பயணிக்கின்றனர். இதுதான் யதார்த்தம். இந்த முதுகெலும்பை பாதுகாத்தால், தொலைதூர கிராமங்களில் உள்ள பேருந்துகள் தொடர்ந்தும் இயங்கும். எனவே, இதை நாம் பாதுகாக்க வேண்டும்'.

இங்கு கருத்து தெரிவித்த போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன,

"எமது நாட்டில் இலங்கை போக்குவரத்துச் சபையின் 67 வருட வரலாற்றில் இன்று ஒரு திருப்புமுனையாக அமைந்த நாளாகும். இலங்கை வரலாற்றில் இலங்கைப் போக்குவரத்துச் சபையில் உள்ள ஒரு குறிப்பிட்ட முறையில் பதவிகள் மற்றும் பதவி உயர்வுகள் ஆகியவற்றில் ஒரு நிலையான முறைமைக்கு இலங்கைப் போக்குவரத்துச் சபையை மாற்றிய ஒரு வரலாற்று நாள்.

ஒரு அரசாங்கம் மாறினால், தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் முதலில் நிகழும் விடயம், தோல்வியடைந்தவர்களை வெளியேற்றி, வெற்றி பெற்றவர்கள் அந்த ஆசனங்களைக் கைப்பற்றுவதுதான் என்பதை நாம் அனைவரும் அறிவோம். அந்த முறைமை இன்றைக்குப் பின்னர் மறைந்துவிடும்.

இலங்கை போக்குவரத்துச் சபை 1956 இல் ஆரம்பிக்கப்பட்ட போது உலகில் அன்று சமூக அமைப்பின் அடிப்படை பிரச்சனைகளை தீர்க்க உலகில் இரண்டு வழிகள் இருந்தன. ஒன்று அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகளின் மக்களிடையே உள்ள சந்தை முறை, மற்றொன்று பரவலாக்கப்பட்ட திட்டமிடல் முறையின் கீழ் மக்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பதாகும்.

"பிரதமரின் தந்தை பிலிப் குணவர்தன தான் சவுத் வெஸ்டன் பஸ் வேலை நிறுத்தத்தின் ஊடாக இ போ ச வை நிறுவுவதற்கு முன்னின்றார். பொதுப் போக்குவரத்து சேவைக்காக சிறை சென்ற ஒரே அரசியல் தலைவர் பிலிப் குணவர்தன ஆவார்.

இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர்களான திலும் அமுனுகம, சிசிர ஜயக்கொடி, பாராளுமன்ற உறுப்பினர்களான காமினி லொக்குகே, யதாமினி குணவர்தன, இலங்கை போக்குவரத்துச் சபையின் தலைவர் லலித் டி அல்விஸ், இலங்கை பொதுப் போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் செயலாளர் நுராஜ் சிங் மற்றும் புதிதாக நியமனம் பெற்ற பலர் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு