பாடசாலை வாழ்க்கையை முடித்துச் செல்லும் பிள்ளைகளுக்கு தொழில் தகுதிக்கான வாய்ப்பை அளிக்கும் வகையில் அரசாங்கம் விசேட திட்டத்தை அறிவித்துள்ளது... - பிரதமர் தினேஷ் குணவர்தன

மஹரகம இளைஞர் சேவை மன்றத்தில் 2024.07.25 அன்று நடைபெற்ற புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

 இங்கு மேலும் கருத்து தெரிவித்த பிரதமர்-

இது பிள்ளைகளுக்கு எதிர்காலத்தில் ஒரு புதிய நம்பிக்கையைத் தரக்கூடிய ஒரு திட்டத்தின் தொடக்கமாகும். மஹரகம பாடசாலை முறைமைக்கு வெளியே உள்ள மாணவர்களுக்கு இந்த வாய்ப்பை வழங்குவதற்கு இளைஞர் சேவை மன்றம் வழங்கிய ஆதரவையும் வசதிகளையும் நாங்கள் பாராட்டுகிறோம்.

ஏற்றுக்கொள்ளக்கூடிய தொழில் தகைமைகளுக்குச் செல்வது கடினமானது. நாம் எதிர்கொள்ளும் எதிர்கால உலகம் தகவல் தொழில்நுட்பத்தின் மூலம் நிகழ்காலத்திலிருந்து வெகு தொலைவுக்கு விரிந்து செல்கிறது.  தேவையான கருவிகளைக் கையாளக்கூடிய தலைமுறையை உருவாக்குவது நமது பொறுப்பு.

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான எமது அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட விசேட வேலைத்திட்டமாக, பாடசாலை வாழ்க்கையை நிறைவுசெய்த பிள்ளைகளுக்கு தொழில்சார் தகைமைக்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுப்பது அமைந்துள்ளது. இதன்படி, பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஆண்டுதோறும் நிதி ஒதுக்கீடு வழங்கப்படும். இன்று, நிதி ஒதுக்கீடுகள், பயிற்சி வகுப்புகள் மற்றும் வசதிகளை இணைத்து உங்களுக்கு அந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

நான் சுமார் நாற்பது வருடங்களாக மஹரகம பாராளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளேன். இளைஞர் சேவை மன்றத்தை திறந்து வைக்க முன்னாள் ஜனாதிபதி ஜெ. ஆர். ஜெயவர்தன வருகைதந்தபோது நான் அங்கு இருந்தேன். அப்போது இளைஞர் விவகார மற்றும் கல்வி அமைச்சராக இப்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இருந்தார். அப்போது இளைஞர் சேவை மன்றம் நாட்டின் பிள்ளைகளுக்காக பல்வேறு கற்கை நெறிகளை வழங்கியது.

மஹரகம பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் அபிவிருத்திக்கும், பயிற்சி மற்றும் கல்வி அறிவை அதிகரிக்கக்கூடிய பகுதிகளுக்கு இந்த ஏற்பாடுகளை வழங்க முடிந்தது. உயர்தரம் மற்றும் சாதாரண தரம் போன்ற வாய்ப்புகள் கிடைக்காத பிள்ளைகளுக்கு இதில் சேர்ந்து பயிற்சி நெறிகள் மூலம் தேவையான தகைமைகளை வளர்த்துக்கொள்ள முடியும்.

நமது பிள்ளைகளுக்கு கல்வி போன்ற வேறு எந்த வளமும் கிடைப்பதில்லை. உங்களை ஒரு தகுதியான நபராக உருவாக்குவதே எங்கள் நோக்கம். இந்தப் பயிற்சியின் மூலம் தேசிய மற்றும் சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளக்கூடிய சான்றிதழ்கள் கிடைக்கின்றன. அறிவிக்கப்பட்ட வேலைத்திட்டத்தின்படி இலங்கையில் உள்ள ஒவ்வொரு பிரதேச செயலகத்திலும் உள்ள ஒவ்வொரு பிள்ளைக்கும் கல்வியை வழங்குவதே அரசாங்கத்தின் நோக்கமாகும்.
 
பிரதமர் ஊடகப் பிரிவு