பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்த மாலைதீவுக்கும் இலங்கைக்கும் இடையில் புதிய ஒப்பந்தங்கள்...

பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும் மாலைதீவு வெளிவிவகார அமைச்சர் மூசா சமீருக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (ஜூன் 6) அலரி மாளிகையில் இடம்பெற்றது.

இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம், முதலீடு, கல்வி மற்றும் கலாச்சார ஒத்துழைப்பில் புதிய போக்குகள் குறித்து இதன் போது கலந்துரையாடப்பட்டது.

இலங்கையுடனான தற்போதுள்ள உறவுகளை விரிவுபடுத்துவதில் தமது நாடு ஆர்வமாக இருப்பதால், முன்மொழியப்பட்டுள்ள இருதரப்பு உடன்படிக்கைகள் மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மாலைதீவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் என மாலைதீவு வெளிவிவகார அமைச்சர் மூசா சமீர் தெரிவித்தார்.

இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கு இடையில் முதலீட்டு பாதுகாப்பு ஒப்பந்தம் மற்றும் இரட்டை வரி விதிப்பை தவிர்ப்பதற்கான ஒப்பந்தம் ஒன்றும் கைச்சாத்திடப்பட உள்ளது. இதன் மூலம் மாலைதீவு நாணயத்தில் சம்பளம் பெறும் இலங்கையர்கள், நாட்டில் கல்வி கற்கும் மாலைத்தீவு மாணவர்கள் மற்றும் மருத்துவ நோக்கங்களுக்காக நாட்டிற்கு வருகை தரும் மாலைதீவில் வசிப்பவர்கள் ஆகியோருக்கு பணம் செலுத்தும் முறையை எளிதாக்குவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.

மாலைதீவு கல்வித்துறைக்கு இலங்கை வழங்கிய ஆதரவுக்கு நன்றி தெரிவித்த அமைச்சர், அதிகளவு மாலைதீவு மாணவர்களுக்கு இலங்கையில் கல்வி வாய்ப்புகளை வழங்குமாறு கேட்டுக்கொண்டார். பெரும்பாலான மாலைதீவு தேசத்தவர்களும் தானும் இலங்கையில் கல்விகற்றவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கை ஆசிரியர்கள் மற்றும் வைத்தியர்களுக்கு மாலைதீவில் பணிபுரியும் வாய்ப்பை வழங்கும் வகையில் அரசாங்கங்களுக்கிடையில் உடன்படிக்கையில் கைச்சாத்திடுவது குறித்து பரிசீலிக்குமாறும் மாலைதீவு அமைச்சர் பிரதமரிடம் தெரிவித்தார்.

இக்கலந்துரையாடலில் மாலைதீவு வெளிவிவகார அமைச்சர் முன்வைத்த யோசனைகளை நடைமுறைப்படுத்த அதிகபட்ச ஆதரவை வழங்குவதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

மாலைதீவு கடற்பரப்பின் ஊடாக இலங்கை மீனவர்கள் சர்வதேச கடற்பரப்பிற்குள் பிரவேசிப்பதற்கு சுதந்திரமான அனுமதிக்கு வழிசெய்யுமாறு மாலைதீவு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுப்பதாக பிரதமர் குறிப்பிட்டார். கப்பல் போக்குவரத்தை கண்காணிக்க தமது அரசாங்கம் ஆளில்லா விமானங்களை அறிமுகப்படுத்தியுள்ளதாக அமைச்சர் சமீர் தெரிவித்தார். ஆளில்லா விமானம் தொடர்பான தகவல்களை பரிமாறிக்கொள்வதற்காக இலங்கையின் பாதுகாப்பு அமைச்சுடன் ஒப்பந்தம் செய்துகொள்ள எதிர்பார்ப்பதாகவும், அது மீன்பிடி கப்பல்களுக்கு பாதுகாப்பான வழியை உறுதி செய்வதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

சுற்றுலா மற்றும் எரிசக்தி துறையிலும் சூரிய சக்தி மற்றும் காற்றாலை சக்தி வளத் துறையிலும் ஒத்துழைப்பை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் பிரதமர் வலியுறுத்தினார்.

அமைச்சர் சமீருடன் வெளியுறவுத்துறை இராஜாங்க அமைச்சர் ஷெரியானா அப்துல், மாலைதீவு உயர் ஸ்தானிகர் மசூத் இமாத், மேலதிக செயலாளர் ஷிருசிமத் சமீர், பணிப்பாளர் நாயகம் ஐஷாத் ஃபரீனா மற்றும் பிரதி உயர் ஸ்தானிகர் பாத்திமத் கினா ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இந்த கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர் யதாமினி குணவர்தன, பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க, வெளிவிவகார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் நிலுகா கதிரகமுவ, ஊடக ஆலோசகர் சுகீஸ்வர சேனாதிர ஆகியோர் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு