சீனாவில் நடைபெறும் போவா வருடாந்த சர்வதேச மாநாட்டில் பிரதமர் உரையாற்றவுள்ளார்

சீன அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் பிரதமர் தினேஷ் குணவர்தன உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று மாலை சீனத் தலைநகர் பீஜிங் பயணமானார். பீஜிங்கில் அவர் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் மற்றும் பிரதமர் லீ கியாங் மற்றும் சிரேஷ்ட அமைச்சர்கள் மற்றும் சீன கம்யூனிஸ கட்சியின் (CPC) உயர் அதிகாரிகளை சந்தித்து இருதரப்பு உறவுகள் மற்றும் அபிவிருத்தி ஒத்துழைப்பு தொடர்பாக கலந்துரையாடவுள்ளார்.

ஹைனானில் உள்ள போவாவில் நடைபெறும் சீனாவின் முதன்மையான இந்த வருடாந்த சர்வதேச மாநாட்டில் பிரதமர் பிரதம விருந்தினராக கலந்து கொள்கிறார். போவா மாநாட்டின் கருப்பொருள், ’ஆசியாவும் உலகமும்: பொதுவான சவால்கள், பகிரப்பட்ட பொறுப்புகள்’ என்பதாகும். இம்மாநாட்டில் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் மற்றும் உயர்மட்ட வெளிநாட்டு பிரதிநிதிகள் கலந்து கொள்ளவுள்ளனர்.

பெய்ஜிங்கில், பிரதமர் தினேஷ் குணவர்தன முதலில் பிரதமர் லீ கியாங் மற்றும் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு அடுத்து 3வது உயர் நிலை அதிகாரியான சீன கம்யூனிச கட்சியின் தேசிய மக்கள் காங்கிரஸின் தலைவர், ஜாவோ லீஜி ஆகியோரை சந்தித்து இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்து விரிவாக கலந்துரையாடவுள்ளார்.

அவர் சீன துறைமுக தலைமையகம், ஹுவாவீ, சோங்குவான்கன் சூழல் பாதுகாப்பு பூங்கா, பெய்ஜிங்கில் உள்ள தேசிய செயற்கைக்கோள் வானிலை மையம் மற்றும் ஹைனானில் உள்ள வெப்பமண்டல விஞ்ஞான அகாடமி ஆகியவற்றிற்கும் விஜயம் செய்யவுள்ளார். ஷாங்காயில், ஷாங்காய் அதிகாரிகளுடனான சந்திப்புகளுக்கு மேலதிகமாக, அலிபே, சிட்ரிப், டில்மா டீ மற்றும் யுனிவர்சல் எனர்ஜி ஆகிய நிறுவனங்களுக்கும் விஜயம் செய்யவுள்ளார்.

பிரதமருடன் இராஜாங்க அமைச்சர்களான ஷெஹான் சேமசிங்க, அசோக பிரியந்த, பாராளுமன்ற உறுப்பினர் யதாமினி குணவர்தன, சீனத் தூதுவர் கியூ சென்ஹோங், பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க மற்றும் சிரேஷ்ட அதிகாரிகளும் இணைந்துகொண்டுள்ளனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு