“விவசாய நடவடிக்கைகளை சிறப்பாக முன்னெடுப்பதற்கு காணி உரிமைகள் தொடர்பான பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும்”. - பிரதமர் தினேஷ் குணவர்தன.

“புதியதோர் கிராமம் – புதியதோர் தேசம்” தேசிய நிகழ்ச்சித் திட்டத்துடன் இணைந்து வவுனியா மாவட்ட உணவுப் பாதுகாப்பு நிகழ்ச்சித் திட்டம் இன்று (2023.11.01) வவுனியா மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர்,

“வவுனியா மாவட்டத்தில் காணி தொடர்பான பிரச்சினை ஒரு முக்கிய பிரச்சினையாக உள்ளது. இரண்டாவது பிரச்சினை வன பாதுகாப்புத் திணைக்களத்திற்கும் வனப் பாதுகாப்பு சட்ட திட்டங்களுக்கும் இடையிலான முரண்பாட்டினால் நீண்டகாலமாக எழுந்துள்ள பிரச்சினைகள். அன்று நான் நீர் வழங்கல் அமைச்சர் என்ற வகையில் வவுனியா நீர்த் திட்டம் குறித்த திட்டத்தை முன்வைத்த போது ஒவ்வொரு திணைக்களத்தின் பிரச்னைகளை முன்வைத்து, குடிநீர் திட்டத்தை ஆரம்பிக்க அனுமதியளிக்கப்படவில்லை. எனினும் அதற்கான நிதியினை ஒதுக்கீடு செய்து காட்டுப் பிரதேசங்களின் மத்தியிலிருந்து நீரை கொண்டுவந்து அந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்தினோம்.

இங்கு நீண்ட காலமாக காடுகளாக உள்ள, அண்மைக் காலங்களில் காடுகளாக மாறிய பிரதேசங்கள் உள்ளன. ஆனால் காடுகளாக அறிவிக்கப்பட்ட இடங்களில் பிரச்சினை உள்ளது. குறிப்பாக வட மாகாணத்தில். இம்மாகாணத்தில் சில காலமாக மோதல்கள் இடம்பெற்றன. அந்த மோதல்களின் போது கைவிடப்பட்ட சில பிரதேசங்களில் நடப்பட்ட மரங்கள் இன்று பாரிய மரங்களாக வளர்ந்துள்ளன. அப்போது வெளியிடப்பட்ட சில வரைபடங்களில், அந்த பகுதிகள் காடுகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

ஆனால் அந்த நிலங்களில் விவசாயிகள் தங்கள் கால்நடைகளின் மேய்ச்சல் நிலங்களாக பயன்படுத்துகின்றனர். இவை பாரம்பரியமாக விவசாயம் செய்யும் பகுதிகள். விசேட கலந்துரையாடல்களை நடத்தி இந்தப் பிரச்னையை தீர்க்க ஆளுநருக்குத் தேவையான பலத்தை நாங்கள் வழங்குவோம்.

எனது தந்தை கைத்தொழில் அமைச்சராக இருந்த போது இப்பகுதிக்கு சிறுவயதில் பல தடவை வருகை தந்துள்ளேன். அப்போது வவுனியாவில் ஒரு முக்கிய தலைவராக இருந்த சி. சுந்தரலிங்கம் அரசியலில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். எல்லாவற்றையும் இறக்குமதி செய்யும் அக்காலத்தில் இலங்கையில் திராட்சை பயிரிடப்பட்டது ஆச்சரியமாக உள்ளது. சுந்தரலிங்கம் அவர்களது தோட்டத்தில் இவை எல்லாம் பயிரிடப்பட்டன.

இவ்வாறான வரலாற்றைக் கொண்ட வவுனியா நெல் விவசாயத்திலும் பல்வேறு பயிர்ச்செய்கைகளிலும் தன்னிறைவு பெற்றுள்ளது.

வவுனியாவை பயிர் ஏற்றுமதி செய்யப்படும் பிரதேசமாக மாற்ற முடியும். அதற்கான முறையான திட்டம் தயாரிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். இந்தக் கிராமங்கள் அனைத்திலும் வாழும் மக்களிடம் உணவில் தன்னிறைவு பெற்று, தங்கள் வாழ்க்கையை மேம்படுத்தி, தங்கள் பிள்ளைகளுக்கு நல்ல எதிர்காலம் அமைய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மட்டுமே உள்ளது.

நான் உள்ளூராட்சி அமைச்சர் என்ற வகையில் வவுனியா நகரசபையை மாநகர சபையாக மாற்றினேன். இது வவுனியாவுக்கு பெருமை. வவுனியா மாவட்டத்தில் இதுவரையில் ஒரு மாநகரசபை இருக்கவில்லை. இதன்மூலம் புதிய திட்டங்களுக்கு செல்ல முடியும்.

நகர்ப்புற சூழலுக்கும் கிராமப்புற சூழலுக்கும் இடையிலான சேவை முறைமையை வெற்றிகரமாக்குவதற்கு விசேட கவனம் செலுத்தப்படுகிறது.

வவுனியாவில் குடிநீர் திட்டங்கள் மற்றும் நீர் சேமிப்பு திட்டங்கள் தேவையாகவுள்ளது. வவுனியாவில் பல விசேட வெளிநாட்டு உதவித் திட்டங்கள் உள்ளன. அவற்றை தொடர்ந்து முன்னெடுப்பது குறித்து ஜனாதிபதி கலந்துரையாடியுள்ளார். வெளிநாட்டு உதவியின் கீழ் இதுபோன்ற பல திட்டங்களை இணைத்துக்கொள்வது அவசியம்.

விவசாயத்திற்கு விதைகள் தேவை. விதைகள் இல்லாமல் விவசாயம் வெற்றியடையாது. அதிக விளைச்சலைத் தரும் விதைகள் குறித்து கவனம் செலுத்துவது அவசியம். இவ்வாறான விதைகளை உற்பத்தி செய்வதில் வவுனியா பல்கலைக்கழகம் கவனம் செலுத்தும் என நினைக்கின்றேன். இந்த பொருளாதார நெருக்கடியில் இருந்து விடுபட, நாட்டை உணவுப் பொருட்களில் தன்னிறைவு அடையச் செய்யும் இலக்கை நோக்கி நாம் பயணிக்க வேண்டும். இந்த வருடம் அவ்வாறான நெருக்கடிக்குள் செல்லாமல் நாட்டைக் காப்பாற்ற முடிந்தது. குறைந்த வருமானம் பெறும் மக்களின் வாழ்க்கையை பாதுகாக்கும் திட்டங்களை மாற்றமின்றித் தொடர முடிவு செய்தோம். அதற்கேற்ப சமுர்த்தி திட்டத்தைப் போன்று அஸ்வெசும திட்டத்தின் நன்மைகளையும் அதிகரிக்க முடியும். அரசாங்கம் என்ற வகையில், இந்த பொருளாதார நெருக்கடியின் போது குறைந்த வருமானம் பெறும் பிரிவினரின் வாழ்க்கைத் தரத்தை பேண நாங்கள் ஆதரவளிக்க கடமைப்பட்டுள்ளோம்.

நாம் அனைவரும் பொதுமக்களுக்காகவே செயற்படுகிறோம். எமது நாட்டின் முன்னேற்றத்திற்காகவும் நமது மக்களின் முன்னேற்றத்திற்காகவுமே பாடுபடுகிறோம். இந்தப் பயணத்தில் புதிய விடயங்களைச் சேர்க்கும் திறன் இருக்க வேண்டும். வவுனியா மாவட்டத்தை சுற்றுலாப் பயணிகளுக்கு ஏற்ற மாவட்டமாக மாற்ற முடியும்.

பட்டதாரிகள் அல்லது பட்டப்படிப்புக்கு கிட்டிய தகுதிகள் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்களை கோருவதன் மூலம் அவர்களின் மாவட்டம் மற்றும் மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் ஆசிரியர் நியமனம் வழங்கப்படுகிறது. ஒரே பாடத்திற்கு அதிக ஆசிரியர்கள் இருப்பதால் எந்த பயனும் இல்லை. குறைபாடு உள்ள பாடத்திற்கு ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். அதனால் தான் இந்த புதிய முடிவை அரசு எடுத்துள்ளது. கொழும்பில் இருந்து நியமனங்களை வழங்குவதற்கு பதிலாக மாகாணம் மாகாணமாக மாவட்டம் மாவட்டமாக பாடசாலை பாடசாலைகளுக்கிடையில் புதியவர்களுக்கு நியமனங்களை வழங்குவதற்காகவே இந்த மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளோம். இதன் மூலம் வவுனியா மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு பாடசாலையும் முன்னேற்றத்தை எதிர்பார்த்துள்ள பிள்ளைகளை உருவாக்கும் பாடசாலையாக மாறும்.

கிராம உத்தியோகத்தர் பரீட்சை டிசம்பர் முதல் வாரத்தில் நடத்தப்படுகிறது. சுமார் மூவாயிரம் கிராம சேவையாளர் வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. சட்டப்படி, அனைத்து விண்ணப்பதாரர்களும் பரீட்சையில் பங்கேற்க வாய்ப்பு உள்ளது. மூன்று மாதங்களுக்குள் அந்த நியமனங்கள் அனைத்தும் முடிவடையும் என நாம் நம்புகிறோம். கிராம உத்தியோகத்தர் வெற்றிடங்கள் உள்ள தூர பகுதிகளில், விசேட தகைமைகளின் அடிப்படையில் பரீட்சையை நடத்தி, வெற்றிடங்களை நிரப்பலாம்,'

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சார்ள்ஸ் நிர்மலநாதன், நோகராதலிங்கம், ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன் ஆகியோர் இங்கு கருத்துத் தெரிவித்தனர்.

வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ், இராஜாங்க அமைச்சர்களான காதர் மஸ்தான், ஜானக வக்கும்புர, அசோக பிரியந்த, பாராளுமன்ற உறுப்பினர் யதாமினி குணவர்தன மற்றும் ஏனைய மக்கள் பிரதிநிதிகள், ஜனாதிபதியின் ஆலோசகர் சுரேன் படகொட, பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் ரஞ்சித் அசோக, வடமாகாண தலைமை செயலாளர் எஸ். எம். சமன் பந்துலசேன, வவுனியா மாவட்ட செயலாளர் பீ.ஏ.சரச்சந்திர உள்ளிட்ட அரச நிறுவன அதிகாரிகள், பொது அமைப்பு பிரதிநிதிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு