அண்மைய மோசமான காலநிலையினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் உள்ள பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளை விரைவாக ஒழுங்குபடுத்துமாறு கல்வி அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் மற்றும் உலர் உணவுப் பொருட்களை விநியோகிக்கும் நிகழ்வில் இன்று (2024.06.11) கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டார்.

அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கான பாடசாலை உபகரணங்கள் மற்றும் உலர் உணவுப் பொருட்கள் விநியோகம் ஹன்வெல்ல தேவாலயம், புவக்பிட்டிய பூர்வாராமய, அவிசாவளை சுபத்ராராம பிரிவேனா ஆகிய இடங்களில் பிரதமர் தலைமையில் இடம்பெற்றது.

எந்த காரணம் கொண்டும் பிள்ளைகளின் கல்வியில் எந்த இடையூறும் ஏற்படாமல் பார்த்துக் கொள்வது பெரியவர்களின் பொறுப்பு என்பதை வலியுறுத்திய பிரதமர், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் ஏற்கனவே உள்ளூராட்சி நிர்வாகத்தின் பங்கேற்புடன் பாடசலைகளை சுத்தம் செய்து திருத்தங்களைமேற்கொள்ளும் பணிகள் தொடங்கியுள்ளன என்றும் குறிப்பிட்டார்.

வெள்ளத்தினால் பாடசாலை புத்தகங்கள் மற்றும் உபகரணங்கள் சேதமடைந்துள்ளதால் பிள்ளைகளின் மனதைக் குணப்படுத்த இதுபோன்று முன்வருவது அவசியம் என்றும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

ஹாங்காங் ஷக்யமுனி பெளத்த மன்றம், சிங்கப்பூரில் உள்ள ஶ்ரீ லங்காராமய ஆகியன இந்த நிகழ்வுகளுக்கு அனுசரணை வழங்கியுள்ளன.

கௌரவ மகா சங்கத்தினர் மற்றும் சமயத் தலைவர்கள், கொழும்பு மாவட்ட செயலாளர் பிரசன்ன கீகனகே, பிரதேச மற்றும் கிராமிய அபிவிருத்தி தொடர்பான பிரதமரின் இணைப்பாளர் கே. ஜி. விஜேசிறி சீதாவக்கை பிரதேச்செயலாளர் உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு