ஐ நா மனிதநேய தினத்தை பிரகடனப்படுத்துமாறு பிரதமர் அழைப்பு

ஐக்கிய நாடுகள் சபையின் பஞ்சாங்கத்தின் கீழ் மனிதநேய தினத்தை பிரகடனப்படுத்துமாறு பிரதமர் தினேஷ் குணவர்தன ஐக்கிய நாடுகள் சபைக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

கொழும்பில் உள்ள இலங்கை மன்றத்தில் நடைபெற்ற உலகளாவிய நல்லிணக்கத்திற்கான சமாதானத்தை ஏற்படுத்துபவர்களின் சர்வதேச மாநாட்டில் உரையாற்றிய பிரதமர், மனித விழுமியங்கள் வேகமாக அழிவடைந்து வருவது மனிதகுலத்திற்கு மிகவும் ஆபத்தான அச்சுறுத்தலாக இருப்பதால், தனது முன்மொழிவை ஆராய்ந்து பின்வரும் நடவடிக்கைகளை எடுக்குமாறு மாநாட்டில் பங்குபற்றியவர்களை வலியுறுத்தினார்.

மனிதநேய தினத்தை பிரகடனம் செய்வது உலகளாவிய சமூகத்திற்கு, குறிப்பாக உலகத் தலைவர்களுக்கு மனித விழுமியங்களை ஊக்குவிப்பதற்கான இன்றியமையாத தேவையை வலியுறுத்தும் என்று பிரதமர் குறிப்பிட்டார்.

"சமாதானம் மற்றும் நல்லிணக்கம் பற்றிய முக்கியமான விடயம் குறித்து கலந்துரையாடி, இந்த கருத்தை உலகெங்கிலும் பரப்புவதற்கான சிந்தனைகள், பரிந்துரைகள் மற்றும் சாத்தியமான வழிவகைகளை கண்டறியுமாறு மாநாட்டின் பிரதிநிதிகளான உங்களிடம் நான் கேட்டுக்கொள்கிறேன்," என்று பிரதமர் கூறினார்.

அறியாமை அல்லது மனிதநேயம் மற்றும் மனித விழுமியங்கள் மீதான அக்கறையின்மை காரணமாக மக்கள் வன்முறை மற்றும் மோதல்களின் தீய சுழற்சியில் சிக்கிக் கொள்கின்றனர் என பிரதமர் தினேஷ் குணவர்தன சுட்டிக்காட்டினார். "மோதல் நிறைந்த உலகிற்கு இந்த உண்மையை மிக வலுவாகக் கொண்டு வருவதற்கான நேரம் இது" என்றும் அவர் மேலும் கூறினார்.

மனித வாழ்வின் ஒவ்வொரு செயலும் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை அடைந்துகொள்ளும் அடிப்படை விருப்பத்துடனேயே செய்யப்படுகிறது. அந்த ஆசை எமது பண்டைய நாகரீககத்திலிருந்து எம்மை வந்து சேர்கிறது. இந்து வேதங்கள், கிழக்கத்திய ஆன்மீகத் தலைவர்கள் மற்றும் இந்தியா ஈன்றெடுத்த தலைசிறந்த போதகரான கௌதம புத்தர் ஆகியோர் மனித இயல்பின் அடிப்படைகளிலிருந்து நாம் விலகிச் சென்றால், அதன் விளைவு சொல்லொணாத் துன்பமே என்பதை எமக்கு போதிக்கின்றனர். அனைத்து ஆன்மிகத் தலைவர்களும் துன்பத்தைப் போக்குவதற்கான வழிகளை எமக்குக் காட்டித் தந்துள்ளனர் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

மகரிஷி அரவிந்த் மன்றம் மற்றும் இனவியல் மன்றம் இணைந்து ஏற்பாடு செய்துள்ள உலகளாவிய நல்லிணக்கத்திற்கான சமாதானத்தை ஏற்படுத்துபவர்களின் சர்வதேச மாநாடு டிசம்பர் 12 முதல் 16 வரை கொழும்பில் நடைபெறுகிறது.