அரசியல் கருத்து வேறுபாடுகள் விவாதங்களுடன் மட்டும் மட்டுப்பட்டதாக இருக்க வேண்டும். - பிரதமர் தினேஷ் குணவர்தன பொலன்னறுவையில்.

அரசியல் தலைமைக்கு அரச ஊழியர்களின் ஒத்துழைப்பை வழங்குங்கள்

இன்று (29.01.2024) பொலன்னறுவை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற உணவுப் பாதுகாப்பு மற்றும் போசனையை உறுதிப்படுத்தும் கிராமிய பொருளாதார மறுமலர்ச்சி நிலையங்களை வலுவூட்டும் பல துறைகளின் ஒருங்கிணைந்த பொறிமுறையான "புதிய தோர் கிராமம் – புதியதோர் நாடு" தேசிய ஒருங்கிணைக்கப்பட்ட அபிவிருத்தி திட்டத்தின் பொலன்னறுவை மாவட்ட முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர்-

நாம் மிகுந்த நம்பிக்கையுடன் நாட்டை கட்டியெழுப்பினோம். யார் என்ன சொன்னாலும் உங்களிடம் அந்த நம்பிக்கை இருந்தது. நாம் விழுந்த கடுமையான பின்னடைவிலிருந்து இன்று நாடு தலைநிமிர்ந்து நிற்கிறது. உலக நாடுகள் எங்களுடன் கொடுக்கல்வாங்களை நிறுத்தின. வங்கி அமைப்பு கொடுக்கல்வாங்களை நிறுத்தியது. கடினமான காலங்களில் நம்பிக்கையை மீட்டெடுத்து கடினமான காலங்களை வெற்றிகொண்டு நாட்டை ஒரு சிறந்த நிலைக்கு கொண்டு வந்துள்ளோம். சிறுசிறு பிரச்சனைகள் இருந்தாலும், பெரும் வீழ்ச்சியிலிருந்து நாட்டை மீட்டுள்ளோம்.

அரச ஊழியர்களின் நம்பிக்கையை நினைவுபடுத்த வேண்டும். நீங்கள் சிறந்த முறையில் தரவுகளை அறிந்துவைத்துள்ளீர்கள். கிரேக்கத்திற்கு என்ன நடந்தது? பொருளாதார வீழ்ச்சிக்கு முகம்கொடுத்தது. அரச ஊழியர்கள் குறைக்கப்பட்டனர். நாங்கள் அவ்வாறு செய்யவில்லை. நாம் ஓய்வூதியம் வழங்கினோம். ஒருபோதும் சம்பளம் நிறுத்தப்படவில்லை.

நாட்டின் உற்பத்தியைப் பெருக்கி உபரியானளவு விளைச்சலை கொண்டுவர விவசாயிகள் எமக்குப் பெரும் பலமாக விளங்கினர். இந்த நாடும் உலகமும் எங்களை நம்பின. அந்த நம்பிக்கையின் அடிப்படையில் நாடு முன்னேற முடியும் என்பதை இன்று நாம் அறிவோம். அந்த கடினமான காலத்தை நாங்கள் கடந்து, உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்குமான ஒரு எதிர்காலத்தை தயார் செய்தோம். அரசியல் கருத்து வேறுபாடுகள் விவாதங்களுடன் மட்டும் மட்டுப்பட்டதாக இருக்க வேண்டும். நாம் செயற்படுத்தும் அபிவிருத்தித் திட்டங்களின் இலக்குமயப்பட்ட திட்டத்தை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு அரச அதிகாரிகளுக்கு உள்ளது.

எனவே, அரச ஊழியர்கள் என்ற வகையில் மிகுந்த கடமையும் பொறுப்பும் உள்ளது. அரசாங்க சேவையின் தற்போதைய அபிவிருத்தி செயன்முறை மற்றும் எதிர்கால இலக்கு முன்னேற்றங்களுக்கு பங்களியுங்கள். மாவட்டத்தின் அரசியல் தலைமைக்கு அரச உத்தியோகத்தர்கள் அனைவரும் ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

வடமத்திய மாகாண ஆளுநர் மஹிபால ஹேரத், இராஜாங்க அமைச்சர்களான சிறிபால கம்லத், ஜானக வக்கும்புர, பொலன்னறுவை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் சமரவிக்ரம, பாராளுமன்ற உறுப்பினர்களான கீன்ஸ் நெல்சன், யதாமினி குணவர்தன, பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன, பொலன்னறுவை மாவட்ட செயலாளர் சுஜன்த ஏகநாயக்க உள்ளிட்ட பிரதேச செயலாளர்கள் மற்றும் அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு