வெசாக் பண்டிகையின் மகிமைக்கு உரம்சேர்க்க நாடளாவிய ரீதியில் முச்சக்கர வண்டிகள் ஒன்றிணைவு...

வெசாக் பண்டிகையை முன்னிட்டு சங்கைக்குரிய எல்லே குணவங்ச தேரரின் எண்ணக்கருவிற்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட ஆயிரம் முச்சக்கர வண்டிகளில் பௌத்த கொடிகளை காட்சிப்படுத்தும் நிகழ்வு இன்று (2024.05.22) கொழும்பு பௌத்தாலோக மாவத்தையில் பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் ஆரம்பித்துவைக்கப்பட்டது.

இங்கு கருத்துத் தெரிவித்த பிரதமர்-

சங்கைக்குரிய எல்லே குணவங்ச தேரரின் வழிகாட்டலின் கீழ், ஆயிரக்கணக்கான வாகனங்களுக்கு பௌத்த கொடியை தர்மாயதன விகாரை அன்பளிப்பு செய்து கொழும்பு நகரை பௌத்த கொடியால் ஒளிரச் செய்கிறது.

இலங்கை வாழ் பௌத்த மக்கள் தொடர்ச்சியாக பேணிவரும் வெசாக் கொண்டாட்டத்திற்கு, பரம்பரை பரம்பரையாக மகாசங்கத்தினர் வழங்கிய தலைமைத்துவத்திற்கு எமது அர்ப்பணிப்பையும் மரியாதையையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

எமது பிள்ளைகள், போர்வீரர்களை ஒன்றிணைப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்ட தர்மாயதன விகாரை தொடர்ந்தும் அதன் பணிகளை முன்னெடுப்பதற்கு அரசாங்கம் விசேட வேலைத்திட்டம் மற்றும் தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. புத்த பெருமானுக்கு ஒரு சிறு பிள்ளை கூட இவ்வளவு பக்தி சிரத்தையுடன் சிறிய வெசாக் கூடுகளை அமைக்கிறதா? மேலும், முழு தேசமும் எழுச்சிபெற்று, புத்தபெருமானின் போதனைகளை நாட்டிற்கும் உலகிற்கும் வழங்குவதற்கான ஒரு சிறந்த வாய்ப்பை நாம் பெற்றிருக்கிறோம்.

இந்த வெசாக் தினத்திலும், வெசாக் நிகழ்ச்சிகளிலும், புத்தபெருமான் கொண்டு வந்த நடுநிலை கொள்கையை இன்று உலகிற்கு வழங்கக்கூடிய மிகப் பெரிய கொடையாக நாம் நினைவு கூர்ந்து அதற்காக அர்ப்பணிப்போம்.

இங்கு அனுசாசன உரை நிகழ்த்திய எல்லே குணவங்ச தேரர்-

சுமார் இருபது இருபத்தைந்து வருடங்களாக வெசாக் பண்டிகையை வெற்றியடையச் செய்ய முயற்சித்து வருகிறேன். பௌத்தர்களின் மிகப் பெரிய பண்டிகை வெசாக். அன்றும் இன்றும் நாட்டிற்குள்ளேயே வெசாக்கிற்கு எதிரான சதி நடந்துள்ளது. சிலர் இது போலியான வேலைகள், ஏன் கட்டுகிறார்கள், வீடுகளை அமைத்துக் கொடுக்கலாமே என சமூகத்தில் பல்வேறு கருத்துக்களைப் பரப்பி வருகின்றனர். அரச சார்பற்ற நிறுவனங்கள் என்று ஒன்று உள்ளது. இப்போது தாய், தந்தைக்கு வணங்க வேண்டாம் போன்ற விடயங்களை பிரச்சாரம் செய்யும் ஒரு கூட்டம் இருக்கிறது.

சுமார் இருபது இருபத்தைந்து வருடங்களாக வெசாக் பண்டிகையை பாதுகாப்பதற்கான எனது முயற்சிகளை நான் கைவிடவில்லை. அது வெற்றியும் பெற்றுள்ளது. இந்த வெசாக் பண்டிகையை சிறப்பாக நடத்துவதற்கு பிரதமர் மிகுந்த ஒத்துழைப்பை வழங்கினார். இன்று அரச இயந்திரம் செயலிழந்துவிட்டது. வலிமையற்றுள்ளது. அதை வலுப்படுத்த பொதுமக்கள் அனைவரும் முன்வர வேண்டும்

மகாசங்கத்தினர், அமைச்சர் டிரான் அலஸ், இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி, பாராளுமன்ற உறுப்பினர் யதாமினி குணவர்தன, பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன, கொழும்பு மாவட்ட செயலாளர் கே. ஜி. விஜேசிறி, பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் மற்றும் முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு