மூன்றாவது முறையாக இந்தியாவின் பிரதமராக தெரிவுசெய்யப்பட்டுள்ள ஸ்ரீ நரேந்திர மோடி அவர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்து, பிரதமர் தினேஷ் குணவர்தன அவர்கள் 2024.06.05 அன்று பாராளுமன்றத்தில் ஆற்றிய விசேட உரை...

"கௌரவ பிரதி சபாநாயகர் அவர்களே, இன்றைய தினம் குறிப்பாக எமது நேசத்திற்குரிய அயல்நாடாகவும், வரலாற்று ரீதியாகவும் ஏனைய அனைத்து துறைகளிலும் இணைந்து செயற்படும் பலத்தினை நீண்ட காலமாக கட்டியெழுப்பிய பாரதீய ஜனதாக் கட்சியின் தலைவர் பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி அவர்கள் மூன்றாவது முறையாகவும் மக்கள் வாக்குகளினாலும், பாராளுமன்ற ஜனநாயகத்தின் மூலமும் வெற்றி பெற்றிருப்பதையிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக இங்கு எழுந்திருக்கிறேன்.

உலகிற்கு மகத்தான செய்தியை கொண்டு சென்ற இந்திய பிரதமராக ஸ்ரீ நரேந்திர மோடி அவர்கள் இன்று வெற்றி பெற்றுள்ளார்.

மேலும் அவர் இன்று உலகிலேயே அதிக மக்கள் தொகையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாக, பாராளுமன்ற ஜனநாயகத்தின் மாபெரும் நாடாக, நாம் அனைவரும் அறிந்து வைத்துள்ள இந்திய தேசத்தின் பிரதமராக வெற்றிபெற்றுள்ளார்.

மேலும், ஆசிய நாடுகளுடனான நட்புறவு , ஒத்துழைப்பு மற்றும் இலங்கையுடனான செயற்றிறனான ஒத்துழைப்பை நினைவுகூர்ந்தவனாக, பிரதமர் மோடி அவர்கள் அடைந்துள்ள இந்த வெற்றியின் மூலம் இந்தியா பல புதிய வெற்றிகளை அடைந்துகொள்வதற்காக வாழ்த்துகிறேன்.

பொருளாதாரம் மற்றும் பிற துறைகள் மூலம் அமைதி மற்றும் அபிவிருத்திக்கான புதிய இலக்குகளை உலகிற்கு வழங்குவதற்கும் நான் வாழ்த்துகிறேன். எனவே, இலங்கைப் பிரதமர் என்ற வகையில், இந்த வெற்றியானது, இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையிலான வலுவான, நீண்ட கால இருதரப்பு மற்றும் பரஸ்பர உறவுகளை மேம்படுத்த பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடிக்கு பலத்தை அளிக்கும் என நான் நம்புகிறேன்.

இந்தியப் பிரதமர் மேன்மைதங்கிய ஸ்ரீ நாரேந்திர மோடி அவர்களே! பாரதிய ஜனதா கட்சியின் மகத்தான வெற்றிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தொடர்ந்து மூன்றாவது முறையாக இந்தியப் பிரதமரின் பதவிக்காலத்தை தேசிய ஜனநாயகக் கூட்டணி உறுதிப்படுத்தியுள்ளது.

உலகின் மிகப்பெரிய பாராளுமன்ற ஜனநாயகத்தை கொண்ட இலங்கையின் மிக நெருங்கிய தெற்காசிய அண்டை நாடாகவும் ஆழமான நட்பினையும், வலுவான உறவினையும் கொண்டு விளங்கும் இந்தியாவுடன், இலங்கையானது சவால்களை எதிர்கொள்வதில் இணைந்து பணியாற்றுவதற்கும், அமைதிக்காவும், உலகெங்கிலும் உள்ள மக்களுக்காகவும், ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான புதிய வாய்ப்புகளை கண்டறியவும், அர்ப்பணிப்புடன் உள்ளது. இந்தியா இன்று மிகப்பெரிய மக்கள்தொகையை கொண்ட தேசமாக விளங்குவதுடன், அது (வழங்கும் பொருளாதார பங்களிப்பு சர்வதேச சூழ்நிலையின் இந்த யுகத்தில் மிகவும் முக்கியமானதாகும்.

பகிர்ந்த நம்பிக்கை மற்றும் கொள்கைகளின் அடித்தளத்தின் மீது கட்டியெழுப்பப்பட்டுள்ள இருதரப்பு முயற்சிகளை மேலும் மேம்படுத்த உங்களுடன் தொடர்ந்து பணியாற்ற நான் எதிர்பார்க்கிறேன். நன்றி.

பிரதமர் ஊடகப் பிரிவு