இலங்கை கைத்தொழில் வர்த்தக வலயங்களில் முதலீடு செய்ய முன்னணி சீன நிறுவனங்கள் விருப்பம் தெரிவிப்பு

சில முன்னணி சீன முதலீட்டாளர்கள் அரசாங்கத்தினால் நிறுவப்பட்டுள்ள தெரிவுசெய்யப்பட்ட கைத்தொழில் வர்த்தக வலயங்களில் பாரியளவிலான முதலீடுகளைச் செய்ய விருப்பம் தெரிவித்துள்ளனர். பாராளுமன்றத்தில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் தினேஷ் குணவர்தன அவர்களை நேற்று (டிசம்பர் 1) சந்தித்த போதே அவர்கள் இதனைத் தெரிவித்தனர். திருகோணமலை, அம்பாந்தோட்டை மற்றும் ஏனைய கைத்தொழில் வலயங்களில் கைத்தொழில்களை தாபிப்பதற்கு அவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

முதலீட்டுக்கு உகந்த சூழலை உருவாக்குவதற்காக முன்மொழியப்பட்டுள்ள சீர்திருத்தங்கள் விரைவில் சட்டமாக்கப்படும் என்றும், நேரடி வெளிநாட்டு முதலீடுகளுக்கு பல மேலதிக வசதிகள் வழங்கப்படும் என்றும் பிரதமர் உறுதியளித்தார்.
பிரதமருடனான சந்திப்பின் போது, ஷென்சென் சாங் ஜுவாங் நிர்மாணக் குழுமத்தின் தலைவர் ஜுவான் ஜாங், இலத்திரனியல் மற்றும் உயர் நுண் உற்பத்திகள், சூரிய அனல் மின்சாரம், அதிவேக சக்தி சேமிப்பு அலகுகள், ஸ்மார்ட் கிரிட், ஒளிமின்னழுத்த மின் ஆலைகள் போன்ற பல துறைகளில் முதலீடு செய்ய முடியும் என குறிப்பிட்டார். இந்நிறுவனம் கிரேக்கம், மொராக்கோ, மங்கோலியா, கலிபோர்னியா, அமெரிக்கா, தெற்கு அவுஸ்திரேலியா மற்றும் தாய்வான் ஆகிய நாடுகளில் சக்தி வள கைத்தொழில் துறையில் நிர்மாண திட்டங்களில் முதலீடு செய்துள்ளது.

தகுவா (Dahua) காகித நிறுவனத்தின் தலைவர், Wang Junxiong தனது நிறுவனம் உள்ளூர் தேவையை பூர்த்தி செய்யவும் மற்றும் ஏனைய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் பெரிய காகித தொழிற்சாலைகளை அமைக்க முடியும் என்று குறிப்பிட்டார்.

குவாங்டாங் வர்த்தக சங்கம், டோங்குவான் பெட்ரோ கெமிக்கல் அசோசியேஷன் ஆகியவற்றின் தலைவர் சாங் பிளிங்லியன், சீன முதலீட்டாளர்கள் இலத்திரனியல், சுரங்கம் மற்றும் ஏனைய கைத்தொழில்களில் பிரவேசிக்க முடியும் என்று குறிப்பிட்டார்.

எரிபொருள் பெறுவதில் சிரமங்கள் இருப்பதாலும் நிலக்கரி மற்றும் சூரிய மற்றும் காற்றாலை மின்சாரம் காலநிலை மாற்றங்களுக்கு உட்பட்டது என்பதனாலும், தொழிற்சாலைகளுக்கு தடையில்லா சக்தி வளங்களை வழங்குவதை உறுதி செய்யும் அணு மின் நிலையங்களை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை இலங்கை ஆராய வேண்டும் என்று அணுசக்தி விஞ்ஞானியும் அணுசக்தி இயக்க பாதுகாப்பு நிபுணருமான கலாநிதி லு சிங் கூறினார்.