அரச சேவையில் சேவை நெருக்கடி தீர்வு பொறிமுறையை அறிமுகப்படுத்த சர்வதேச தொழிலாளர் தாபனம் உதவி...

அரசாங்க சேவையில் தொழில் உரிமைகள் தொடர்பான நெருக்கடி நிலைகளுக்கான தீர்வு மற்றும் தடுப்பு பொறிமுறையை அறிமுகப்படுத்தும் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு ஆதரவளிக்குமாறு பிரதமர் தினேஷ் குணவர்தன சர்வதேச தொழிலாளர் தாபனத்திடம் (ILO) கோரிக்கை விடுத்தார்.

சர்வதேச தொழிலாளர் தாபனத்தின் (ILO) வதிவிடப் பணிப்பாளர் ஜோனி சிம்சன் மற்றும் ஐக்கிய நாடுகளின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆன்ட்ரே பிராஞ்ச் ஆகியோரை இன்று (2024.02.01) அலரி மாளிகையில் சந்தித்த போதே பிரதமர் இந்தக் கோரிக்கையை விடுத்தார்.

இது தொடர்பாக எடுக்கப்பட்ட ஆரம்பகட்ட நடவடிக்கைகளுக்கும், முன்மொழிவுக்கும் அமைச்சரவையின் அங்கீகாரத்தைப் பெற்றமைக்காக பிரதமருக்கு தூதுக்குழுவினர் நன்றி தெரிவித்தனர். உத்தேச பொறிமுறையை நடைமுறைப்படுத்துவதற்கு முழு ஆதரவையும் வழங்குவதாக அவர்கள் பிரதமரிடம் உறுதியளித்ததுடன், இதன் மூலம் நெருக்கடிகளைத் தீர்ப்பது மட்டுமன்றி, முத்தரப்பு உரையாடல் முறை மூலம் எதிர்காலத்தில் மோதல் நிலைமைகளைத் தடுக்க முடியும். தொழிலாளர்கள் மீது கோவிட் தொற்றுநோயால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் தாக்கம் மற்றும் பொருளாதாரத்தை மீட்டெடுக்க தொழிலாளர்களுக்கு, குறிப்பாக குறைந்த வருமானம் பெறும் தொழிலாளர்களுக்கு உதவ அரசாங்கம் எடுத்த குறுகிய மற்றும் நீண்ட கால நடவடிக்கைகள் குறித்து சர்வதேச தொழிலாளர் தாபன தூதுக்குழுவிடம் பிரதமர் விளக்கினார்.

தொழிற் படையை உயர்நிலைக்கு கொண்டு செல்ல அரசாங்கம் ஆர்வமாக உள்ளது என்பதை வலியுறுத்திய பிரதமர், திறன் விருத்திக்காக முன்னெடுக்கப்பட்டுள்ள பல பயிற்சி திட்டங்கள் குறித்தும் பிரதம் விளக்கினார். தொழில்களின் தரத்தையும் அளவையும் அதிகரிப்பதே மக்களை வறுமையில் இருந்து மீட்டெடுப்பதற்கான உறுதியான வழி என்று பிரதமர் சுட்டிக்காட்டினார். இலங்கையானது சர்வதேச தொழிலாளர் தாபனத்தின் (ILO) ஒழுங்குமுறைகளை தொழிற் படையில் இணைத்துள்ளதுடன், ஆண்களுக்கும் பெண்களுக்கும் சுதந்திரம், சமத்துவம், பாதுகாப்பு மற்றும் மனித கண்ணியம் போன்ற நிலைமைகளின் கீழ் பயனுறதிவாய்ந்த தொழிலை பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகளை வழங்கியுள்ளது.

தொழிலாளர்களின் நல்வாழ்வு மற்றும் தொழிலாளர்களின் திறன்களை மேம்படுத்த அரசாங்கம் எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் முழு ஆதரவை வழங்குவதாக சர்வதேச தொழிலாளர் தாபனத்தின் பிரதிநிதிகள் உறுதியளித்தனர்.

இந்நிகழ்வில் பிரதமரின் செயலாளர் திரு அனுர திஸாநாயக்கவும் கலந்துகொண்டார்.

பிரதமர் ஊடகப் பிரிவு