இலங்கையில் பேண்தகு அபிவிருத்தி இலக்குகளை (SDGs) அடைவதற்கான முயற்சிகளுடன் பேண்தகு வர்த்தக ஊக்குவிப்பு மூலோபாயங்கள் முன்னெடுக்கப்படும். - பிரதமர் தினேஷ் குணவர்தன

பேண்தகு அபிவிருத்தி இலக்குகளை (SDGs) அடைந்துகொள்வதற்கு ஐக்கிய நாடுகளின் ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியத்திற்கான பொருளாதார மற்றும் சமூக ஆணைக்குழு (ESCAP) இலங்கைக்கு முழுமையாக ஆதரவளிக்கும். - ஐக்கிய நாடுகள் சபையின் உதவி பொதுச் செயலாளர் அர்மிடா அலிஸ்ஜாபானா,

இலங்கையில் பேண்தகு அபிவிருத்தி இலக்குகளை (SDGs) அடைவதற்கான பேண்தகு வர்த்தக ஊக்குவிப்புக்கான மூலோபாயங்கள் இன்று (2024.01.31) பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் ஐக்கிய நாடுகளின் ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியத்திற்கான பொருளாதார மற்றும் சமூக ஆணைக்குழுவின் (ESCAP) நிறைவேற்றுப் பணிப்பாளரும் ஐக்கிய நாடுகள் சபையின் உதவிச் செயலாளர் நாயகமுமான திருமதி அர்மிடா அலிஸ்ஜாபனா ஆகியோர் முன்னிலையில் முன்னெடுக்கப்பட்டது.

பேண்தகு வர்த்தக முயற்சிகளின் அபிவிருத்தி மற்றும் ஊக்குவிப்பு இல்லாமல் நாட்டின் தொலைநோக்கினை அடைய முடியாது என பிரதமர் இங்கு குறிப்பிட்டார். இன்றைய வர்த்தகப் பொருளாதாரம் அபிவிருத்தியின் அடிப்படையாக மட்டுமன்றி, நேர்மறையான மாற்றத்தின் முகவராகவும் பெரும் பங்கினைக் கொண்டுள்ளது என்று பிரதமர் குறிப்பிட்டார்.

உலகளாவிய அபிவிருத்தி நிகழ்ச்சி நிரலில் வர்த்தகத்தை நிலைப்படுத்துவதன் மூலம் 2015 பேண்தகு அபிவிருத்தி இலக்குகள் அல்லது SDGகள் இந்தத் தேவையை சரியாக அடையாளம் கண்டுள்ளன என்பதைச் சுட்டிக்காட்டிய பிரதமர், இலங்கை இந்த சாத்தியக்கூறுகளை நன்கு அறிந்துள்ளதாகவும், எனவே, பலமான நாட்டினை கட்டியெழுப்பும் எங்களின் இலட்சியப் பயணத்தில் தனியார் துறையை இணைத்துக்கொள்ளுதல், வலுவுட்டுதல் மற்றும் தனியார் மற்றும் அரச வர்த்தகங்களை ஒருங்கிணைத்தல் முக்கியமானதாகக் கருதப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

பேண்தகு அபிவிருத்தி இலக்குகளை SDG அடைவதில் வர்த்தகத் துறையின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய பிரதமருக்கு நன்றி தெரிவித்த ஐக்கிய நாடுகளின் உதவிச் செயலாளர் அர்மிடா அலிஸ்ஜஹபானா, SDG களை அடைவதில் இலங்கையின் முயற்சிகளுக்கு ஐ.நா. மற்றும் ESCAP தொடர்ந்து ஆதரவளிக்கும் என்று கூறினார்.

இங்கு கருத்து தெரிவித்த பிரதமர்-

பிரகாசமானதும் நிலையான எதிர்காலத்தை நோக்கியதுமான இலங்கையின் பயணத்தில் நாம் ஒரு முக்கியமான தருணத்தில் இருக்கிறோம். உலகம் முன்னெப்போதும் இல்லாத சவால்களை எதிர்கொள்கிறது என்பதை நாம் அனைவரும் அறிவோம். காலநிலை மாற்றம், பொருளாதார கொந்தளிப்பு மற்றும் சமூக ஏற்றத்தாழ்வுகள் என்பவற்றை இவ்வாறு குறிப்பிடலாம். இவ்வாறான சூழ்நிலைகளில் கூட, எமது நாடு மீண்டு வருவதற்கு மாத்திரமன்றி, வளமான மற்றும் நிலையான மற்றும் பலமான இலங்கையை மீளக் கட்டியெழுப்புவதற்கும் பாரிய சந்தர்ப்பம் உள்ளது.

கோவிட் தொற்றுநோய் உலகப் பொருளாதாரத்தை மந்தமான நிலைக்கு தள்ளியது. பொருளாதார சிக்கல்களை வெற்றிகொள்ள UNESCAP அமைப்பு வழங்கிய ஆதரவிற்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். இயற்கையின் நிலையான இருப்புக்கான தேவையை நாம் பண்டைய பௌத்த பெறுமானங்களிலிருந்து பெற்றுள்ளோம். மனிதன் இயற்கையின் ஒரு பகுதி என்றும் மற்ற உயிரினங்கள் மனிதர்களைப் போலவே முக்கியம் என்றும் பெளத்த தர்மம் வலியுறுத்துகிறது.

அந்த மரபைக் கட்டியெழுப்புவதன் மூலம், நிலையான வர்த்தகங்களை அபிவிருத்தி செய்து ஊக்குவிக்காமல் புதிய இலங்கைக்கான எமது தொலைநோக்கினை அடைய முடியாது. இன்று வணிகங்கள் பொருளாதார வளர்ச்சியின் உந்து சக்தியாக மட்டுமல்லாமல் நேர்மறையான மாற்றத்தின் முகவர்களாகவும் மகத்தான சக்தியைக் கொண்டுள்ளன.

ஜனாதிபதி தொடர்ந்து வலியுறுத்துவது போல், பிராந்திய மற்றும் உலகளாவிய சந்தையில் ஒருங்கிணைக்கப்பட்ட தனியார் துறையின் தலைமையிலான போட்டித்தன்மையான வளர்ச்சியின் பங்கு புதிய முன்னுதாரணத்தின் ஒரு முக்கிய பகுதியாக கருதப்படுகிறது. பல்துறை முயற்சியில் இருந்து பிறந்த இந்த வலுவான மூலோபாயம் வணிகங்கள் நிதி ரீதியாக செழிக்க ஒரு வீதி வரைபடத்தை வழங்குவதோடு மட்டுமல்லாமல், எமது சமூக மற்றும் சூழல் நல்வாழ்வுக்கு அர்த்தமுள்ள பங்களிப்பையும் வழங்குகிறது.

ஒவ்வொரு தொழில்முயற்சியாளரும், ஒவ்வொரு விவசாயியும், ஒவ்வொரு சிறு வணிக உரிமையாளரும் முன்னேறுவதற்கான வாய்ப்பு இருக்க வேண்டும். மறுபுறம், நிலைத்தன்மையானது, சூழலைப் பாதுகாப்பதற்கு அப்பால் வளங்களின் வினைத்திறன், பொறுப்பான சமூக நடைமுறைகள், உயர் நெறிமுறை தரநிலைகள் மற்றும் நல்லாட்சியை உள்ளடக்கியது. எங்கள் வணிகங்கள் நீண்ட காலக் கண்ணோட்டத்துடன் செயல்பட வேண்டும், அவற்றினால் ஏற்படும் சூழல் தாக்கத்தைக் குறைத்து, ஒட்டுமொத்த நேர்மறையான தாக்கத்தை அதிகப்படுத்தி, எதிர்கால சந்ததியினருக்கு சுபீட்சமானதொரு சூழலை விட்டுச் செல்ல வேண்டும்.

தொழில்முயற்சிகள் மற்றும் தொழில்முயற்சியாளர்கள் போலவே, அவர்களின் வாடிக்கையாளர்களும் சமூகமும் உள்ளடக்கிய மற்றும் நிலையான வணிகங்களிலிருந்து பயனடைய வேண்டும். எனவே, இந்த மூலோபாயம் வெறுமனே ஒரு ஆவணம் அல்ல. இது செயற்படுத்தலுக்கான அழைப்பு மற்றும் ஒரு தேசமாக நிலைத்தன்மை மற்றும் அனைவரையும் உள்ளடக்குதலுக்கான உறுதிமொழியாகும். வணிகர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். உங்கள் முக்கிய பெறுமானங்களில் நிலைத்தன்மை மற்றும் உள்ளடக்கிய தன்மையை ஒருங்கிணைக்க வேண்டும். உங்களில் பலர் ஏற்கனவே உங்கள் செயற்பாடுகளில் நிலைத்தன்மையை அடைவதற்கான பயணத்தை மேற்கொண்டிருப்பதை நான் அறிவேன்.

நிலையான மற்றும் உள்ளடக்கிய வணிக நடைமுறைகளை ஊக்குவிக்கும், அதிகாரத்துவ தடைகளை நீக்கி, செழிப்பான வணிகச் சூழலை வளர்க்கும் ஒத்துழைத்து செயற்படும் கொள்கைகள் அரச நிறுவனங்களுக்குத் தேவை. விழிப்புணர்வு ஏற்படுத்துதல், ஆலோசனை மற்றும் சமூகப் பங்கேற்பு ஆகியவற்றில் சிவில் சமூக அமைப்புக்கள் முக்கியப் பங்காற்ற வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். நிலைத்தன்மை அனைவருக்கும் பயனளிக்கிறது என்பதை உறுதிப்படுத்தி நீங்கள் வணிகங்களுக்கும் சமூகங்களுக்கும் இடையிலான பாலமாக மாற வேண்டும். நிலைத்தன்மைக்கான புத்தாக்கங்களை வளர்ப்பதற்கு கைத்தொழில்-நிபுணத்துவ ஒத்துழைப்பு மிக முக்கியமானதாக இருக்கும்.

எமது பலத்தைப் பயன்படுத்தி, செழிப்பும் நிலைத்தன்மையும் கைகோர்த்துச் செல்லும் இலங்கையைக் கட்டியெழுப்புவோம். அர்ப்பணிப்பு, ஒத்துழைப்பு மற்றும் தொடர்ந்தேர்ச்சையான செயல் ஆகியவற்றின் மூலம், இந்த திட்டத்தை யதார்த்தமாக மாற்ற முடியும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

அமைச்சர்களான கலாநிதி ரமேஷ் பத்திரன, மஹிந்த அமரவீர, இராஜதந்திர பிரதிநிதிகள், பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க, நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன உள்ளிட்ட செயலாளர்கள், சிரேஷ்ட அதிகாரிகள் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு