அபிவிருத்தி இலக்குகளை பூர்த்தி செய்யும் நோக்கத்திற்காக அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு கொடுப்பனவு... - பிரதமர் தினேஷ் குணவர்தன.

பாடசாலையை விட்டு வெளியேறும் மாணவர்களை தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொழிற்பயிற்சிகளுக்கு வழிநடத்துவதற்கு பிரதேச செயலாளர்களுக்கு அதிகாரம்...

இன்று (2024.03.12) புத்தளம், முந்தலம் பிரதேச செயலகத்தின் புதிய கட்டிடத்தை பொதுமக்களிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனை தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர்-

மக்களின் பிரச்சினைகளுக்கு அரசாங்கமும் அரச திணைக்களங்களும் வழங்க வேண்டிய சேவைகளுக்கு பிரதேச செயலகங்களே முதலிடம் வகிக்க வேண்டும்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க புதிதாக பிரகடனப்படுத்தியுள்ள அபிவிருத்திச் செயற்பாட்டின் ஒரு முக்கிய பங்கை நீங்கள் செய்கிறீர்கள். பிரதேச அபிவிருத்திக்கும், மாவட்ட அபிவிருத்திக்கும் அந்தத் திட்டங்களை எமது ஆளுனர்களுடன் கிராமத்துக்கு கொண்டு செல்ல வேண்டியது பிரதேச செயலாளர்களின் பொறுப்பாகும்.

இந்த விடயம் பிரதேச செயலாளர்களின் விரல் நுனியில் இருக்க வேண்டும். புத்தகங்களை புரட்டிக்கொண்டிருக்க முடியாது. இவ்வாறான நிலையில் நாளை முதல் இந்த அலுவலகம் புதுப்பலத்துடன் சேவையை மேற்கொள்ள வேண்டும். சிங்கள, தமிழ், முஸ்லிம் ஆகிய அனைத்து மக்களின் எதிர்பார்ப்புகளும் நிறைவேற்றப்பட வேண்டும். இந்த சமுதாயத்தில் வருமானம் உள்ளவர்கள் மற்றும் வருமானம் இல்லாதவர்கள் என இரு பிரிவினர் உள்ளனர். அனைவரின் எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்ற வேண்டும். வருமானம் உள்ளவர்கள் தங்கள் வருமானத்தை மேம்படுத்தவும், வருமானம் குறைந்த மக்களை வலுவூட்டவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசின் வரவு செலுவுத் திட்ட ஆவணத்தில் அறிவிக்கப்பட்டுள்ள படி தனியார் துறை வளர்ச்சி அடைய வேண்டும். வளங்கள் பெருக வேண்டும். இப்படி வளங்கள் பெருக வேண்டுமானால், அதிக முதலீடுகளை ஆதரிக்க வேண்டும்.

ஜனாதிபதி பதவியேற்று அரசாங்கத்தை பொறுப்பேற்ற போது நாட்டில் நிலவிய நிலைமையை நீங்கள் முன்னர் அனைவருக்கும் நினைவூட்டியுள்ளீர்கள். அந்த நிலை மீண்டும் ஏற்படக்கூடாது என்று நாம் பிரார்த்திப்போம். மீண்டும் அவ்வாறான நிலை வர நாங்கள் விரும்பவில்லை. மீண்டும் இவ்வாறானதொரு நிலைமைக்கு நாட்டைக் கொண்டு வரக்கூடாது என்பதற்காக, அந்தக் காலப்பகுதியில் எதிர்கொள்ள வேண்டிய மிகக் கடினமான சேவைகள் மற்றும் வசதிகள் மற்றும் அத்தியாவசிய வசதிகளுக்கு விரைவான நிவாரணம் வழங்கினோம்.

பிரச்சினைகள் முடிந்துவிடவில்லை. பொருளாதாரம் பிரச்சினைகளை தீர்க்கும் புதிய முயற்சிகளை நோக்கிச் செல்ல வேண்டும். அந்த பயணத்தை அரச தலைவராலோ, பாராளுமன்றத்தினாலோ, பிரதமராலோ மட்டும் மேற்கொள்ள முடியாது. இது முழு நாடும் இணைந்து எடுக்க வேண்டிய நடவடிக்கை.

நாடு புத்துயிர் பெற, புதிய நம்பிக்கைகளுடன் பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டும். வெளிநாட்டு முதலீடுகளும், உள்ளூர் தொழிலதிபர்களும் இதில் இணைந்து புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டும். இதற்கு பிரதேச செயலாளர்கள் ஆதரவு வழங்க வேண்டும்.

அரசாங்க ஊழியர்களுக்கான சில கொடுப்பனவுகளை அதிகரிக்கக்கூடிய வகையில் வருமானத்தை அதிகரிக்க முடிந்தது. இலங்கையில் ஆறு லட்சம் ஓய்வூதியதாரர்கள் உள்ளனர். அவர்களின் ஓய்வூதியத்தையும் அதிகரித்து வழங்கும் நிலைக்கு இன்று நாடு கொண்டுவரப்பட்டுள்ளது. ஓய்வூதிய நிதியத்துக்கு 18 பில்லியன் பற்றாக்குறை இருந்தது. அவை அனைத்தையும் நாம் செலுத்தினோம். அது இப்போது பற்றாக்குறை இல்லாமல் வலுவாக செயற்படுகிறது.

பொதுமக்களுக்கான உங்கள் கடமையை நிறைவேற்றும் பொறுப்பும் கடமையும் உங்களுக்கு இருக்கிறது. அதனை நிறைவேற்றுவதற்கு இந்தப் பிரதேச செயலகம் செயற்படும் என நான் நம்புகிறேன்.

நேற்று ஜனாதிபதியுடன் கலந்துரையாடி நாங்கள் ஒரு தீர்மானத்தை எடுத்தோம். அது ஒவ்வொரு பிரதேச செயலகத்திலும், மாவட்ட செயலகத்திலும் உள்ள துணை உத்தியோகத்தர்களுக்கான கொடுப்பனவுகளை அதிகரிப்பதாகும். அபிவிருத்தி இலக்குகளை நிறைவேற்றுவதற்காக இவ்வாறு தீர்மானிக்கப்பட்டது. இதன்படி, அபிவிருத்தி இலக்குகளை பூர்த்தி செய்ய உத்தியோகத்தர்களுக்கு புதிய கொடுப்பனவு வழங்கப்படும். மாவட்ட செயலாளர், பிரதேச செயலாளர்களின் இலக்குகளை நோக்கி செயற்படுவதன் மூலம் பயனுள்ள உற்பத்திகள் மற்றும் சேவைகளை வழங்குவது அவசியம்.

ஒவ்வொரு கிராம உத்தியோகத்தர் பிரிவிலும் உள்ள வெற்றிடங்களுக்கு அடுத்த மாத இறுதிக்குள் புதிய கிராம உத்தியோகத்தர் நியமிக்கப்பட வேண்டும். குறைபாடு இருப்பின் அதனை பூர்த்தி செய்து பிரதேச செயலக வலையமைப்பை பலப்படுத்தலாம்.

பாடசாலையை விட்டு வெளியேறும் பிள்ளைகள் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொழிற்கல்வி அறிவை வளர்த்துக் கொள்ள உடனடியாக அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. அரசாங்க திணைக்களங்களாக இருக்கலாம், பிரதேச சபைகள் அல்லது உள்ளூராட்சி மன்றங்கள் என அனைத்தும் இந்த பணியில் ஈடுபடலாம். தேவையான நிதி வசதிகள் மற்றும் தேவையான அறிவைக் கொண்ட தொழில் வல்லுநர்களைப் பெற்று எங்கள் பிள்ளைகளுக்கு விசேட அறிவை வழங்குவதற்கான இலக்குகளை பூர்த்தி செய்யுங்கள். இன்னும் இரண்டு மாதங்களில் புதிய சமூகம், புதிய அறிவாற்றல் கொண்ட சமூகத்தில் நுழைவதற்கான சாத்தியக்கூறுகளை ஏற்படுத்தும் கல்வியின் மற்றுமொரு பாதையில் பிரவேசிப்பதற்கு பிரதேச செயலாளர்கள் உதவுவார்கள் என நான் நினைக்கிறேன்.

வடமேல் மாகாண ஆளுநர் லக்ஷ்மன் யாப்பா அபேகுணவர்தன, இராஜாங்க அமைச்சர்களான அசோக பிரியந்த, அருந்திக பெர்னாண்டோ, புத்தளம் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் சிந்தக அமல் மாயாதுன்ன, பாராளுமன்ற உறுப்பினர்களான யதாமினி குணவர்தன, ஜகத் பிரியங்கர, அலி சப்ரி ரஹீம், பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன உள்ளிட்ட அரச அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு