அனுதாபச் செய்தி

எமது அரசாங்கத்தின் செயற்திறமான ஒரு மக்கள் பிரதிநிதியான புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சருமான சனத் நிஷாந்த அவர்களின் திடீர் மறைவு ஒரு பேரிழப்பாகும்.

சுமார் மூன்று தசாப்தங்களாக நடைமுறை அரசியலில் அவர் ஆற்றிய பணிகள் முற்போக்கு அரசியல் முகாமில் ஒரு பெரும் இடைவெளியை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூராட்சி அமைப்பில் இருந்து வடமேல் மாகாண அமைச்சராகப் பணியாற்றி, பாராளுமன்றத்திற்கு பிரவேசித்த அவர், மிகவும் பொறுப்பு வாய்ந்த ஒரு அமைச்சின் இராஜாங்க அமைச்சராக பொறுப்பு வகித்து அதன் விடயப் பரப்பை நன்கு விளங்கியவராக செயற்பட்டார்.
மக்களின் முக்கியத் தேவையாக இருந்த நீர் தொடர்பான பணிகளை மேற்கொள்ளும் போது அவர் எப்போதும் என்னுடன் மேற்கொண்ட கலந்துரையாடல்களை நான் மரியாதையுடன் நினைவுகூர்கிறேன்.

புத்தளம் மாவட்ட மக்களுடன் நெருங்கிப் பணியாற்றி கிராமம் கிராமமாகச் சென்று பல நற்பணிகளை முன்னெடுத்ததுடன், முதியோர் மற்றும் இளம் தலைமுறையினருக்கான வாழ்க்கைப் பயணத்தில் பல முக்கிய தடங்களை விட்டுச் சென்றுள்ளார்.

சவால்களுக்கு சவாலாக இருந்த அவர், தனது முகாமில் வெற்றி தோல்வியை எதிர்கொண்டு நிபந்தனையின்றி முன்னின்றதுடன், அந்த முகாமுக்கு பல வெற்றிகளை ஈட்டித் தந்துள்ளார். அந்த இலட்சியத்திற்காக தன் வாழ்வின் தனிப்பட்ட விடயங்களைக் கூட அர்ப்பணித்து, குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு உறுதியுடனும் அர்ப்பணிப்புடனும் பணியாற்றியமையை நான் நினைவுகூர்கிறேன்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் செயற்பாட்டாளராக இருந்த அவர் வெற்றிகளைப் போன்று தோல்விகளுக்கு மத்தியிலும் கட்சிக்கு பெரும் பலத்தை கொண்டு வந்தார்.

அவரது மறைவால் வாடும் அவரது அன்பு மனைவி மற்றும் பிள்ளைகள், உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவுக்கு மோட்சம் கிடைக்க எனது பிரார்த்தனைகள்.

தினேஷ் குணவர்தன (பா.உ)
பிரதமர்
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு
2024 ஜனவரி 27